20

      20. சிவபரம்பொருளையும் உலகத்தையும் உயிர்களையும் தனித்தனி உண்மை கண்டவர் மூன்றிற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து, முப்பொருள்களின் பொதுவும் சிறப்புமாகிய இயல்புகளை ஆராய்ந்தறிவர். மக்களுயிர்க்கு உலகத்தின் தொடர்பு சிவத்தின் தொடர்புணர்ந்து தெளிவு பெற்றதும், அதனை அடைதற்கு ஆர்வம் கொள்வர். அதற்குச் சில சாதனங்களைச் சைவ நூல்கள் உரைக்கின்றன. அவை சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு வகைப்படும். இவற்றுள் முதல் மூன்றும் ஞானம் பெறுதற்கு வாயில் என்றும், அவற்றை மேற்கொண்டு ஒழுகுவது தவம் என்றும் கூறுவர். தவமுதிர்வில் சிவபரம் பொருள் குரு முதல்வனாய்த் தோன்றி ஞானம் அருள்வர். ஞான நெறிநிற்பாரைச் சாதகர் என்பர். மெய்யுணர்தலும் அவா அறுத்தலும் சாதகர்பால்காணப்படும் ஞானவொழுக்கும், அப் பெருமக்களை “அகன் அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர்” என ஞானசம்பந்தர் பாராட்டி யுரைப்பர். அவர்களது தூயவுள்ளத்தில் எம்பெருமான் எழுந்தருள்வன் என்பது சைவநூல் முடிவு. அந்நிலையில், அவர்கள் திருவைந்தெழுத்தைச் சிந்திக்குமாற்றால் திருவருள் இயக்கத்தையுணர்ந்து தம் கருவிகரணங்களை அதன்கண் ஒடுக்கி, அவற்றை அருட்கருவி அருட்கரணங்களாக மாற்றி, அருளே பொருளாக உறைவர். அக்கருவி கரணங்களால் நிகழும் செயல்வகைகளை அந்நிலையில் சிவபிரான் தன் செயல்களாக மாற்றிச் சிவபோகப் பெருவாழ்வில் இருத்துவன் எனச் சிவஞானிகள் செப்புகின்றார்கள். சிவஞானிகட்கு எய்தும் இன்பமும் துன்பமுமாகிய அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வன் என்பர்; “விளம்புவான் எனதுரை தனதுரையாக” எனத் திருஞானசம்பந்தர் உரைத்தருளுவதைச் சான்றாகக் காட்டி நம்மையும் ஊக்குவர். அப் பெற்றியோர் வழிவந்த அருட்குரவராதலால் வடலூர் வள்ளல் ஞானசாதகர்க்குத் தான் இறைவன் அருள் புரிவன் என்பதில்லை; மாபாதகம் செய்தோர்க்கும் அருளுவன் என்பதை மாபாதகம் தீர்த்த திருவிளையாட்டினைக் காட்டி நம்மைத் தெருட்டுகின்றார். இதனை அவர் கூறுகின்ற வாய்ப்பாடு வேறு. நம் பொருட்டுச் சிவபிரானோடு உரையாடுகின்றார். சாதகராகிய சிவஞானிகட்குத்தான் நினது அருள் எய்துமெனச் சாத்திர மறிந்த சைவர்கள் உரைக்கின்றார்கள். அவர்கள் கூறுவதுபோல நீயும் “சாதகத்தோர் கட்குத்தான் அருள்வேன் என்பாயேல், மாபாதகத் தோனுக்கு முன்பொருகால் அருள்புரிந்தாயன்றோ? அஃது எம்முறை பற்றியது?” என வினவுகின்றார். முன்பொருகால் மாபாதகம் புரிந்தவன் அவந்தி நகரத்து வேதியன். அவன் தன்னைப் பெற்ற தாயைக் கூடித் தந்தையைக் கொலைபுரிந்த கொடியவன். அவன் முடிவில் நோயும் வறுமையும் மிகுந்து மதுரை நகரை அடைந்தானாக, அவன்பாலும் கூடல் நாயகனான சொக்கநாதப் பெருமான் அருள் நோக்கம் செலுத்தி அவனுக்கும் உய்தி கூறினான். உடனிருந்த கயற் கண்ணியாகிய உமையம்மை வியந்து.

          “ஐய, இக்கொடியோன் செய்த

           பாவத்து களவில் காலம்

     வெய்ய நாலேழுகோடி

           நரகிடை வீழ்ந்தாலேனும்

     உய்வகை இலாத பாவி

           இவனுக்கு என் உய்யும் தேற்றம்

     செய்வகை?” 

