35

      35. மண்ணக வாழ்வில் மக்கள் எய்தி வருந்தும் துன்பங்கட்குரிய காரணங்களை எண்ணுகின்றார். நிலம் காரணமாகவும் பொருள் காரணமாகவும் பெண் காரணமாகவும் வேண்டியாங்கு எய்தாமையாலும் அது பற்றிப் பிறந்த கருத்து வேற்றுமையாலும் வெறுப்பாலும் பகையாலும் அவற்றால் உடற்குவந்த நோயாலும் துன்பம் மிகுந்து துயர் அடைகின்றார்கள். நிலம் சுருங்கினும் பொருள் குறையினும் பெண்ணாசை உடலளவாய் நின்று குறையாது உள்ளத்தை பிணித்துக் கொண்டிருப்பது, உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் இல்லையாயினும் பெண்ணுறவு விடுபடுவதில்லை. திருவள்ளுவரும் இதனை நன்கு எண்ணி, பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்டாகும் தொடர்பை “உடம்போடுயிரிடை என்ன மற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு” எனப் பெண் இன்பத்தைப் பேணும் ஆடவன் ஒருவன் எண்ணுவதாகக் கூறுகின்றார். வருந்துன்பம் எல்லாம் உடம்பையே தாக்குகின்றன; ‘இடும்பைக்கு இலக்கம் உடம்பே’ என்று திருவள்ளுவரே உரைக்கின்றார். இதனால் உடம்பு துன்பத் தாக்குதலால் நோயும்போது அதனால் விளையும் துன்பத்தை உயிர் நுகர்கிறது. துன்பத்தைக் காரணமும் வாயிலும் தன்னின் வேறாகிய உடம்புதான் என்பதை உயிர் அறிகிறது; நன்கு உணர்கிறது எனினும் அவ்வுடம்பை உயிர் விடாது பற்றிப் பேணுவதிலே கண்ணும் கருத்துமாயிருக்கிறது. இதனையும் திருவள்ளுவர் “துன்பம் உழத் தொறும் காதற்று” என்று மூன்று சொற்களால் வெளிப்படுத்தி விடுகின்றார். நிலத்தால் வருபயனையும் பொருளால் பெறுநலத்தையும் எய்தியவன் முடிவில் பெண்ணின்பத்தில் தோய்ந்து அமைதி பெறுகிறான்; அதனைப் பெருக்குதற்கே அவன் ஏனையிரண்டையும் பெற உழைக்கின்றான். சமுதாயத்திலுள்ள பிறருள்ளும் தனக்குரிய பெண்ணின் உறவினரைப் போற்றிப் பேணுவதில் அவனுடைய மன மொழி மெய்கள் மிகுதியும் ஈடுபடுகின்றன. “விண்ணினோடு அமிர்தம் விலைச் செல்வது பெண்ணினின்பம் பெரிது” என்று பேரரசனாய்ப் பிறங்கிய சச்சந்தன் பேசுகிறான் ( சீவக. 994 ). இங்ஙனம் பெருமைக் கெல்லையாய்க் கருதப்படுவது பெண்ணின்பம் எனின், அதனால் விளையும் துன்பமும் பெரிதென்பது அதனோடு ஒப்ப உயர்ந்தோங்கித் தோன்றுகிறது. அதனுடைய பெருமையையும் வன்மையையும் நோக்கின் பெருமை சான்ற மக்கட் பிறப்பினர் அனைவரும் அதன் எதிரே மிகமிக எளியராய்த் தோன்றுகின்றனர். அவர்களுடைய அறிவம் அருமையும் ஆற்றலும் யாவும் பெண்ணின்பத்துக்கு அடிபணிந்து மடிந்து கெடுகின்றன. இங்ஙனம் பெண்ணால் மயங்கி எய்தும் பேதுறவை, துன்பத்தைப் போக்குதற்குத் திருவருளின் துணையன்றி வேறு யாது இல்லை என்பது தெளிவாகிறது. இறைவன்பால் அடிகள் முறையிடுகின்றார்.

2205.

     பெண்ணான் மயங்கும் எளியேனை
          ஆளப் பெருங்கருணை
     அண்ணாநின் உள்ளம் இரங்காத
          வண்ணம் அறிந்துகொண்டேன்
     கண்ணார் உலகில்என் துன்பமெல்
          லாம்வெளி காணிலிந்த
     மண்ணா பிலத்தொடு விண்ணுடுங்
          கொள்ளை வழங்குமென்றே.

