31

     31. இறைவன் அருள் பெறவேண்டுவோர்க்கு மனத்தின் கண் திண்மை வேண்டும். வேண்டியது கிடைக்காதபோது வெறுப்புற்று இறைவனை நொந்து கொள்பவர் பலர். அந்த மனப்பண்பு அமைதல் கூடாது. சிலரை அடுத்து யாதேனும் ஓர் உதவி நாடியபோது அவர் ‘அயலே சென்று கேள்; எமக்கு ஆகாது’ என்பர். அவரைக் காணின் எனக்கு நகைப்புண்டாகும். அது மாத்திரமன்று, பிறரைக் கேட்டுப் பெறுவதை விரும்பாயாயின் வெட்டிப் போடுவோம் என்றாலும் அஞ்சிப் பிறரை அடைந்து கேட்கமாட்டேன்; ஏன்? பிறரையடைந்து இரந்து நின்று கேட்பது மானக் கேடு; கேட்ட வழி மறுத்து அயலவரைக் கேள் என்பவரைக் காண்பது நகைப்புக்குரிய காட்சி; நாண்விட்டு மானம் மதியாமல் ஒருவர்பால் சென்று இரந்துகேட்பது ஒரு சாரார் நன்று என்பர். “இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உயிர் உய்க” என்பது அவர் கொள்கை. ஆனால், யான் மானமின்றி இரந்து கேட்பதாயின் சிவபெருமானை யன்றிப் பிறரைக் கேட்பதில் மனங் கொள்னேன்; கேளேன் ஒருகாலும் பிறரை என நீட்டியுரைப்பேன்-பாட்டாலும் பாடி நிலைநிறுத்துவேன் என வள்ளலார் வெளிப்பட மொழிகின்றார்.

2201.

     ஏட்டாலும் கேளயல் என்பாரை
          நான்சிரித் தென்னைவெட்டிப்
     போட்டாலும் வேறிடம் கேளேன்என்
          நாணைப் புறம்விடுத்துக்
     கேட்டாலும் என்னை உடையான்
          இடஞ்சென்று கேட்பனெள்றே
     நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ்
          சொல்லி நிறுத்துவனே.

உரை:

     அயலாரைக் கேள் என்பவரைக் கண்ணாற் கண்டவிடத்து எள்ளிச் சிரிப்பேனாதலால், என்னை வெட்டிப் போட்டாலும் வேறிடம் சென்று யாதேனும் ஈயுமாறு கேளேன்; நாணத்தை விட்டுக்கேட்பதாயின் என்னை உடையானாகிய சிவன்பாற் சென்று கேட்பேன்; இதனை நாவால் நீட்டிப் பேசிப் பாட்டால் உரைத்து என் சொல்லை நிலைநாட்டுவேன்; இஃது என் மனக் கோள். எ.று.

     உதவி நாடிக் கேட்டவர்க்கு இல்லையென வாயால் உரைத்தற்கு மாட்டாமல், ஏட்டில் எழுதி விடுப்பது சிலர் இயல்பு. அவரது நிலைமை இகழ்ந்து நகையாடற்குரியது என்பது பற்றி, “ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்துப் புறக்கணிப்பேன்” என வுரைக்கின்றார். அவர் சொன்னார் என்று நான் பிறரிடம் சென்று கேட்பதில்லை; கேளாவிடின் துன்புறுத்துவேன் என்றாலும் நான் அதற்கு அஞ்சேன் என்றற்கு, “என்னை வெட்டிப்போட்டாலும் வேறிடம் கேளேன்” எனச் சொல்லுகின்றார். இரத்தல் மானக் குறைவு: கொடுப்பது நன்று என்பது ஈகையாளர் கொள்கை. “நல்லாறெனினும் கொளல் தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்பர் திருவள்ளுவர். ஆவிற்கு நீர் என்று இரப்பது நாவுக்கு மிக்க இளிவு என அறநூல் கூறுதலுண்மையின் “நாணைப் புறம் விடுத்துக் கேட்டாலும்” என உரைக்கின்றார். கேட்பதானாலும் என்பது, கேட்டாலும் என வந்தது. இறைவன் நம்மை உடையானாதலின், அவன் திருமுன் நின்று கேட்பது நாணக் குறைவன்று; அதுவும் நாண் குறைவுதான் என்பார் உளராயின் அதனைப் பொருளாகக் கொள்ளாது கேட்பதாயின் சிவனொருவனையே கேட்பேன்; பிறரிடம் சென்று ஒருகாலும் கேளேன் என உறுதி கூறுகின்றார். உறுதி கூறுவோருள் நாவால் நீட்டியுரைப்பவரும் பாட்டில் பாடுபவரும் உண்மையின், “நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும் சொல்லி நிறுத்துவன்” என வன்புறை மொழிகின்றார். நிறுத்துவன் என்பது நிலம் பெயரினும் சொற்பெயராமை நிலை நாட்டும் குறிப்பில் விளங்குகிறது.

     (31)