30
30. மக்களினம் மண்ணுலகில் வாழத் தொடங்கிய நாள் முதல்
ஒருவனும் ஒருத்தியும் மனவொருமையுற்றுக் கணவனும் மனைவியுமாய் இயைந்து குடும்பம் நடத்தத் தொடங்கிய
நாள்முதல் இன்றுவரை அவ்வியல்பு மாறாமல் வழிவழியாகி இருந்து வருகிறது. ஓரிடத்தே நிலையாகத்
தங்கி வாழும் திறமின்றி நாடுதோறும் ஊரூராய்த் திரியும் மக்களினமும் உண்டு; எனினும் அவரிடையிலும்
கணவனும் மனைவியுமாகக் கூடிய குடும்ப நிலை உண்டு. காலப் பெருக்கில் மக்களுடைய உணவு உடை முதலிய
கூறுகளில் எத்தனையோ மாற்றங்கள் உளவாயின எனினும் குடும்பவியல் மாத்திரம் இன்றும் மாற்றம்
பெறவில்லை. குடும்பங்கள் ஒருமை நிலை கலங்கிக் கெடுதற்கேற்ற மாற்றங்கள் தோன்றிய
பின்னரும் அவற்றின் நிலை ஓரளவு உருவுகுலையாமல் இருக்கிறது. மக்கள்பால் தமது இனப்பெருக்கம் செயற்பண்பு
இருக்கும் வரை, குடும்ப அமைப்பு இருந்தே தீரும் என்பவருண்டு. இந்நாளைய சமுதாயச் சூழ்நிலையும்
அரசியலுரிமைக் கருத்துக்களும் கணவனையும் மனைவியையும் அவர்பால் தோன்றிய மக்களையும் தனித்தனிச்
சிதறிப் பிரிந்து நீங்குதற்கு வேண்டும் நினைவுகளைத் தோற்றுவித்துள்ளன. புள்ளினமும் விளங்கினமும்போல
மக்களினமும் பிரிந்து உயிர் வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நிலவக்கூடிய சூழ்நிலை
தோன்றற்குரிய காலம் வந்து கொண்டிருக்கிறது.
குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் வாழ்வுக்கு இன்றியமையாத இடம் பொருள் முதலிய தேவை பற்றி
உழைக்க வேண்டியவராவர். உழைப்பின் இடையே எண்ணிறந்த இடுக்கண்களும் இடையூறுகளும் அவர்களைத் தாக்குகின்றன.
எண்ணத்தில் எழுச்சி தோன்றாதவாறு இடர் பல போந்து குடும்பத்தின் ஊக்கத்தை ஒடுக்குவதுண்டு.
பொருளை ஈட்டுவதும் காப்பதும் போல மக்களைப் பெறுவதும் காப்பதும் துன்பமாதலைக் கண்டு இனம்
பெருக்கும் உணர்ச்சி மலராத இளமையிலே துறவு பூண்பது சிறப்பென்று அறிவுறுத்தும் சமயகுரவர்கள் தோன்றிக்
குடும்ப வாழ்வின் வலிமையை மெலிவிக்க முயல்கின்றனர். இங்ஙனம் ஒருவரையொருவர் துணையென நம்பி
நிறுவிய குடும்பம், அன்பால் மனப் பிணிப்புற்று உருவாகிய குடும்பம், மக்கட்பேற்றால் நின்று வற்றாத
நிலை பேறெய்தலாம் என எண்ணிக் கால்கொண்ட குடும்பம், நாளடைவில் பொருட் குறைவாலும் இன்பநுகர்ச்சி
இடர்ப்பாட்டாலும் அறவுணர்வு திறம்புதாலும் துன்ப நிலையமாகிறது; குடும்பம் இடும்பைக் கொள்கலம்
இடும்பைக்கு இலக்கம் ( இலக்கு ) குடும்பம் என வாழ்ந்த அறவோர் மதித்துரைப்பது மெய்யென
விளங்குகிறது. மண்ணியல் வாழ்வின் இயல்பு இதுவாயின் இது வேண்டாமே என வெறுக்கும் அளவுக்குத்
துன்பத் தீயெழுந்து சுடுகிறது. அச் சூட்டில் உணர்வின்கண் ஓர் ஒளி தோன்றுகிறது, “உன்னை வாழச்
செய்த ஒண்பொருள் ஒன்று உண்டு; உடம்பொடு நிற்கும் வாழ்வளித்த முதற்பொருள், உன் வாழ்முதல்
அவ்வொண்பொருள்; அதனையன்றி இத் துன்பத்துக்கு மருந்தில்லை; மாற்றில்லை” என்று ஒருபால் உணர்த்துகிறது.
இடுக்கண் அடுக்கி வந்து அலைக்கும்போது “வாழ்முதலை” மறந்து மனம் மயக்கமெய்தி வருந்துகிறது.
மனம் துணையாக அறியும் செயல்புரியும் அறிவு அயர்ந்து போகிறது.
இந் நிலையில் இடர்க்கடலின் நீந்தி இன்பக் கரையடைதற்கு வேண்டும் அறிவும் கருவியும் அளித்துள்ளோமாதலின்,
தெளிந்து செயல் புரிவது இவ்வுயிரின் கடன் என்ற வாழ்முதலாகிய முதல்வன் அருட் பார்வை
செலுத்துகின்றான். அவன் உதவிய கருவிகள் உண்மையாக உழைத்து ஒளி காணாது ஓய்ந்து அயரும்போது வேண்டும்
உதவி புரிவது தான் இறைவனாகிய ஒண்பொருட்கு, ஒட்பம். அதனை உணராது நொந்து வருந்தும் மக்கள்
பொருட்டு உணர்த்துரைக்கும் வள்ளற்பெருமான், துன்பத்தை நீக்கிக்கொள்வது அறிவுடைய மக்களுயிர்க்கு
அடுத்ததே; அச் செயற்கு வேண்டிய அறிவை இடர்களாலாகும் இருள் போந்து மறைக்கிறது; அம் மறைப்பு
நீங்க நின் அருட்பார்வையின் ஞானவொளி நல்க வேண்டுமென நயந்து முறையிடுகின்றார்.
