25
25. பக்குவமில்லாத இளம் பெண் போன்று துள்ளலும் துடிப்பும் விளையாட்டு விருப்பும் மிக்குற்று
உழலும் என் மெல்லிய மனம் திருமால் பிரமன் முதலிய வரலாறுகளை யுரைக்கும் புராணங்களையும் இதிகாசங்களையும்
படிப்பதும் படித்தோர் சொல்லக் கேட்பதும் செய்கிறது. திருமால் பல்வேறு பிறப்புக்களை எடுத்து
மக்கட்கு நலம் செய்ய முயன்றது. ஒருபாலாக, பிறப்புத்தோறும் அப்பெருமான் எய்திவருந்திய துன்பங்கள்
மிகப் பலவாதலை அறிகிறது. பாகவதத்தின் பத்துப் பிரிவுகளும் பல்வேறு பிறப்பில் அவன் செய்த
ஆற்றல்மிக்க செயல்களை அறிவிக்கின்றன. ஆழ்வார்கள் பாடிய அழகிய இனிய தமிழ்த் திருமொழிகள்
திருமாலின் பரமாம் தன்மையைத் தமிழ் அறிந்தோர் நன்கறிந்து வியந்து பரவத்தக்க முறையில்
உரைக்கின்றன. பாரதத்தின் ஒரு கூறாகிய பகவற்கீதை கண்ணாய்த் தோன்றி யுலவிய திருமாலின் ஞானவாய்மையைப்
பலரும் பயின்று பாராட்டிப் பரவுகின்றனர். அப்பெருமானைப் பொருளா நிறுத்திச் சைவத் திருமுறைகளும்
சைவப் புராணங்களும் அவன் சிவத்தின் திருவருளைப் பெறுதற்குச் செய்த தவங்களையும் உற்ற துன்பங்களையும்
விரிவாகக் கூறுகின்றன. கந்தபுராணம், உபதேச காண்டம் முதலிய தமிழ் நூல்களில் அவன் பட்ட
பாடுகளை நோக்கும்போது நெஞ்சில் நடுக்கமும் நமது ஆற்றலில்லாத சிறுமையும் தோன்றி அவலம் எய்துவிக்கின்றன.
அப்பெருமானது பூப்போன்ற திருவுந்தியில் தோன்றி எல்லா அண்டங்களையும் அவற்றை ஆளும் அதிபதிகளையும்
அசுரர் சுரர் என்ற மக்கள் தேவர் வகையினரையும் படைக்கும் பிரமனுடைய ஆற்றல் மிகவும் பெரியதாகப்
பழம் பெரும் புலவர்களால் பாரித்துப் பலவேறு வகையிற் காட்டப்படுகிறது. படைப்புத் தொழிலைச்
செய்யும் அவனது வாய் எண்ணிறந்த வேதங்களை ஓதியவண்ணம் இருக்கிறது. இதனால் அவனது ஞானப்
பெருமையும் அளவிடற்கரிதாய் அமைகிறது. அவ்விருவரும் பிரமன் படைத்த அசுரர் அரக்கர் தயித்தியர்
எனப்படுவோரால் பட்ட துன்பங்களை இந்தப் புராணங்களிலன் வாயிலாகப் படிக்குபோது உடல் முழுவதும்
மின்சத்தி பாய்ந்தது போல அச்சம் தோன்றி மனத்தின் அமைதியை அழித்து அலைக்கின்றது.
மலைபோல் உயர்ந்து மாட கூட கோபுரங்களால் சிறந்து மணியும் பொன்னும் பொருளும் நிறைந்து
விளங்கும் திருக்கோயில்கள் முதல், இடிந்து பாழ்ப்பட்டு ஈடற்று கிடக்கும் கோயில்கள் ஈறாகவுள்ள
எல்லாக் கோயில்களிலும், திருமாலும் பிரமனும் பெருந்துன்பம் துயரமும் மனநோயும் உற்றுவருந்துத்
தவத்தால் உழந்து வரம் பெற்ற செய்தி ஒழியாமல் ஒளியாமல் இயற்கை வரம்கடந்த கற்பனைகளால்
எடுத்துரைக்காத திருக்கோயிலே கிடையாது; தலபுராணமே இல்லை. தலபுராணங்கள் யாவினும், திருமால்
வழிப்பட்ட படலங்களும், பிரமன் அருள்பெற்ற சருக்கங்களும், இந்திரன் துயர் நீங்கிய அத்தியாயங்களும்
மிகுந்துள்ளன. பேராற்றல் படைத்த பெருந்தேவர்களே இத்துணை எண்ணமுடியாத துன்பமும் துயரமும் உற்றுப்
பன்னெடுங்காலம் உழந்து வருந்தியே சிவனது திருவருளைப் பெற்றிருக்கிற செய்தியை அறிந்தறிந்து நெஞ்சம்
திருவருளைப் பெறுவதும் அதன் வாயிலாக அப்பெருமானுடைய திருவடியைக் காண்பதும் ஒருகாலும் கைகூடுவதன்று;
அத்திருவடியின் மேற்பட்ட தூசியின் அணுவில் ஒரு சிறு கூறும் தன்மேற்படாது என நெஞ்சம் அவலத்தாற்
கவலை மிகுந்த கையறவு படுகிறது. எவ்வளவு இன்மொழி கூறியும் நயவுரை வழங்கியும், ஆக்கமும் அறனும்
காட்டி அறிவுரை தெரிவித்தும் அஞ்சிய நெஞ்சம் நடுக்கும் தீராது வருத்தமே எய்துகிறது; இதற்கு நீ
தான் அருள் புரிய வேண்டும் என வள்ளற்பெருமான் சிவபரம் பொருளை வேண்டுகிறார்.
