19
19. வாழ்வில் வறுமையும் சிறுமையும் வந்து வருத்துகிறபோது இறைவனை வேண்டிப் பயனில்லை; பொன்னும்
பொருளுமுடையாரை நாடிச் சென்று அவர் அருள் பெற்று வாழ்வது தக்கது என உலகவர் கூறக் கேட்கிறேன்.
உலகும் வாழ்வும் அருளியவன் இறைவன் என்பது தெளியாது, உலக வாழ்வுக்குரிய பொன்னும் பொருளும்
போகமும் அருளுபவன் இறைவன் என்பது எண்ணாது உரைக்கும் அவர்களுடைய புன்மைக்கு நான் செவிசாய்க்கவில்லை.
உலகும் உடலும் கருவி கரணங்களும் படைத்தளித்து என்னைத் தனக்கு முழு உடைமையாக்கிக் கொண்டவன்
இறைவன். ஆகவே, எது வேண்டுனும் அவனை அடுத்து இரந்து பெறவது முறையேயன்றிச் செயல் வேறில்லை.
இதனை நன்கு தெளிந்து கொண்ட யான் அதனைச் செய்தற்கு எள்ளளவும் பின்னிடேன்; உலகவர் கூறும்
புன்மையுரை கேட்டு உலகத்துச் செல்வர்முன் செல்லேன்; எனக்கு அவர் சொல்லாலும் உலகு நல்கும்
வறுமை சிறுமைகளாலும் உண்டாகும் சோகம் தவிர அருள்க என வேண்டுகிறார்.
2189. பொன்னுடை யார்தமைப் போய்அடுப்
பாய்என்ற புன்மையினோர்க்
கென்னுடை யான்றனை யேஅடுப்
பேன்இதற் கெள்ளளவும்
பின்னிடை யேன்அவர் முன்னடை
யேன்எனப் பேசிவந்தேன்
மின்னிடை மாதுமை பாகாஎன்
சோகம் விலக்குகவே.
உரை: உமை பாகனே, பொன்னுடைய செல்வரைச் சென்று அடுப்பாயாக என உரைக்கும் புன்மைப் பண்புடையார்க்கு 'யான் என்னையுடைய இறைவனையே அடுத்து நிற்பேன்; இவ்வாறு நிற்றற்கு எள்ளத்தனையும் பின் வாங்கேன்; அவர் முன் செல்லேன்' எனப் பேசிவிட்டு வந்தேன்; என் வருத்தத்தைப் போக்கி யருள்க. எ.று.
மின்னிடை மாது உமை - மின் போலும் சிறிய இடையையுடைய உமை நங்கை. பாகன் - இடப்பாகத்தில் உடையவன், “நீலமேனி வாலிழை பாகத்தொருவன்” என்பர் பெருந்தேவனார். வாழ்விடைப் பொன்னும் பொருளும் அறிவும் இல்லாத குறையால் வறுமையும் ஏழைமையும் எய்தி வருந்துமென் வருத்தத்தைப் போக்கியருள்க என்பாராய், “என் சோகம் விலக்குக” என வேண்டுகின்றார். பொன் பொருள் முதலியன உலகத்தில் மக்கள் முயற்சியால் பெறப்படுவன; அதனையுடைய மக்களிடத்தே பெறத்தகுவன; ஆதனால், இவை குறித்து மக்களை நாடாது இறைவனை நாடுவது நலம் தராது என்பார் பலர்; அவர் கூற்றைக் கேட்கும் அடிகள், அவருடைய அறிவிற் சிறுமையையும் மனத்தின் புன்மையையும் எண்ணுகின்ற அடிகள், பொன்னும் பொருளும் போகமும் எல்லாம் மக்கட்கு அருள்பவன் இறைவன் என்ற உண்மையைப் பன்முறையும் சான்றோர் வற்புறுத்தியிருப்பவும் மனங் கொள்ளாமலும், அறிவால் ஆராய்ந்து கொள்ளாமலும் உரைப்பது தெளிந்துரைக்கின்றமை புலப்பட, “பொன்னுடையார் தமைப் போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்” என இகழ்ந்துரைக்கின்றார். பொன்னும் பொருளுமேயன்றி என்னையே தனக்கு உடைமையாகக் கொண்டவன் இறைவன்; வேண்டுவன பெறற்கு யான் அவனை யடுத்துக் கேட்பனே யன்றிப் பிறரை நாடேன் என்றற்கு “என் உடையான் தனையே அடுப்பேன்” என வுரைக்கின்றார். வேண்டுவார் வேண்டுவன ஈதல் அவர்க்கு இயல்பாயினும் மக்களைப்போல உடனுக்குடன் ஈவதில்லை; ஆகவே, அவனது கொடை விரைவில் எய்தாமை பற்றிப் பலர் மனமுடைந்து பின்னிட்டோழிவரன்றோ எனின், மனத்திண்மையில்லாதவர் அவ்வாறு ஒழிவர்; யான் அது செய்யேன் என்பார், “இதற்கு எள்ளளவும் பின்னடையேன்” எனப் புகல்கின்னார். பொன்னுடைய செல்வரை அடுத்து வேண்டுவன பெறுக என்பார் சொற்களைக் கேட்டு அவர் முன்னே செல்லேன் என்று சூள் செய்து வந்தேன் என்பார், “அவர் முன்னடையேன் எனப் பேசி வந்தேன்” என மொழிகின்றார், இப்பெற்றியனாகிய அடியேனுக்கு வேண்டுவன உதவி மனக்கவலையை ஒழித்தருள்க என்றற்கு “என் சோகம் விலக்குகவே” என உரைக்கின்றார். உமையொடு கூடி உலகருளும் பெருமானாகலின், என்னைக் கைவிடலாகாது என்ற குறிப்புத் தோன்ற “மின்னிடை மாதுமை பாகா” என வேண்டுகின்றார்.
இதனால் சோர்விலா மனத்துடன் இறைவன் அருள் வேண்டுவார்க்கு அது கை கூடும் என்பது தெரிவிக்கப்படுகிறது. (19)
|