24
24. குற்றம் புரிவது மக்கள் இயல்பென்தாயின், அது குறித்து அவர்களை ஒறுப்பது தேவர்க்கும் நேர்மையாகாது.
குற்றம் செய்தோரை இறைவன் தண்டிப்பது அறமாதல் யாங்ஙனம்? என்ற வினா எழுகிறது. குற்றம் புரிதற்கேற்ற
குறைபாடு மக்களிடத்தே இருத்தலால் அதனைச் செய்தல் அவர்க்கு இயல்பாகிறது. அதே நிலையில் தமது
குறையையுணர்ந்து குற்றம் செய்தலின்றும் விலகுதற்கேற்ற நல்லுணர்வும் மக்கட்கு உண்டு. அது செய்யாமை
பற்றியன்றே அவரை ஒறுத்தற்கும் இடம் ஏற்படுகிறது. மக்கள்பால் உள்ள குறைபாடு நீக்கவொண்ணாத
நீர்மைத்தாயின், அது காரணமாகப் பிறக்கும் குற்றத்துக்காக அவர்களை ஒறுப்பது தவறாகக் கருதப்படும்.
குறைபாடு காணாமையும், நல்லுணர்வு கொண்டு தெளியாமையும், “செய்தக்க செய்யாமை” என்ற குற்றமாதலால்,
அதுபற்றி ஒறுக்குமாற்றால், நலன் உணர்ந்து செம்மைக் கண் நிறுத்துவது இறைவன் கடனாம். மக்கள்
செய்யும் குற்றங்களுள் ஒறுத்து நீக்குவனவும் நன்னெறி காட்டித் தெளிவித்து நீக்குவனவும் எனப்
பலதிறமுண்டு. பெரியோர் தமது இன்மொழியாலும் நகைமுகத்தாலும் குற்றம் செய்தோரைத் தம் குற்றம்
உணர்ந்து செந்நெறிக்கண் செல்லுமாறு செலுத்துவர். சிவபெருமான் அத்தகைய பெருமக்கள் அனைவரும்
பரவும் பெருமானாதலால், குற்றம் பொறுத்துக் குணங்கொண்டு அருள் செய்யும் நிலையை வள்ளலார்
விரியக் கூறுகின்றார்.
2194. கூறுற்ற குற்றமுந் தானே
மகிழ்வில் குணமெனவே
ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள்
வான்என்பர் ஆங்கதற்கு
வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ
லோஎன்னுள் மேவிஎன்றும்
வீறுற்ற பாதத் தவன்மிடற்
றேகரி மேவியுமே.
உரை: உவப்புற்றபோது, குற்றம் புரியினும் குணமெனக் கொள்வன் செஞ்சடையண்ணலான சிவபெருமான் என்று சான்றோர் கூறுவர்; இதற்குச் சான்றோன்றும் வேண்டா; என் உள்ளத்தில் இடம் கொண்ட பாதத்தையுடைய சிவனது மிடற்றுக் கருநிறமே போதிய சான்றாய்க் சிறப்புற்றுளது. எ.று.
கூறப்படுகின்ற குற்றத்தையும் விருப்புற்றவிடத்துக் குணமென்றே கொள்வன் சிவன் என்று நம்பியாரூரர் கூறுகின்றார். “குற்றமே செயினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன், பொற்றிரள் மணிக்கலங்கள் மலரும் பொய்கை சூழ் திரும்புன் கூருளானே” என்பது நம்பி ஆரூரர தேவராம் குணம், குற்றம் என வேறுவேறாகக் உவப்பின்கண் குற்றம் குணமாகவும், வெறுப்பின்கண் குணம் குற்றமாகவும் கருதப்படுதவது உலகத்தியற்கை; இதனைத் திருத்தக்க தேவரும், “வாரம்பட்டுழித் தீயவும் நல்லவாம், தீரக் காய்ந்துழி நல்லனவும் தீயவாம், ஓரும் வையத்தியற்கை” என்று கூறுகின்றார். குற்றத்தைக் குணமாகக் கொள்ளும் இவ்வியல்பு சிவபெருமானுக்கு இயற்கையாகவே உண்டு என்பதை நம்பியாரூர் முதலிய பெருமக்கள் கூறுவது சான்று; இதனின் சான்று வேறு வேண்டா என்றற்கு, “ஆங்கதற்கு வேறு உற்ற தோர்கரி வேண்டுங்கொலோ” என வள்ளலார் உரைக்கின்றார். தேவர்கள் அவனது திருவருளமுதத்தை வேண்டி நஞ்சு தந்தனர்; அப் பெருமான் அவர்கள்பால் கொண்ட அன்பினால் அந் நஞ்சினை உண்டு கண்டத்தில் தரித்துக் கரிய கழுத்துடையானாயினான்; அது யாவரும் காண அவன் கழுத்தில் அமர்ந்துளது என்பார், “அவன் மிடற்றே கரிமேவியது” எனச் சிறப்பிக்கின்றார். அப்பெருமான் திருவடி ஒன்றுக்கும் பற்றாத அடியேனுடைய திருவுள்ளத்திற் பொருந்தித் தனிச்சிறப்பு எய்தியுள்ளது என்றற்கு “என்னுள் மேவி வீறுற்ற பாதத்தவன்” எனப் புகழ்கின்றார்.
இதனால், சிவபெருமானது அன்பினைப் பெற்றவர்கள் குற்றம் செய்யினும், அதனைக் குணமெனக் கொண்டு அருள் செய்யப் பெறுவர் என்பது தெளிவாகிறது. (24)
|