2200. நடும்பாட்டை நாவலன் வாயத்திருப்
பாட்டை நயந்திட்டநீ
குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப்
பாட்டையும் கொண்டெனுள்ளத்
திடும்பாட்டை நீக்கிலை என்னினுந்
துன்பத் திழுக்குற்றுநான்
படும்பாட்டை ஆயினும் பார்த்திரங்
காய்எம் பரஞ்சுடரே.
உரை: பரஞ்சுடரே, நாவலன் வாய்த் திருப்பாட்டை நயந்த நீ என் தமிழ்ப் பாட்டையும் கொண்டு என் உள்ளம் படும்பாட்டை நீக்கிலை; ஆயினும் துன்பத்தால் இழுக்குற்று நான் பாடும் பாட்டைத் திருக்கண்களால் பார்த்தருள்க. எ.று.
நடும்பாட்டம் என்பது நடும்பாட்டை என வந்தது, வயல் வளத்தால் நாற்று நட்டு உழவுப் பெரும்பயன் நல்கும் நாவலூர் என்றற்கு “நடும்பாட்டை நாவல்லன்” என்று சுந்தரரைக் குறிக்கின்றார். நாவலன், நாவலூர் என்று ஊரினன்; நாவலூர் நாவல் என வழங்கும்; சுந்தரமூர்த்திகளே “வளவயல் நாவல்” (14 : 11) என உரைப்பர். நாவலூர் வயல் நலத்தால் மேன்மை பெற்றது என்றற்கு, “வளர்பொழில் சூழ்வயல் நாவலூர்” (38 : 10) எனவும் “நலங்கிளர் வயல் நாவலூர்” (57 : 12) எனவும் பல பதிகங்களிற் பாராட்டி யுரைக்கின்றார்; சுந்தரரை இறைவன் தடுத்தாட் கொண்டபோது, “நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூ மறை பாடும் வாயார்” என்று சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது கொண்டே, சிவனுக்குச் சுந்தரர் பாட்டில் விருப்பு மிகுதி என்று அறியலாம். சிவப்பரிகாச சுவாமிகளும், “படியிலா நிண்பாட்டில் ஆரூர நனிவிருப்பன் பரமன்” என்று சுந்தரரை நோக்கிச் சொல்வது, வள்ளலார் கருத்தை வலியுறுத்துகிறது. குடும்பப்பாடு, குடும்பாடு என மருவிற்று. குடும்ப வாழ்வை ஏற்ற வழி எய்தும் துன்பங்களைப் பொறுத்தலும் அவற்றை நீக்குதற்குரிய முயற்சியும் உரிமையும் கடமையும் யாவும் மக்களுயிர்க்கு இயற்கையறமாதலின், வாழ்முதலாகிய இறைவன் புகுந்து நீக்குவது முதன்மைப் பண்பாகாது; இயற்கையறத்தை இனிது செய்தற்கு வேண்டும் செவ்விய கருவி கரணங்களை வழங்கியருளியிருக்கின்றானன்றோ? நீக்குவதை அவனே மேற்கொள்வானாயின், மண்ணில் வாழச் செய்வது பயனில் செயலாம் என்பது எண்ணியே வள்ளற் பெருமான் “குடும்பாட்டை மேற்கொண்ட என் உள்ளத்து இடும்பாட்டை நீக்கிலை” என எடுத்துரைக்கின்றார். இடும்பாடு - இடும்பை. பாடு - துன்பம். துன்பம் ஓர் அளவில் நின்று சுடும்போது, உயிர் அறிவு மாசு நீங்கி விளக்கமெய்தும்; அளவிறந்து தாக்கும்போது அறிவு அயர்ச்சியுற்று, மருட்சியால், இருளடைந்து தவற்றுக்கு உள்ளாகி விடும்.
முதல்வனது அருட்பார்வை படுமாயின் அறிவின்கண் தெளிவும், செயலில் திட்பமும் சிறக்கும் என்பதுபற்றி, “துன்பத்து இழுக்குற்று நான்படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய்” என வேண்டுகிறார். அறிவினுள் தங்கி அதன் எல்லைக்குள் அடங்காது மேனின்றொளிரும் நல்லொளி படரும் என்று ஞானக்கருத்தை யுட்கொண்டு “பரஞ்சுடரே” என்று பரவுகின்றார். “அறிநீர்மையில் அறியும் அவர்க்கு அறியும் அறிவருளும் குறி நீர்மையர்” (இடும்பாவனம்) எனத் திருஞானசம்பந்தர் உரைப்பது வள்ளற்பெருமான் இனிதறிந்த ஒன்று; வள்ளலார்க்கு அவர் ஞானாசிரியர்.
இதனால், குடும்பத் துன்பத்தையும் அது காரணமாகப் பெருகும் மனநோயையும் போக்கிக்கொள்ளற்கு அருள்நோக்கம் செய்தருள்க என முறையிடுவது இப் பாட்டின் உள்ளுறை என உணர்க. (30)
|