28

      28. மக்களுக்கு அமைந்த உடற்குள் மருத்துவப் புலமையால் மாண்புமிக்க நுண்மாண் நுழைபுலத்தாரும் இதுகாறும் கண்டறியாத பொருள் மனம் என்பது. எந்த விஞ்ஞானிக்கும்  தன்னைக் காட்டாத அது உண்டென்பதில் எத்திறத்தார்க்கும் ஐயப்பாடில்லை. உயிர்க்கும் உடம்புக்கும் இடையேயிருந்து உடம்பின் வழி நின்று உடற்கும், உயிர் வழி நின்று அதன் உண்ரவுக்கும் ஒப்ப ஒட்பமும், உயிருணர்வுக்கேற்ப நுட்பமும் படைத்தது. பொறிபுலன்களால் ஓரளவு வளர்ச்சியுற்றதும், அவற்றால் காட்ட வொண்ணாத காட்சிகளை உயிர்க்குக் காட்டுவதில் உயர்வு மிக்கது; காணப்படும் உருவப் பொருளையே யன்றி அருவப் பொருளையும் அணு அணுவாகப் பிரித்துக் காட்டும் பெருமை வாய்ந்தது; அம் மனத்துக்கு அணிமை சேய்மை; உயர்வு ஆழமென்று வேறுபாடில்லை. பொறிகளால் அளந்து காண இயலாத விண்மீன்களையும் அவை திரியும் வானத்தையும் துருவிபறிவதும், அளப்பரிது எனப்படும் ஆழ்கடலினும் அதற்கப்பால் அதனைத் தாங்கி நிற்கும் தரைக்குள்ளும் புகுந்து அகழ்ந்தறிவதும் ஆகிய ஆற்றல் பெற்றது. சிறியதைப் பெரிதாக்கியும் பெரியதைச் சிறியதாக்கியும் காட்டுவதில் நிகரற்றது. உள்ளதன் உண்மை கண்டு, அஃது இல்வழியுண்டாகும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக் காட்டுவதில் ஈடில்லாதது. உயிர்க்கு அறிவு விழைவு செயல் என்ற மூன்று  ஆற்றலுண்டு. அறிவு வழி நின்று அறியப்படுவதையும், விழைவு வழி நின்று விழையப்படுவதையும், செயல் வழிநின்று செய்வினைக் கூறுகளையும் உயிர்க்குக் காட்டி ஊக்குவதிலும் இம் மனம் உயர்வுடையது.

      உயிர்ப் பொருட்குத் தன் இனத்தோடு கூடுதலும், வேறு பொருளொடு கூடுதலும் பிரிதலும் இயல்பு. கூடுங்கால் இன்பமும் பிரியுங்கால் துன்பமும் எய்தும். இன்ப நுகர்ச்சியில் உயிருணர்விற் கலந்து நின்று அந்நுகர்ச்சியைச் சுருக்கிக் காட்டுவதும், துன்ப நுகர்ச்சியில் உயிருணர்வின் வேறாய் நின்று பெருக்கிக் காட்டுவதும் மனத்தின் தன்மைகளில் ஒன்று. அறிய வேண்டுவதை அறியாவிடினும், செய்ய வேண்டுவதைச் செய்யாவிடினும் துன்பம் எய்தும்; இவ்வாறே விழையப்படுவது எய்தாவிடினும் துன்பம் உண்டாகும்; ஆயினும், ஏனையிரண்டால் எய்தும் துன்பத்தைவிட, விழைவது எய்தப் பெறா வழி யுளதாகும் துன்பத்தைப் பெருக்கிக் காட்டி மிகவும் பேதுறுவிப்பது மனம்; அப்பேதுறவால்  அறிவு அற்றப்படுவதும் செயல் குற்றப்படுவதும் ஆகின்றன. அவற்றால் துன்பங்கள் பலவாய்க் கிளைத்துப் பெருகுகின்றன. இன்பத்தின் குளிர்ச்சியினும் துன்பத்தின் சூடு மிகுந்து உயிர்க்குச் சோர்வும் உடற்குத் தளர்ச்சியும் பயக்கின்றது. இந்நிலையில் மனமும் இரண்டோடும் கூடாது சாம்பிவிடும். 