              என்று கேட்க,            

      “அடுபழி அஞ்சா நீச

           னாயினும், நினைக்கின், அச்சம்

     படுபழி அஞ்சான் செய்த

           பாதகத் தொடக்குண்டு எங்கும் 

     விடுவகையின்றி, வேறு

           களைகணும் இன்றி, வீயக்

     கடவனைக் காப்பதன்றோ

           காப்பு என்றான்” கருணை மூர்த்தி. 

என்று திருவிளையாடல் கூறுகிறது. 

      இங்ஙனம் பாதகம் புரிந்த வேதியனுக்கருளிய செயலை முன்னே நிறுத்தி, உள்ளத்தில் தீதும், நிலையில் எளிமையுமுடையேன்; ஆயினும், நின் திருவடியாகிய மலரை நெஞ்சில் நினைக்கின்றேன்; தீமை “விடுவகையின்றி வேறுகளைகணும் இன்றி வீயக்கடவனைக் காப்பதன்றோ காப்பு” என்ற செய்த அக் கருணையை அருளுக என முறையிடுகின்றார்.

2190.

     சாதகத் தோர்கட்குத் தானருள்
          வேனெனில் தாழ்ந்திடுமா
     பாதகத் தோனுக்கு முன்னருள்
          ஈந்ததெப் பான்மைகொண்டோ
     தீதகத் தேன்எளி யேன்ஆ
          யினும்உன் திருவடியாம்
     போதகத் தேநினைக் கின்றேன்
          கருணை புரிந்தருளே.

உரை:

     சாதகத்தோர்க்குத்தான் அருள் புரிவேன் என்பாயாயின் மாபாதகம் புரிந்தவனுக்கு அருள் செய்தது எப்பான்மை கொண்டோ? அகத்தே தீதுடையேனாய் எளியனாகிய யான் நின்பாதப் போதுகளை மனத்தில் நினைக்கின்றேன்; அருள் புரிக. எ.று.

     பெறுதற்குரிய ஒன்றுக்கு வேண்டிய சாதனங்ளைக் கொண்டு பெற முயல்வோர் சாதகத்தோர் எனப்படுவர். ஞான சாதனகங்களைக் கொண்ட சான்றோரை இங்கே சாதகத்தோர் எனக் குறிக்கின்றார். சில சாதனங்களைக் கொண்டு சிவம்பெற முயலும் சிவசாதகத்தோர்க்கே திருவருள் பெறலாகும் என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன; “ஞானத்தால் வீடு என்றே நான்மறைகள் புராணம் நல்ல ஆகமம் சொல்ல அல்லவாம் என்னும் ஊனத்தார் என்கடவர்” என்று அருணந்தி சிவனார் கூறுவர். நான்மறை நல்ல ஆகமம் இவற்றைச் சிவபிரானே அருளினான் என்பது முண்டு. ஆதலால், “சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன்” எனச் சிவன் கூறுவதாக வள்ளலார் உரையாடுகின்றார். பாதகம், கொலை களவுகள் காமம் பொய் என்ற ஐந்துமாம்; இவற்றுள் கொலை பெரியதாகலின், கொலை புரிவோனை மாபாதகன் என்றும், அவனை மக்கட் சமுதாயம் மிகவும் தாழ்ந்தவனாக மதிப்பது பற்றி, “தாழ்ந்திடுமா பாதகத்தோன்” என்றும் கூறுகின்றார். முன் - முனைனொருகாலம். அகத்தே தீது உடையனாதலால் கீழ்மையுடையேன் எனத் தனது குற்றத்தைத் தானே உணர்ந்துரைப்பது தோன்ற, “தீது அகத்தேன் எளியேன்” என்றும், என்றாலும் மாபாதகன் அல்லேன் என்பது புலப்பட “ஆயினும்” என்றும் இயம்புகிறார். தீது அகத்தேன் என்பதற்குத் தீது புரியும் சூழலுக்கிடையே உள்ளேன் எனவும் உரைக்கலாம். தீதகத்தே உள்ளனாயினும் என் மனத்தகத்தே நின் திருவடியை நினைக்கும் நல்வினையே செய்கின்றேன். அருள் புரிக என்றற்கு “உன் திருவடியாம் போது அகத்தே நினைக்கின்றேன்” எனப் புகல்கின்றார். இறைவன் திருவடி சேர்ந்தார் பிறவிப்பெருங்கடல் நீந்துவார் என்பது தமிழ்மறை. சேர்தல் - சேர்தற் பொருட்டுச் சிந்தித்தில்; அதனால் “அகத்தே நினைக்கின்றேன்” என எடுத்து மொழிகின்றார்.

     ஞானம் பெறுதற்கெனச் சாதனங்கள் பலவற்றைச் சாத்திரம் கூறுவது கொண்டு மருளாமல் இறைவன் திருவடியை நினைத்தலே சாதனம் எனத் தெளிவுபடுத்தி அதனைச் செய்து அருள் பெறவேண்டும் என்பது இதன் கருத்தாம் என அறிக.

     (20)