29
29. பரந்த அறிவும் தெளிந்த மனமும் உடையவர்கள் தங்கட்குத் துன்பம் தோன்றியபோது வருந்துவது
ஒருபுறம் இருக்க, அத்துன்பம் தோன்றுதற்குத் தம்பால் உண்டான குற்றம் யாது குறையாது எனச் சிந்திப்பர்;
அவர் சிந்தனையில் மனமும் சொல்லும் செயலும் மூன்றும் ஆராயப்படும். இம் மூன்றனுள்ளும் தலைமை
வாய்ந்தது மனம். மனத்திடைக் காணப்படும் குற்றங்களில் ஒன்று, நேர்பெற நின்று அலைவின்றி நினைப்பது
இல்லாமை. ஒன்றை நினைக்கின், அதனைவிட்டுத் தொடர்புடைய பிறிதொன்றைப் பற்றிப் பலவேறு
பொருள்களை நாடி முடிவில் எங்கேயோ சென்று நிற்கும். இது கண்டு ஒன்றி நில்லாப்புன்மை நோக்கிச்
சான்றோர் வருந்துவதோடு அதனால் இன்னல்கள் பல தோன்றி வருந்துவது கண்டு இரங்குகின்றார்கள்.
இத்தகையி இடர் தோன்றித் துன்புறுத்துவதை வள்ளற் பெருமான் காண்கின்றார். மனத்தை நெறிப்படுத்த
விரும்புகின்றார்; நமக்காகவே அதனை நெறிப்படுத்த முயல்கின்றார். நெறிப்படாமை அவர் மனத்தை
அலைக்கின்றது. மனமென்னும் கருவி நாம் செய்து கொள்வதன்று; மேலும் அது, ஏனைச் சொல்லும் உடம்பும்
போல நம் கட்புலனாகும் பொருளும் அன்று, அம் மனம் உடலுக்குள் இருப்பது என்று மட்டும் அறிஞர் கண்டனரேயன்றி
உடற்குள் இன்னபகுதியில் இருக்கிறது என இதுகாறும் யாரும் கண்டதில்லை. ஆகவே, வள்ளற்பெருமான்
அதனைப் படைத்தளித்தவன் சிவன்; அவனை அணுகினாலன்றி மனத்தை நெறிப்படுத்தற்கு வழியில்லை என்று
எண்ணித் துணிகின்றார். அவன் பால் முறையிடுகின்றார்.
2199. தாயாகி னுஞ்சற்று நேரந்
தரிப்பள்நந் தந்தையைநாம்
வாயார வாழ்த்தினும் வையினும்
தன்னிடை வந்திதுநீ
ஈயாய் எனில்அருள் வான்என்
றுனையடுத் தேன்உமையாள்
நேயா மனமிரங் காயாஎன்
எண்ணம் நெறிப்படவே.
உரை: உமையம்மை கணவனே, தாயேனும் சிறிது காலம் தாழ்த்துவள்; தந்தையை வாயார வாழ்த்தினும் மனம் நோவ வைதாலும் பொருள் செய்யாமல், தன்னை அடைந்து “இதனைத் தருக” என வேண்டினால் தாழ்க்காமல் தருவான் என்பது கொண்டு அடியேன் உன்னை அடுத்து என் எண்ணங்கள் நெறி பிறழாமல் இயக்குதற்கு வேண்டி வந்தேன்; நீ மனம் இரங்குதல் வேண்டும். எ.று.
மக்கட்கு அருள் செய்யும் வகையில் தாய் தந்தையர் மனப்பான்மை கண்டு வேற்றுமை தேர்ந்து மொழிகின்றார். தான் பெற்ற மக்கள் ஒன்று வேண்டுவரேல், அதனை நல்கற்கண் தாய் உடனே கொடாது சிறிது காலம் தாழ்ப்பள்; தந்தை அது செய்யான் என்று உரைக்கின்றார். நான் பெற்ற மக்கட்குத் தன்னினும் உற்றவர் பிறர் இல்லாமையால், சேட்படுப்பினும் தன்னையே நாடிவருவர் என்ற எண்ணத்தால் தாய் தனது அருளைச் செய்தற்குக் காலம் சிறிது தாழ்த்துவள் என்பாராய், “தாயாகினும் சற்று நேரம் தரிப்பாள்” என உரைக்கின்றார். தந்தை நிலைமை வேறாதலால், மக்கள் மனம் வேறாகாமை நினைந்து உடன் அருள்புரியக் கருதுவன்; கருதுமிடத்தும் மக்கள் தன்னை வாழ்த்துவதையோ வைதையோ பொருளாகக் கருதமால் அவர்களது மனம் வேறுபடாமை ஒன்றே நினைந்து விரைந்து அருள் செய்கிறான்; இது உலகியல். இதனை “நம் தந்தையை நாம் வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ ஈயாய் எனில் அருள்வான்” என உரைக்கின்றார். வாயார வாழ்த்தினும் என்றதற்கு ஒப்பாக மனம்நோவ வையினும் எனல் வேண்டிற்று. எவ்வகையிலும் தன்னை நாடி வந்தவிடத்து, மக்கள் செயல் அத்தனையும் மனத்தினின்றும் மறைந்தொழிலால் “தன்னிடை வந்து இது நீ ஈயாய் எனில் அருள் வான்” என வுரைக்கின்றார். இவ் வுலகியல் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உன்னை அடுத்தேன், நீ எங்கட்குத் தந்தையாதலால் என வற்புறுத்தற்கு, “என்ற உனையடுத்தேன்” எனக் கூறுகின்றார். உமை பராசத்தியாதலாலும் “கருதரிய உலகபல அண்டங்களைப்” படைத்தளித்த அன்னையாதலாலும், சத்திமானாகிய பரமனை “உமையாள் நேயா” என உரைக்கின்றார். உமையாளிடத்துக் கொண்ட அன்புமிகுதியால் அவள் பெற்ற மக்களாகிய எம்பால் அன்பு செய்க என்பது குறிப்பு. எனது மனமாகிய கருவி யான் செய்து கொள்ளப்படாமல் நின்னால் ஆக்கித் தரப்பட்டதாகலின், அது நன்னெறிக்கண் சென்று நல்வினையே செய்தற்கு அமைத்தருள்க என முறையிடுகின்றார். அதுபற்றியே, “என் எண்ணம் நெறிப்பட மனம் இரங்காய்” என முறையிடுகின்றார்.
இதனால், மன நினைவால் மாண்புறுதற்கு அந்த மனமாகிய உட்கருவி ஒழுங்காக அமையுமாறு அருள்புரிக என வேண்டுகின்றாரென உணர்க. (29)
|