26

      26. அருள்வழிச் செல்வது செவ்விது என்ற தெளிவு பிறந்தவழி அந்த அருளை எதிர்நோக்கும் ஆர்வம் உள்ளத்தே எழுகிறது. அருள், பொறிபுலன்களுக்குத் தெரியுமாறு பருப்பொருளாய் எய்துவது அன்று, உயிரறிவில் கலந்து அறிவொளியாய் மனத்தின்கண் தோன்றுவது. அவ்வொளி இன்ன இடத்தில் இன்னபொழுதில் தோன்றும் என முன் கூட்டியறிவது மக்களுயிர்க்கு இயலாததொன்று. உயிர்கள் இறைவன் அளித்த உடம்பையும் மன முதலிய உட்கருவிகளையும், கண் காது முதலிய புறக்கருவிகளையும் செலுத்திச் செய்வனவற்றைச் சோம்பாது செய்தல்வேண்டும். செய்துகொண்டு போம்போது அறிகருவிகளும் மனமும் முட்டுப்பட்டு மயங்கும்போது திருவருள் அறிவொளியாய் உண்மை நெறிகாட்டும்; மேற்கொண்ட செயல் இனிது முடிந்து இன்பம் செய்யும் அருளறிவைப் பொருளாகக் கருதாமற் புறக்கணிப்பவர் பலர்; அதனால் இடர்ப்பாடு இன்னலுறுவது இயற்கையாக உளது. அருளொளி பெற்ற மாத்திரையே அதனை விடாப்பிடியாகப்பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் வெற்றி கண்ட விஞ்ஞானிகள் பலர்; மெய்யுணர்வு பெற்று ஞானவின்பம் பெற்ற பெரியோரும் பலர்.

      மதுரையில் வாழ்ந்த பாணன் இசைப்புலமை பெற்று மன்னன் மதிக்க வாழ்ந்து வருகையில், வேறோர் இசைப்புலவன் போந்து வீறு பேசக் கேட்டு மனம் தளர்ந்தான். தன்னையும் தன் புலமையையும் அளந்து சொக்கநாதன் திருமுன் சென்று “ஐயனே அடியேற்கின்று அருட்டுனை செய்யல் வேண்டும்” என்று வேண்டினன். பாணனுடைய புலமை யளவையும் கருவிகரணங்களின் வன்மையையும் இறைவன் திருவருள் நன்கறியும்; அதனால் அப்பாணனது அறிவின்கண் கலந்து அருளுதற்கு வாய்ப்பின்மையால் புறத்தே விறகுவிற்கும் ஆள்வடிவில் தோன்றிப் புதியோன் புந்தி கலங்குமாறு மதுரைச் சொக்கேசன் வாய் மலர்ந்து பாடினன், தன்னை மதுரைப் பாணனுக்கு ஆள் என்றும் கூறினன். மதி மருண்ட புதுப்புலவன் அச்சம் மிகுந்து எவர்க்கும் சொல்லாமல் ஓடிவிட்டான். பாணனுக்கு வாழ்வு மேம்பட்டது.

      இந்நிகழ்ச்சிக்கண் இறைவன் செய்த திருவருட்டிறத்தை எண்ணுகின்றார் வடலூர் வள்ளல். இன்னதொரு திருவருள் எய்தும் நாளை எதிர் நோக்குகின்றார் எய்தும் நானே பயனுள்ள நாள்; அதற்குப் பல்லாயிரம் தெண்டம் செய்வது தக்கது என விளக்குகின்றார். அஃதொரு பாட்டாய் வெளிவருகிறது.

2196.

     வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு
          மாட்டி வருடுமலர்த்
     தாளே வருந்த மணிக்கூடற்
          பாணன் தனக்கடிமை
     ஆளே எனவிற கேற்றுவிற்
          றேய்நின் னருள்கிடைக்கும்
     நாளேநன் னாள்அந்த நாட்கா
          யிரந்தெண்டன் நான்செய்வனே.

உரை:

     எம்பெருமாட்டியாகிய உமாதேவி தன் திருக்கையால் வருடும் திருவடி வருந்தக் கூடலாகிய மதுரை நகர்க்கண் பாணனுக்கு அடிமையாள் என்று சொல்லி விறகுக் கட்டை முடிமேற் சுமந்து விற்றவனே; எனக்கு நின் அருள் கிடைக்கும் நாளே நல்ல நாளாகும் அந்நாள் எய்துமாயின் அதற்கு ஆயிரம் தெண்டன் செய்து வரவேற்பேன் எ.று.

     ஒளிமிக்க நீண்ட கண்களையுடையளாதலால் உமாதேவியை “வான் ஏய் நெடுங்கண்ணி” என்றும், எம்பெருமானாகிய சிவனுக்குத் திருவருள் தேவியாவள் என்றற்கு “எம்பெருமாட்டி” என்றும் கூறுகின்றார். இத்தகைய பெருமாட்டி பெருமானுக்குச் செய்யும் பணியாவது அவன் திருவடியை மலர்போன்ற தன் கைகளால் மெல்ல வருடுவது என்பது விளங்க, “எம் பெருமாட்டி வருடும் மலர்த்தாள்” என்று அடிகளார் அறிவிக்கின்றார். வருடப்படும் தாளை “மலர்த்தாள்” என்று கூறி வருடும் பெருமாட்டியின் கையை அவாய் நிலையால் பெறவைத்தார், அவள் கையும் மலர் போல்வது என்று உணர்ந்தற் பொருட்டு.

     மதுரை வீதியில் கல்லும் மண்ணும் பட்டு மலர்போலும் திருவடி கன்றிக் கனியும் என்று அடிகளார் திருவுள்ளம் அன்பினால் அஞ்சினமை புலப்படத் “தாளே வருந்த” என்றார். “தாளே” என்பதனால், விறகு சுமந்த திருமுடியோ, அதனைச் செய்யவுடன் திருவுள்ளமோ வருந்தவில்லை என்பது பெறப்படும். செல்வத் திருநகராதலால், மதுரையே “மணிக்கடல்” எனக் கூறுகின்றார். பாணன் - பாணபத்திரன். விறகு தலையனாய் வந்த இறைவனது பாட்டிசை கேட்டு வியப்பு மீதூர்ந்த ஏமநாதன் என்ற புதியோன், இறைவனை நோக்கி, யார் என்று வினவிய போது, “பண்தரு விபஞ்சி பாணபத்திரன் அடிமை” என்றான்; அதனால் “பாணன் தனக்கு அடிமை ஆள் என விறகேற்று விற்றோய்” என்று வடலூர் வள்ளல் வழுத்துகின்றார். திருவருள் பெற்று மேன்மை எய்திய பாணபத்திரளை யானைமேல் வைத்து நகர் வலம் செய்வித்து மன்னன் பெருவாழ்வு பெறுவித்து “எனக்கு உடையர் நீர் உமக்கு நான் அடியேன்” என்று பாராட்டினன். அதனை நினைந்த அடிகளார், “நின் அருள் கிடைக்கும் நாளே நன்னாள்” என்று நவில்கின்றார்.

     இதனால் அருள் காட்டும் நெறியில் நின்று அதனைப் பெறுநானினும் பெருமை தரும் நாள் வேறில்லை என்பது பயன்.

     (26)