7

7. தன்னுறுநிலை கூறல்

    உலகியல் வாழ்வில் பிறர் ஒருவருடைய அருளையோ பொருளையோ நாடுபவர் அவரை அடைந்து தாம் வேண்டுவதன் இன்றியமையாமையை எடுத்துரைப்பர். அங்ஙனம் உரைக்குமிடத்தும், தமது குறையை உரைக்குமுன் கொடுப்போரது உயர்வையும் கொடைத்தன்மையையும் கொடுக்கப்படுவதன் சிறப்பையும் விரித்துரைப்பர். பின்பே தமது குறையை விரிந்தும் சிறப்பித்தும் மிகுத்துரைப்பர். இறைவன்பால் முறையிடுபவர் திறம் வேறு வேண்டுவதும் வேண்டாமையும் எடுத்துரைக்காமலே இறைவன் நன்கு அறிவனாதலால் அவன்பால் அவற்றையுரைத்தல் வேண்டாவாம். ஆயினும், பிறர் துணைகொண்டு வாழ்வதே உலகியல் வாழ்வாகக் கொண்டமையால் மக்கள் தமக்கு வேண்டியதன் உயர்வையும் ஆக்கத்தையும், வேண்டாததன் இழிவையும் கேட்டையும் விளங்கக் கூறுவது இயல்பு. அவ்வியல்பால் இறைவன் திருவருளை வேண்டுமிடத்து இவ்வாறு கூறுவர். இறைவனிடம் அது கூறுவது வேண்டாச் செயலேயெனினும் கூறுமிடத்து அறிந்தோர்பால் ஒரு வேறுபாடு உண்டு. தம் மனத்திலும் மொழியிலும் செயலிலும் உள்ள குறைகளை எடுத்து மொழிவர். மன முதலிய கருவிகளின் குறைபாடுகளே எல்லாக் குற்றங்கட்கும் தீவினைகட்கும் காரணம்; ஆதலால் அவற்றால் உண்டாகும் குற்றங்களை விரித்துரைப்பர். தம்பால் உள்ள கள்ளங்களைத் தாமே சிந்தனைக்கண் கொண்டு ஆராய்ந்து ஒழிவு மறைவின்றி உரைக்கும்போது உள்ளம் உரை செயல் ஆகிய மூன்றும் தூய்மை யடைகின்றன. அந்நிலையில் இறைவன் திருவருள் நலத்தை நினைந்து வேண்டற்குத் தகுதியுளதாகிறது; அதனைப் பெறற்கு நல்ல வாய்ப்புமுண்டாகிறது. இவ்வாறு தம்பாற்கடிந்து தம்மையறியாமற் கிடக்கின்ற குற்றங்களையும் குறைபாடுகளையும் உரைப்பது தன்னுறு நிலையாகும். அதனை வடலூரடிகள் பல பாட்டுகளில் விரிந்து விளம்புகின்றார்.                                                

       18. ஒருவர்க்கு ஒரு குறையுண்டாயின் அதனை அவர் தன்னைப் போல்வாரிடம் சொல்லி நீக்கிக் கொள்ள முயல்வர்; அவரும் அதனைச் செவிசாய்த்துக் கேட்டுத் தீர்வாவன தேர்ந்து உரைப்பர். இனமல்லாதார் அதனைக் கேளார்; கேட்பினும் அதற்குத் தீர்வுகண்டுரைக்கும் திறமும் இலராவர். இது மக்களினத்து நிலை. மக்கட்குண்டான குறையை மக்களின் மேம்பட்ட இறைவனிடம் முறையிடுவது நன்றன்று; தன்போல் மக்களை அடுப்பதுதான் முறையெனச் சிலர் கூறுகின்றனர். அவர்கட்கு வடலூர் வள்ளல் விடை கூறுகின்றார்.

2188.

     என்போன் மனிதரை ஏன்அடுப்
          பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
     பொன்போல் விளங்கும் புரிசடை
          யான்றனைப் போயடுத்தேன்
     துன்போர் அணுவும் பொறேன்இனி
          யான்என்று சொல்லிவந்தேன்
     முன்போல் பராமுகஞ் செய்யேல்
          அருளுக முக்கணனே.