      இத்தகைய விழைவின் வழிப்பட்டுப் பொன்னோ பொருளோ அறிவோ பிறவுதவியோ நினைந்து மக்கள் தக்கவரை நாடி வேண்டுவது உலகியலின் நாளும் நடைபெறும் செய்வகையாகும். உலகியல் வாழ்வும் பிறர் உதவியின்றி நடைபெறாது; மக்களில் எவரும் தமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாமே செய்து கொள்ள முடியாத குறையுடையவர். உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும், நோய் நீக்கும் மருந்துக்கும், இருக்கும் இடத்துக்கும் பிறர் உதவியின்றி அமையாது. கற்கும் கல்விக்கும் பிறரை அடைந்து கேட்கும் கேள்வி இன்றியமையாது வேண்டப்படுகிறது. இவற்றை உதவத் தக்கவர் ஒத்த தறிந்து உதவுவது பேரறமாக ஒப்புரவு என்ற பெயரால் அறவோரால் வற்புறுத்தப்படுகிறது. வாழ்வோருள் எல்லாம் உடையார் இலராயதுபோல எல்லாம் உடையராய் உதவுவோரும் இவர். ஒவ்வொருவரும் ஒரு சிலவே உதவும் பெற்றியர் என்று இதனால் அறிகின்றோம். குறைபாட்டின் வடிவே மக்கள் வாழ்வு என்று கூறுதற்குக் காரணம் இதுவே யாகும். 

      குறையுடையார் உதவத் தக்கார் நாடி அவரது உதவியை வேண்டும்போது, அவருடைய மனம் செய்யும் செயல் நோக்கத்தக்கது. வேண்டத்தக்கதைச் சிறுமைப்படுத்துவதும், எளிமையுடைய தாக்குவதும், வேண்டுவது உதவுநரைப் பெரியார்க்குவதும் அவர் உதவியை அருமையும் பெருமையு முடையதாக்குவதும் மனத்தின் செயல்திறம். அதற்குக் காரணம் உதவியின் பயனை விழைவது என்பதைத் திருவள்ளுவர் பயன் தெரிவார் தினைத்துணையாயினும் உதவியைப் பனைத் துணையாகக் கொள்வரென எடுத்துக்காட்டி அறிவுறுத்துகிறார். 

      வடலூர் வள்ளலார் இறைவனை நாடி அவனது திருவருளை வேண்டுகிறார். அதுவோ செல்வத்துள் எல்லாம் பெருஞ் செல்வம்; ஏனைச் செல்வங்கள்போல் இழிந்தோர்பால் இருப்பதில்லை; மிகவுயர்ந்த மேலோர் தூயவுள்ளத்தில் இருந்து இயங்குவது. உமாபதி சிவனார், அருளிற் பெரியது அகிலத்தும் இல்லை; அகிலத்தில் வேண்டும் பொருளில் தலையாயது இல்லாததுபோல என்று கருத்துப்பட, “அருளிற் பெரியது அகிலத்தில் வேண்டும் பொருளில் தலையிலது போல்” ( திருவருட். 31 ) என்பர். திருநாவுக்கரசர், “இருள் தரு துன்பப் படலம் மறைப்ப மெய்ஞ்ஞான மென்னும் பொருள்தரு கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகழ் இழந்த குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக்குழி நின்றருள் தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே” என்பர். இத்தகைய பெருமையும் அருமையுமாகிய திருவருளை எளிய நிலையில் வைத்து அடியோரது வாடிய முகம் பார்த்தலாகிய செயல் வடிவில் உரைக்கின்றார்.

2198.

     நாடிநின் றேநிளை நான்கேட்டுக்
          கொள்வது நண்ணும்பத்துக்
     கோடியன் றேஒரு கோடியின்
          நூற்றொரு கூறுமன்றே
     தேடிநின் றேபுதைப் போருந்
          தருவர்நின் சீர்நினைந்துட்
     பாடியந் தோமனம் வாடிநின்
          றேன்முகம் பார்த்தருளே.

