16

      16. எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் தாய் தந்தையுண்டு. உயிரினத்துள் அறிவாற்றலால் உயரும் உயிரினத்துள்ள மாவும் புள்ளுமாகியவற்றுள் தாய்மைப்பண்பும் தந்தைமை நிலையும் விளங்கித் தோன்றுவது போலப் பிறவற்றுள் இல்லை. இந் நாளில் உயிரியல் விஞ்ஞானிகள் கண்டு பெரிய பெரிய நூல்வடிவில் உயிர்களின் தோற்றத்தை நிழற்படங்களுடன் வெளியிட்டுள்ளனர். அவற்றைக் கருத்தோடு படித்துணர்வார்க்கு மேற் கூறிய உண்மை மெய்யாவது காணலாம். அம் மாவும் புள்ளுமாகிய உயிர்களிடத்தே காணப்படும் தாய்மை தந்தைமை ஆகிய இருவகை இயல்பும், மக்களிடத்தில் காணப்படுவதுபோல ஒரளவு இருப்பினும், மக்களின் தாய்மை உணர்வினும் தந்தைமைப் பான்மையினும், மிக்க வேறுபாடும் மாறுபாடும் காணப்படுகின்றன. ஆயினும் தங்களது அன்மை புலப்படுத்தும் வகையில் மக்களுக்குள்ள வாய்ப்பு, - மனத்தெழும் அன்பையும் ஆதரவையும் சொற்களால் வெளிப்படுத்தும் திறம் -ஏனைய மாக்களுக்கும் அவற்றிற்குக் கீழுள்ள உயிர்களுக்கும் இல்லாமையின் அவற்றின் அன்பை அளந்தறியும் சிறப்பு நமக்கு இல்லை. பெற்ற மக்களுக்காக உயிர் கொடுக்கும் தாயும் உடலை அரிந்தளிக்கும் அன்னையும் மக்களிடத்தில் மாண்புறக் காண்கின்றோம். மருத்துவ வெளியீடுகள் இவ்வியல்பை அவ்வப்போது தெரிவிக்க அறிகின்றோம். உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புக்கள் சிலவற்றில் கணவன் மனைவியர் கருத்து மாறுபட்டுப் பற்றறப் பிரியுங்கால் பிறந்த குழந்தைகளை யாவரிடம் ஒப்படைப்பது என்பது தெளிவாக்கும் திறம் நுணுகியுணர்ந்து உரைக்கப்படும் கருத்துக்களாலும் அறிகின்றோம். மக்களின் தாயன்பும் தந்தைமைப் பான்மையும் ஒருதிறமாக இல்லை. யாவர்க்கும் எவ்வுயிர்க்கும் தாயும் தந்தையுமாய் அன்பு செய்வன் ஆண்டவன் ஒருவனே; அவனே அம்மையப்பன்; “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என உரைக்கின்றது திருக்களிற்றுப்படியார் என்ற அழகிய நூல். நூன்முகத்தாலும் உலகியலறிவாலும் நுனித்து நோக்கிய அடிகளார் வியந்து பாடுகின்றார்.

2186.

     மின்போலுஞ் செஞ்சடை வித்தக
          னேஓளி மேவியசெம்
     பொன்போலு மேனிஎம் புண்ணிய
          னேஎனைப் போற்றிப்பெற்ற
     தன்போலுந் தாய்தந்தை ஆயிரம்
          பேரிருந் தாலும்அந்தோ
     நின்போலும் அன்புடை யார்எனக்
          கார்இந்த நீணிலத்தே.

உரை:

     செஞ்சடை வித்தகனே, புண்ணியனே, என்னை விரும்பிப் பெற்ற தாயும் தந்தையும் போல ஆயிரம்பேர் இருந்தாலும் நின்போல் என்பால் அன்புடையவர் இந்நீண்ட வுலகில் யாவர் உளர்?

