17
17. உடையவரும் இல்லாரும் கலந்த சமுதாயத்தில் ஆள்வாரும் ஆளப்படுவாரும்
என இருதிறத்தர் உண்டு. உடையவர் தமது உடைமையால் அன்பும் அருளும் செய்து இல்லாரை ஆதரித்தணைப்பர்.
அஃது ஆளுதலாகும்; அணைக்கப்படுவர் ஆளப்படுபவராவர். ஆளப்பட்டோர்க்குக் குறையும் நோயுமுண்டாயின்
அதனை ஆள்வோர்க்கு உரைப்பது முறையாகும். உரைப்பது ஏன் எனில், பேசும் தன்மையுடைய மக்கட்குப்
பிறப்பியல்பு. அவர்கள் அருகிருப்பின் நேரில் உரைப்பதும், சேய்மையிலிருப்பின் நேரிற் சென்று
சொல்வதும், நெடுஞ்சேணிருப்பின் ஓலையெழுதித் தெரிவித்திலும் உண்டு. இச் செயல் மூன்றும் நெஞ்சு
கொள்ளாத அளவு துன்பமிகும் போது தான் நிகழும் என நக்கீரர் களவியலுரையில் உரைக்கின்றார்.
அன்றியும் நோயும் குறையுமுண்டாயின் அதனைப் பொறுத்தாற்றும் பண்பே நன்மருந்து என இக்கால
மருத்துவர் உரைக்கின்றார்கள். நோயை எதிர்க்கும் ஆற்றல் தான் நோயின்றியியலும் வாழ்க்கைக்கு
வேண்டுவது, உடற் கூறுகளின் நோயை எதிர்க்கும் ஆற்றலைப் பெருக்குவது மருத்துவத்தின் செயலாதல் வேண்டும்
என்பர். இதனைக் கூடியவரை பேச்சுக்களால் குறைத்தல் கூடாது; நெடிது பேசவிடல் அவ்வாற்றலைக் குறைத்து
நோய்க்கு உடலை இடம்படுக்கும் என மருத்துவப் புலவர்களான லோகன்கிளண்டெனிங், எம். எச்.
பிராங்கு முதலியோர் எண்ணி, நோயுற்றோரையும் குறைவுற்றோரையும் தனிப்பவிடுவது தக்கது எனச்
சாற்றுகின்றார்கள்; அது நமது பொது அறிவுக்குப் பொருத்தமாகவே தோன்றுகிறது. தானுற்ற நோயைப்
பிறர்க்கு எவ்வழியாலேனும் உரைப்பது நம்மவர் இயல்பாதலின், அடிகளார் தம் துயரை வெளியிட
விரும்புகிறார். வெளியிடுங்கால், கேட்போர்க்கும் தமக்குத் தம்மையுடையவர்க்கும் உள்ள தொடர்பை
எண்ணுவது நன்று. கேட்பவர் நோய்நீக்கும் ஆற்றல் இல்லாதவராயின் பயனின்று; அவர்க்கு உரைப்பது
மனச் சோர்வை மிகுவிக்கும்; தம்மை ஆளுடையார்க்கும் தம் துயரைக் கேட்பவர்க்கும் இடையே நல்லுறவும்
தொடர்பும் இல்லையாயின், அது வாயிலாக நோய் பெருகுதற்கான இடமுண்டாகும். ஆளுடையார் உள்ளத்தில்
இவன் நமக்கு ஆகாதவன் பால் தொடர்புடையன் என்ற எண்ணத்தைப் பிறப்பித்து அவருள்ளத்தில்
ஆழவமர்ந்த நயப்பாடு குறையும்; அருள் நிலை மாறும். இதனை நன்கு எண்ணிய அடிகளார் தான் திருவருட்கு
மாறாய அத்தகைய செயலைச் செய்ததில்லை எனத் தெரிவிக்கின்றார்.
2187. அன்பாலென் தன்னைஇங் காளுடை
யாய்இவ் வடியவனேன்
நின்பாலென் துன்ப நெறிப்பால்
அகற்றென்று நின்றதல்லால்
துன்பால் இடரைப் பிறர்பால்
அடுத்தொன்று சொன்னதுண்டோ
என்பால் இரங்கிலை என்பாற்
கடல்பிள்ளைக் கீந்தவனே.
உரை: இங்கே அன்பால் என்னை ஆளுதல் உடையவனே அடியவனாகிய யான் என் துன்பத்தை அகற்றென்று நின்பால் இரந்து நின்றதல்லால் பிறரை அடுத்து ஒன்று சொன்னதுண்டோ? இல்லையே; அங்ஙனமிருக்க நீ என்பால் இரங்குகின்றாய் இல்லையே. எ.று.
இங்கு - இவ்வுலகில், இப்பிறப்பில், ஆளுதற்குக் காரணம் அன்பாதலால் “அன்பால் இங்கு என்னை ஆளுடையாய்” என்று கூறுகின்றார். ஆள்-ஆதரித்து அணைத்தல். அடியவன் - திருவடியை நெஞ்சிற் கொண்டு நினைந்தவண்ணம் இருப்பவர். ஒருவனுடைய அறிவு செயல்களை நெறிப்படுத்துவது ஊழ் என்னும் பால் என்றும் உரைக்கப்படும். அது ஆகூழ்க் காலத்து நல்லறிவும் நற்செயலுமாம்; போகூழ்க் காலத்து நன்றல்லாத அறிவு செயல்களே உளவாம் என்பர். இன்பத்தை வேண்டுதலும் துன்பத்தை விலக்குதலும் உயிர்களின் செயல்வகை. ஒருவர் வேண்டாவென விலக்கமுயல்வதும் துணை வேண்டுவதும் துன்பமாதலால், “துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றேன்” என முறையிடுகின்றார். துன்பத்திற்செலுத்தும் தீயூழைத் “துன்பநெறிப்பால்” எனச் சுட்டுகின்றார். இறைவனை நோக்கப் பிறர் அனைவரும் அவன் ஆணைவழி நிற்பதல்லது தனித்து நின்று வினைதீர்க்கும் வன்மையுடையரல்லராதலின், அவரை அடுத்து நின்று இரந்து கேட்கும் குற்றம் செய்தேனில்லை என்பார், “பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ” எனக் கேட்கின்றார். நினைக்கும் நெஞ்சிலும் சொல்லும் சொல்லிலும் இறையருள் வீற்றிருத்தல் பற்றிச் “சொன்ன துண்டோ” என வினாவுகிறார். துன்பம் போந்து சுடச்சுடத் தாக்குங்கால், தாக்கப் பட்டாரது நல்லறிவு கூர்மை மழுங்கி அடுப்பவரை வல்லார் மாட்டார் எனத் தெரிந்துணர மாட்டாமல் தடுமாறுதல் இயல்பாதல் பற்றி, “துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்து ஒன்று சொன்னதுண்டோ” எனச் சொல்லுகின்றார். இவ்வாற்றால் இரங்கியருளுதற்குரிய நீ இரங்காமை அறமன்று என்பார்போல், “என்பால் இரங்கிலை என்“ என முறையிடுகின்றார். பிள்ளை யழுதது கொண்டு அதன் சிறுமையையும் பாற்கடலின் பெருமையையும் எண்ணாது பிள்ளைக்குப் பாற்கட லீந்தது கொடைமடம்; “பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்” என்று திருப்பல்லாண்டு கூறுகிறது. கொடைமட வள்ளலாகிய நீ இரங்கியருளாமை கூடாதென இதனால் வேண்டுவாராயிற்று. (17)
|