உரை:

     பொருள் தேடிப் புதைத்து வைக்கும் பூரியரும் பாடி வருவோர்க்கு ஒன்று ஈகுவர்; நான் கேட்பது பத்துக் கோடியன்று; ஒரு கோடியில் நூகற்றிலொரு கூறுமன்று; நின் சீரை உள்ளத்தே நினைந்து பாடி வருந்தும் என் முகம் பார்த்து அருளுக. எ.று.

     “பாடுவோர்க்கு அருளும் எந்தை என்று” திருஞான சம்பந்தரும், “பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள், இம்மையே தரும் சோறும் கூறையும், ஏத்தலாம் இடர் கெடலுமாம், அம்மையே சிவலோகம் ஆளுதற்கு யாதும் ஐயுறவில்லையே” எனச் சுந்தரும் பிறரும் கூறுவது கொண்டு, யான் நின்னையே நாடிக் கேட்பதானேன் என்றற்கு “நாடி நின்றே நினை நான் கேட்குக் கொள்வது” என்று உரைக்கின்றார். மேலும் நான் கேட்கும் பொருள் பத்துக் கோடி நூறுகோடியல்ல; பேரளவினது எனக் கருதி நீ யான் காணாவாறு மறைவதற்கு என்பார், “நண்ணும் பத்துக் கோடியன்று, ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே” என வுரைக்கின்றார். இரப்பார்க்கு ஈயும் மனம் இன்றிப் பொருள் தேடிப் புதைத்து வைப்பவர் உலகில் உண்டு; அவர் தாமும் தம்மைப் புகழ்ந்து பாடுவோர்க்கு வெறுங்கை காட்டாது சிறிதேனும் ஈகின்றார்கள் என்பராய், “தேடிநின்றே புதைப்போரும் தருவர்” என்று கூறுகின்றார். “அருளாய செல்வன்”, “அருளே உருவாயவன்” எனப் பாராட்டப்படும் நின் மிகுபுகழை நினைந்து பாடுகின்றேன்; நின் அருள் எய்தப் பெறுகிலேன் என்று கூறலுற்று, “நின் சீர் உள் நினைந்து பாடி” என்றும், அதனால் விழைவு நிறைவுறாமையால் மனம் துன்புற்று மேனி வாடியுள்ளேன் என்பாராய், “அந்தோ மனம் வாடி நின்றேன்” என்றும் முறையிடுகின்றார். இரப்பவர் கருத்தறிந்து முடிக்கும் இறையவர் திருமுன், முகன் நோக்கி நிற்க அமையும் எனச் சான்றோர் அறிவிக்கின்றனர்; அடியேன் முகத்தைப் பார்த்தருளவேண்டும்; நினது அருட்பார்வை யொன்றே எனக்குப் பெரும் செல்வப் பேறாகும் என்று உரைப்பாராய், “முகம்பார்த்தருள்” என வேண்டுகிறார். மணிவாசகர், “உடையாய், அடியேனைக் கண்டுகொள்” என விண்ணப்பம் செய்வது காண்க. 'அடியேன் முகத்தைப் பார்வையிடுக அதுவே எனக்கு அருட் பேறாகும்' என இதனால் முறையிடுகின்றார். இதன்கண் ,விழையப்பட்ட திருவருள் நூற்றொரு கோடியின் மேற்பட உயர்ந்த மேன்மையுடையதென்பதை “நண்ணும்பத்துக் கோடியுமன்று” எனக் குறிப்பால் உய்த்துண்ரவைத்து, ஈகின்ற நினக்கு அது, “ஒரு கோடியில் நூற்றொரு கூறுமன்று” என எளிமைப்படுத்தி, “ஒரு கோடியின் கோடி ஒன்றாகிய எண்; அதனை நூறு கூறு செய்யவரும் ஒரு காசளவும் அன்று” என்பது விழைவு வழி நிற்கும் மனம் செய்யும் செயல் திறம்; விழைந்தது பெறற்குச் செய்யும் சூழ்ச்சி; கொடாரைப் பழித்துக் கொடுப்பாரைக் கொண்டாடுவதும் அச் சூழ்ச்சி வகையுள் ஒன்றதல்பற்றி, “கோடி நின்று புதைப்போரும் தருவர்” என உரைக்கின்றார்.

     (28)