உரை:

     முக் கண்களையுடைய முதல்வனே, என்போல் மனிதரையடுத்து என் குறை தீர்க்க என் யான் ஏன் வேண்டுவேன்; எனக்கு எய்ப்பில் வைப்பாகவுள்ள புரிசடைப் பெருமானை யான் அடுத்திருக்கின்றேன்; இனி துன்பம் ஒர் அணுவளவும் யான் பெறமாட்டேன் என்று உலக மக்கட்குச் சொல்லி வந்துள்ளேன்; ஆகவே, முன்னெல்லாம் பாராமுகமாய் இருந்தது போல இராமல் அருள் செய்க. எ.று.

     மக்களைப் போலின்றி நெற்றியில் உள்ள கண்ணோடு மூன்றாகிய திருக் கண்களையுடைய சிவபெருமானே; எனக்கு நீ எய்ப்பில் வைப்பாக இருக்கின்றாய்; ஆதலால் நான் பிறரது அருள்வேண்டும் குறையுடையேனல்லேன் என்று குறிப்புத் தோன்ற “எனக்கு எய்ப்பில் வைப்பாம் புரிசடையான்” எனப் புகல்கின்றார். எய்ப்பில் வைப்பு - தளர்ச்சியுற்ற காலத்துப் பயன் கொள்ளற்கென்று வைத்த நிதி. மனிதர் அனைவரும் என்போல் குறையுடையவர்; பிறர் அருள்பெற்று குறைநீக்கிக் கொள்ளும் இயல்பினர்; தாம் வீழ்வார் பிறர்க்கு ஊன்று கோலாகார் என்பதுபோல மக்களாவார் எனக்குத் துணையருளும் மாண்பிலராதலின் அவர்களை அடுப்பது சீரிதன்று என்பார், “என்போல் மனிதரை ஏன் அடுப்பேன்” என வுரைக்கின்றார். அடுப்பது பயனில் செயல் என்றற்கு “ஏன் அடுப்பேன்” என்ற தொடர் ஒலிக்கிறது. சிவபெருமான் திருமுடிமேல் விளங்கும் புரிசடை பொன்னிறத்த தாகலின் “பொன்போல் விளங்கும் புரிசடை” எனப் புகல்கின்றார். எய்ப்பில் வைப்பாம் புரிசடையான் பொன் போல் விளங்கும் புரிசடையான் என இயைக்க. புரிசடையான் எனக்கு எய்ப்பில் வைப்பாதலால் துன்பம் பெறுதற்கு சிறிதும் இடமில்லை என விளக்குவாராய், “துன்பு ஒர் அணுவும் பெறேன் இனி யான்” என் உரைக்கின்றார். எய்ப்பில் வைப்பாம் புரிசடையானை யான் அடுத்துள்ளேனாதலால், எனக்கு இனித் துன்பம் அணுத்துணையும் எய்தாது என்றும் சொல்லக் கருதிய அடிகளார், ஒருகால் துன்பம் என்னைப் பற்றவரினும் யான் அதனை ஏற்றுப் பெறும் நிலையினனல்லேன் என்பது புலப்பட, “இனியான் துன்பு ஒர் அணுவும் பெறேன்” எனக் கூறுகின்றார். இவ்வாறு தாம் உலகவர் அறியச் சொல்லி வந்ததாக அடிகளார் அறிவிக்கின்றார்; எனக்காக என்பது விடுத்து, உலகவர்க்கு உண்மை விளக்குதற் பொருட்டு நீ விரைந்து போந்து அருளுதல் வேண்டும் என்றற்கு.

     இவ்வாறு கூறுவதற்கும் காரணம் உண்டு என்று இயம்புகிறார். முன்பெல்லாம் என் குறையைச் சொல்லி யான் இரந்து நின்றதுண்டு; அப்போது நீ பாராமுகம் செய்து புறக்கணித்தனை; அவ்வாறு இப்போதும் செய்தலாகாது; செய்யின் என்னுரை பொய்யாம் என்ற கருத்துப்பட, “சொல்லி வந்தேன்” என்றும், மூன்று கண்ணுடையனாதலின் பார்த்திலேன் என்றல் பொருத்தாது, “பராமுகம் செய்யேல், அருளுக” எனவும் வேண்டுகிறார். பாராகமுகம், பராமுகம் என வந்தது.

     (18)