7
7.
அருளைத் தெளிதல்
34. உயிர் வாழ்க்கைக்கு வேண்டப்படுவன பல; மக்களறிவு பெருகப் பெருக உலகியல் நுட்பங்கள்
வெளிப்படுகின்றன. புதுப்புதுக் கருவிகளும் பொறிகளும் தோன்றி மக்களின் உடலுழைப்பைக் குறைத்துக்
காலத்தையும் இடத்தையும் சுருக்கி நெடிது வாழ்தற்கு வழிசெய்கின்றன. இந்த நலத்தைக் கண்டு மகிழும்
மக்களுயிர் இதனையே தொடர்ந்து தம்முடைய உடல் பொருள் உயிர் என்ற மூன்றையும் செலுத்தி உலையா
முயற்சி மேற்கொண்டிருக்கிறது. இக் கருவிகளையும் பொறிகளையும் கண்டறியும் மக்கறிவுக்கு ஊக்கமும்
உயர்வும் எய்தும் வகையில் அவர்தம் உடற்குள் அமைந்த கருவிகள் காரணமாவதையும், அவற்றை ஒழியாது
கலந்து நின்று இயக்கும் திருவருளையும் எண்ணுவதில்லை. “திருவருளினும் பெரியது அகிலத்தில் வேறில்லை”
என்று உமாபதி சிவனார் கூறினார். அவர்க்குப் பன்னூறாண்டுகட்குமுன், காரைக்காலம்மையார்,
“அருளே உலகெல்லாம் ஆள்விப்பதும்” என்றார். இவ்வுலகில் பொருள் இல்லார்க்கு வாழ்வில்லை;
ஆயினும், பொருட்செல்வத்தினும் அருளே செல்வத்துட் செல்வம் என்றார் திருவள்ளுவர்.
இவ்வாறு வழிவழியாகச்
சான்றோர் வற்புறுத்திவரினும், மக்கள் வாழ்வு பொருளே பொருள் எனக் கருதிச் செல்வதைக் கண்ட
வடலூர் அடிகள் திருவருளை நோக்குகின்றார். பொருளே கருதும் போக்கையும் நோக்குகின்றார்.
பொருட்கும் அடிப்படை அருளே எனத் தெளிகின்றார். அவ்வருள் இறைவனிடத்தன்றிப் பிறர்பால் இல்லாமையை
எண்ணுகின்றார். அந்த எண்ணம் பிறரை நினையாது பரம்பொருளிடத்தே செலுத்துகிறது. உலகில்
அருள்விளக்கம் நிலவாமையால் அடிகளார் மனம் துயர் மிகுந்து வருந்துகிறது. அவரது அருட்கண்ணுக்கு
இறைவன் அறிவதும் தெரிகிறது. தெரிந்திருந்தும் அருள் ஒளிசெய்யாமை முறையன்று என்பார் போல
இரங்குகின்றார்.
2204. தெருளும் பொருளும்நின் சீரரு
ளேஎனத் தேர்ந்தபின்யான்
மருளும் புவனத் தொருவரை
யேனு மதித்ததுண்டோ
வெருளும் புவியில் துயரால்
கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கருமணி கண்டா
அறிந்தும் இரங்கிலையே.
உரை: பொருளாவது நின், திருவருளே எனத் தேர்ந்துணர்ந்தேன்; அதனால், உணராத பிறரை மதிப்பதொழிந்தேன்; அருள் விளக்கமில்லாமையால் உலகவர் எய்தும் துயர் கண்டு மனம் வருந்துகிறேன்; இதனை அறிந்தும் நீ இரங்கி அருளொளி நல்குகின்றாய் இல்லையே எ.று.
செய்யத் தகுவன யாவை எனச் சிந்தித்துத் தெளியுங்கால் உலகியற்கு வேண்டப்படுவது எனத் தெளியப்படுவது பொருளாதலால் அதனைத் “தெருளும் பொருள்” என்று கூறுகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று திருவள்ளுவரும், “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்”, “வறியார் இருமை அறியார்” என்று வாதவூரடிகளும் கூறுதல் காண்க. பொருள் செய்தற்குரிய அறிவும் ஆற்றலும் திருவருள் வயத்தனவாதலைக் கண்டமையால், “தெருளும் பொருளும் நின் சீரருளே எனத் தேர்ந்தபின்” என்று குறிக்கின்றார். மருள் - பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் மயக்கம். அம் மருட்சியால் அருளைத் தெளியாது ஏனைப் பொருள்களையே பொருள் என்று மதிப்பவர் கூட்டத்தை “மருளும் புவனம்” என்று தெரிவிக்கின்றார். அவரை மதிப்பது அவரது மருட்சியை வியந்து போற்றுவதாக அமைவதால், அதுபற்றி அவரை நினையாதொழிந்தமை தோன்ற “ஒருவரையேனும் மதித்ததுண்டோ” என்று இறைவனைக் கேட்கின்றார். மனத்துள் நிகழ்வதை உள்ளிருக்கும் பரமன் நன்கு அறிவன்; அதனால்தான் “மதித்தது உண்டோ” என்று வினவுகின்றார். மதிக்கவில்லையாயினும், அருளே பொருள் என மதியாமையால் அவர் படும் துன்பம் தன்னைத் துயரத்தில் ஆழ்த்துவதால் மனம் கலங்கி வெதும்புகிறது என்று கூறுவராய், “வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்” என்று விளம்புகிறார். அவ் வெப்பம் தீர நின்னுடைய தண்ணிய அருளைத் தருதல் வேண்டும்; அறிந்தும் அறியாதீர்போல இரங்குகின்றீர் இல்லை என்பார் “அறிந்தும் இரங்கிலையே” என்று வருந்துகிறார். கருமணி போன்ற கண்டத்தை (கழுத்தை) உடையாய் என்பவர், கருமையை விளக்குதற்கு “இருளும் கருமணி கண்டா” என்று அழைக்கின்றார். தேவர்களின் சிறுமை கண்டு இரக்கத்தால் நஞ்சுண்டு அமுதளித்த அருளிப்பாட்டை நினைவுபடுத்துவார் போலக் 'கருமணி கண்டா' என்று கனிந்துரைகின்றார்.
இத் திருப்பாட்டல் மக்கள் தெளிந்து பெறற்குரியது திருவருளே என்பது பயனாதல் உணர்க. (34)
|