     சிவன் மேனி செம்பொன் போல்வது என்றும், செஞ்சடை மின்போல் ஒளிர்வது என்றும் அறிந்தோர் கூறுவர். அதனால், “மின்போலும் செஞ்சடைவித்தகனே” என்றும், “செம்பொன்போலும் மேனி எம் புண்ணியனே” என்றும் கூறுகின்றார். குதிரை யிவர்ந்து கயிலை சென்று கண்ட சேரமான் பெருமாளும் “பொன்வண்ணம் எவ்வண்ணம் மேனி” என்றும், “பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை” எனவும் உரைத்துள்ளார். துறவோரும் அறவோரும் சடையுடையவராவது வேற்றுப்பொருளைத் தாங்குதற்கன்று; சிவபெருமானோ சடை கொண்டிலங்குவது திங்களும் கங்கையும் தாங்குதற்காம்; கங்கை நீருருவில் இருப்பினும் ஒரு துளியும் அப்பெருமான் ஆணையின்றிக் கீழ் வீழாவாறு அடக்கித் தாங்கும் சீர்த்தியுடைமை பற்றி, அதனை வியந்து, “செஞ்சடை வித்தகனே” எனச் சிறப்பிக்கின்றார். பொன்னுக்கு ஒளியுண்டேனும் மணியினம்போல விரிந்தொளிறும் வீறுடையதன்று; இறைவன் மேனி பொன்னிறமாயினும் மணியினத்தின் மிக்க ஒளியுடைய பொன்போல்வது என்றற்கு ஒளிமேவிய செம்பொன்போலும் எனப் புகழ்கின்றார். பொன் மிகுதியாற் பொலிகின்றாரைப் புண்ணியர் என உலகு வியப்பது கொண்டு “பொன்போலும் மேனிஎம் புண்ணியனே” எனப் புகல்கின்றார். பல பிள்ளைகளைப் பெற்றும் வளர்த்தும், செயல் வருத்தமுற்று வெறுப்படைந்தவருக்குப் புதிது பிறந்து பெருகிப் பொங்கும் அன்பு காண்பாருக்கு அவர்கள் அப்பிள்ளையைப் பெறுவதற்குப் பெருவிருப்பும் கொண்டவர் போலும் என்ற எண்ணம் உண்டாகும். அன்றியும் அவர்கள் அக் குழவிபால் செலுத்தும் அன்பு வேறு. அவருக்கு அக் குழவிமேலுள்ள பற்றினை மிகுதியாகப் புலப்படுத்தும் இத்தகைய பேரன்புடைய தாய்தந்தையர் போலப் பிறரிடத்து அன்பு செலுத்துகின்றவர் உலகில் உண்டு என்றாலும், அவர்களிடத்தில் தன் பிள்ளை பிறர் பிள்ளை என்கின்ற உணர்ச்சி வேறுபாடு சிறிதேனும் இல்லாமல் போகாது. அது மக்கள் உடம்பெடுத்தமையால் தோன்றிய சிறப்பியல்பு. ஆனால் அது நிலை பெறுவதுன்று. பருவுடம்பு (பூத உடம்பு) சூக்குமவுடம்பு (சூக்குமம்) கருவுடம்பு (மானதம்) நுண்ணுடம்பு (கலை உடம்பு) ஆகிய பல உடம்புகளைத் தந்து அவற்றை இயக்கும் கருவி கரணங்களைத் தந்து உலகில் பிறப்பித்து அறிவு வளர்க்கும் வகையில் அம்மையப்பனாகிய இறைவன் ஒரு சிறு பேற்றையும் காண்பதில்லை; அதனால் மக்களுடம்பில் தாய் தந்தையரைப் போல அன்பு செய்யும் நன்மக்கள் பல்லாயிரம் பேர் இருப்பினும், அவர்கள் இறைவனுக்கு நிகராகார் என்ற கருத்தை வற்புறுத்தும் வடலூர் வள்ளல் “போற்றிப் பெற்றவர் போல தாய் தந்தை ஆயிரம்பேர் இருந்தாலும், அந்தோ! நின்போலும் அன்புடையார் எனக்கார் இந்த நீள் நிலத்தே” என்று கேட்கின்றார். இதனால் உலகுக்கு அம்மையப்பனாகிய இறைவன் உலக மக்களுக்குப் பெரிய தந்தையும், தாயும் ஆவன் என்பது வற்புறுத்தியவாராயிற்று.

     (16)