உரை:

     பெருங்கருணை அண்ணா, எளியேனை அருளிக் காத்தற்கு நின் உள்ளம் இரக்கம் கொள்ளவில்லை; அதற்குக் காரணத்தை அறிந்து கொண்டேன்; எனக்குள் கிடந்து நிறைந்திருக்கும் துன்பம் அனைத்தையும் வெளிப்படுவத்தினால், அவை மண், விண், பாதலம் ஆகிய மூவகையுலகங்களையும் கொள்ளையாகக் கொண்டு விழுங்கி ஏப்பமிடும் அத்துணைப் பெரியன. எ.று.

     பெண்ணின்பம் மக்களின் அறிவை மயக்கி ஆற்றலைக் குறைத்துத் தனக்கு எளியதாக்குவதுபற்றி, “பெண்ணால் மயங்கும் எளியேனை” என எடுத்துரைக்கின்றார். இங்ஙனம் எளிமை எய்தும் திறத்தை, “தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தம் என்று மலைத்தறிவாரில்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும், சிறுமான் விழியால் அழிவுற்று மயங்கினனே” என்று தலைமகன் கூற்றில் வைத்துத் திருவாதவூரடிகள் உரைப்பது காண்க. (திருக்கோ. 25). “முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை, எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள், அரிமதர் மழைக்கண் காணாவூங்கே, நயனும் நண்பும் நாணும் நன்குடையும், பயனும் பண்பும் பாடறிந்தொழுகலும் நும்மினும் அறிகுவென் மன்னே” (நற். 160) என்று சங்கச் சான்றோரும் தலைமகன் கூற்றாக வுரைக்கின்றார்.

     இஃது அறிவழிந் தெளிமையானது கூறிற்று; “ஒண்ணுதற்கு ஒ! உடைந்ததே ஞாட்பினுள் நண்ணுரும் உட்கும் என் பீடு” என்ற இத் திருக்குறள் ஆற்றலழிவு கூறுகிறது. அண்ணன் - தலைவன். எளிய பெருங் கருணையுடைமையால் எல்லாரும் அணுகிக் குறை வேண்டற்குரிய காட்சியுடையன் என்ற பொருளையும் தருதலின், “பெருங்கருணை அண்ணா” என வுரைக்கின்றார். பெருங்கருணையால் அண்ணாதற் கமைந்தவன், பெருங்கருணை யண்ணன்; அண்ணன் என்பது ஈறுகெட்டு அயல் நீண்டு அண்ணா என விளியேற்றது, னகரவீற்று உயர்திணைப் பெயர் இவ்வாறு விளியேற்பது இலக்கணத்துள் விளமரபு. வண்ணம், ஈண்டுக் காரணத்தின் மேற்று. கண்ணார் உலகு - இடம் நிறைந்த, விரிந்த உலகம், உள்ளத்தே இருப்பனவாதலின் 'வெளிகாணில்' என்று இசைக்கின்றார். காணில் என்றது, காட்டவும் காணவும் கூடாதவை என்றற்கு. துன்பம் “கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு” என்பர் பரிமேலழகர் (குறள் 630 உரை). மண்ணா என்பதன் ஈற்று ஆகார இடைச்சொல் மண்ணுலகுதானா, ஏனைக் கீழுள்ள பாதலவுலகையும் மேலுள்ள விண்ணுலகையும் தன்னுட் கொண்டு மேம்படும் என்ற குறிப்புடையது. மண்ணும் பாதலமும் தனக்கு இடமாதலின் அவற்றைத் தன்னுட் கொண்டொழிவது துன்பத்துக்கு ஒக்கும்; தனக்கு மாறாய இன்பம் தரும் பொருளே நிறைந்த விண்ணுலகைத் தன்னுட் கோடல் ஆகாதே எனின், அற்றன்று; அங்குள்ள சிந்தாமணி, தெள்ளமிழ்தம் ஆகியவற்றைக் கீழ்ப்படுத்தும் இயல்புடையது துன்பத்துக்குத் தாயாகிய பெண்ணின்பம்; “சிந்தாமணி தென்கட லமிர்தம் தில்லையான் அருளால் வந்தால் இகழப்படும்” (திருக்கோ. 12) எனத் தலைவன் கூற்றாகத் திருவாதவூரடிகள் உரைப்பது காண்க. “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பின் புத்தேன் நாடும் இரண்டும் தூக்கின் சீர்சாலாவே” (குறுந். 101) எனச் சான்றோரும் கூறுவது நோக்கத்தக்கது.

     இதனால் பெண்பாற் செல்லாதே நின்பாற் செல்லும் மணமருளுக என அடிகள் வேண்டுவது கருத்தாதல் அறிக.

     (35)