27

     27. தொண்டை நாட்டில் உலாவ வருகையில் சுந்தரர். திருக்கழுக்குன்றத்தில் சிவபெருமானைப் பாடிப் பரவிக்கொண்டு திருக்கச்சூரை நண்ணினார். அங்குள்ளது ஆலக் கோயில். அக் கோயிலில் எழுந்தருளும் பெருமானை வணங்கி வழிப்பட்டவர்க்குப் பசிவந்து கடுகிற்று. திருக்கோயிலின் மதிற்புறத்தே தங்கி இறைவனைச் சுந்தரர் சிந்தித்திருந்தார். சிறிதுபோதில் அந்தணர் ஒருவர் அவண் போந்து சுந்தரரோடு அளவளாவி அவரை வருத்தும் பசிக்கொடுமையை அறிந்தார். அன்பு கூர்ந்து,

2197.

     அடுத்தார் தமைஎன்றும் மேலோர்
          விடார்கள் அவர்க்குப்பிச்சை
     எடுத்தா யினும்இடு வார்கள்என்
          பார்அதற் கேற்கச்சொற்பூத்
     தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி
          லேபிச்சைச் சோறெடுத்துக்
     கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு
          கேன்எண் குணக்குன்றமே.

உரை:

     எண்வகைக் குணங்களாலாகிய குன்றம் போல்பவனே, தம்மை அடுத்தவர்க்குப் பிச்சை யெடுத்தேனும் வேண்டுவனவற்றை நல்லோர் உதவுவர் என உலகவர் உரைப்பர்; அதற்கேற்ப நீயும் திருக்கச்சூரில் சொற்களையே பூக்களாகக் கொண்டு சொன்மாலை தொடுத்தணிந்த சுந்தரர்க்கு வீடுதோறும் சென்று இரந்தளித்து அருள் செய் தாய்; நினது பேரருளை என்னென்று புகழ்வேன். எ.று.

     துணைவேண்டிச் சார்பவரை “அடுத்தவர்” என்பது உலகு வழக்கு. அங்ஙனம் தம்மை அடைபவர்க்கு வேண்டுவதறிந்து மாறாது உதவுபவர் மேலோர் எனப்படுவர். இவ்வாறு குணஞ்செயல்களால் மேலோராகியவர் தம்மையடுத்தவர்க்கு யாதும் உதவாமல் கைவிடுவதிலர். தம்பால் உளது குறைபடினும், இல்லாது போயினும் வேறு பிறரை இரந்தோனும் பெற்று வந்து உதவுவரேயன்றி வெறுக்கையுடன் செல்லவிடார். இதனை “அடுத்தார் தமை என்றும் மேலோர் விடார்கள்” எனவும், “அவர்க்குப் பிச்சையெடுத்தாயினும் இடுவார்கள்” எனவும் சொல்லி, இதனை உலகோர் வாழ்வியல் அறமாக உரைக்கின்றனர். என்பது விளங்க, “என்பார்” எனவும் அடிகளார் உரைக்கின்றார். இது வெறும் நூலோர் கற்பனையா உண்மையுரையா என எண்ணுவாருண்டு. எனினும், நின்பால் அது தூய கற்பனை கடந்து உண்மையாகவுளது என்பது தெளிய “அதற்கேற்ப” என வள்ளலார் உரைக்கின்றார். சொற்களைப் பூவாகக் கருதிப் பூவாலாகிய மாலையைப் பூமாலை என்பது போலச் சொற்களாலாவதைச் சொன்மாலை என்பது தமிழ்வழக்கு. சொல்லென்பது சொற்களால் இயற்றப்பட்ட பாட்டுக்களைக் குறிப்பது. அதனால் பாமாலையைச் சொன்மாலை என்றும் வழங்குவர். சொன்மாலை பாடிய சுந்தரமூர்த்திகளை, “சொற்பூத் தொடுத்தார் ஒருவர்” எனச் சொல்லுகின்றார். சுந்தரர்க்கு நிகர் அவரே என்பது பற்றி, “ஒருவர்” எனச் சிறப்பித்து, அவர் சொன்மாலை தொடுத்த இயல்பை, “சொற்பூத்தொடுத்தார்” எனப் பரவுகின்றார். கச்சூர், செங்கற்பட்டுக்கு வடக்கில் சீபெரும்புதூர் செல்லும் சாலையில் உள்ளதோர் அழகிய ஊர். இதன் நலத்தை வியந்த சுந்தரர், “கடையும் புடைசூழ் மணிமண்டபமும் கன்னிமாடம் கலந்தெங்கும், புடையும் பொழிலும் புனலும் தழவிப் பூமேல் திரமாமகள் புல்லி, அடையும் கழனிப் பழனக் கச்சூர்” என்றும், “அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர்” என்றும் புகழ்ந்து பாடுகின்றார். இங்குள்ள சிவன் திருக்கோயில் ஆலக்கோயில் எனப்படுவது. இதனைச் சுந்தரமூர்த்திகள், “கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங்கச்சூர் வடபாலை, ஆலக்கோயில்” எனப் பாராட்டுகின்றார். வடலூர் வள்ளலும் அவ்வூரை “தூவி மயில் ஆடும் பொழிற்கச்சூர்” என்று பரவுகின்றார். நண்பகற்போதில் வந்து வழிபட்டுப் பசித்திருந்தார் ஆதலால், “பிச்சைச் சோறெடுத்துக் கொடுத்தாய்” என வுரைக்கின்றார்.

     தம்மையும் தமது தலைமையும் எண்ணித் தமது தகுதிக்குப் பிச்சையெடுப்பது பொருந்தாது என நினையாமல் சுந்தரருடைய பசி தீர்ப்பதொன்றே பொருளாகக் கருதிய சிவனுடைய அருள் உள்ளம் சிறந்து தோன்றக் காண்கின்றார் வடலூர் வள்ளல். “நின் பேரருள் என் சொல்லுவேன்” என்று புகழ்கின்றார்.

     சிவனை எண்குணத்தான் என்று சிவாகமங்கள் சிறப்பித்துக் கூறுவது பற்றி, “எண்குணக்குன்றமே” எனப் புகல்கின்றார். பேரருளுடைமை என்பது எண்குணங்களில் ஒன்று. சலியாமல் நிலைத்திருக்கும் இயல்பு குறித்து, “எண்குணவனே” என்னாமல் “குணக்குன்றமே” என்று கூறுகின்றார்.

     இதனால் இறைவனது திருவருள் பெருமையை எடுத்தோதி மகிழ்வது இப்பாட்டின் பயனாம் என வுணர்க.

     (27)