2195. சூற்படு மேக நிறத்தோனும்
நான்முகத் தோனும்என்னைப்
போற்படும் பாடுநல் லோர்சொலக்
கேட்கும் பொழுதுமனம்
வேற்படும் புண்ணில் கலங்கிஅந்
தோநம் விடையவன்பூங்
காற்படுந் தூளிநம் மேற்படு
மோஒரு கால்என்னுமே.
உரை: திருமாலும் நான்முகனும் படும் பாட்தை நல்லோர் சொல்லக் கேட்கும் பொழுது, கூரிய வேல் தைக்கவுண்டான புண்போல வேதனையுற்று நிலைகலங்கி சிவபெருமானுடைய மலர் போன்ற திருவடி மேற்பட்ட தூசியில் ஒரு தூளியேனும் ஒருகாலும் நம்மேல்பட இடமில்லையே என்று மனம் ஏங்கி வருந்துகிறது காண். எ.று.
திருமாலின் மேனி நிறம் மழைநீர் நிறைந்த கருமேகம் போல்வது; அதனால் அவனைச் “சூல்படு மேக நிறத்தோன்” என்று குறிக்கின்றார். சூல் - கருப்பம்; மேகத்திற்குக் கருப்பம் நீர்; அதனால் நீர் நிறைந்த மேகத்தைச் “சூல்படும் மேகம்” என இசைக்கின்றார். நான்முகத்தோன்-நான்கு முகங்களையுடைய பிரமன்.? குற்றம் செய்வதும், அதற்காக வருந்துவதும், அது தீர்தற்குத் தவம் (விடாமுயற்சி) புரிவதும் மக்கட்கு உரிய பண்பு; குற்றம் புரியாமை மக்களில் மேம்பட்ட தேவர்கட்கு தேவதேவர்கட்கும் மாண்பாகும். மக்களைப்போல் அவர்களும் குற்றம் செய்து துன்புறுவதுபற்றி “என்னைப்போல்” என எடுத்து மொழிகின்றார்.
“சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி, ஆவ எந்தாய் என்று அவிதா இடும் அரவ் நம்மவரே” என மணிவாசகர் கூறியது வள்ளலார் கூற்றுக்கு அரண் செய்கிறது. படும் பாடு-அடைந்து வருந்தும் துன்பம். பொய்யகன்று உயர்ந்த மெய்யுணர்வுடைய நல்லோராகிய வான்மீகி வியாசர் முதல் சூத முனிவரையுள்ளிட்ட சான்றோர் இதிகாசங்களையும் புராணங்களையும் சொன்னவராதலால் அவர்களை “நல்லோர்” எனச் சிறப்பிக்கின்றார். இந்த இதிகாசங்களையும் புராணங்களையும் சொல்வதும், சொல்லக் கேட்பதும் ஞானபூசை யென்றும், சமய நல்லொழுக்கம் என்றும் சமய்நூல்கள் கூறுதலால், “நல்லோர் சொலக் கேட்கும் பொழுது” எனச் சொல்லுகின்றார். சிவனருளைப் பெற முயன்ற திருமாலும் பிரமனும் இடர்ப்பட்ட நிகழ்ச்சி யொவ்வொான்றும் தன் முயற்சியும் அவ்வாறு தடைப்படலாம் என்று நினைவைத் தோற்றுவித்து மனநோயை விளைவிப்பதுபற்றி “வேல்படும் புண்ணிற் கலங்கி” என்று கூறுகின்றார். கேட்கும்பொழுது கேட்பவர் உள்ளத்தில் ஊக்கம் கிளர்விக்குமாயின் மகிழ்ச்சி மிகுவதுபோல அல்லாமல், பெருந்தேவர்களே அத்துணையரும்பாடு பட்டுப் பொறாது வருந்துனரெனின் மண்ணிற் பிறந்த நமக்கு அரிது போலும் என்ற எண்ணம் எழுத்து மனத்தின் எழுச்சியை ஒடுக்கி ஊக்கத்தை அவிப்பது தோன்ற “அன்தோ நம் விடையவன் பூங்காற்படும் தூளி நம்மேற்படுமோ ஒருகால் படாதே போய்விடுமோ” என மனம் எண்ணி ஏங்குகிறது என இயம்புகிறார்.
திருமால் முதலிய தேவதேவர்களின் வரலாறுகளில் சிவனது திருவருள் பெறாது முட்டுப்பட்ட செய்திகள், ஓரொருகால் பெறவிரும்பும் மக்கட்கு மனத்தே மலைப்புத் தோற்றுவித்து வருத்துகிறது என்றாலும், அவர்கள் பெற்ற அருணிகழ்ச்சிகள் பலவாதலின் அவற்றை யுரைக்கும் புராணங்களைப் படிப்பதும் பயன் தருவதாம் என்பது கருத்து. (25)
|