36

       36. உலகப் படைப்பின் உயரிய நோக்கத்தையும், அதன்கண் உடம்பொடு கூடி வாழ்வாங்கு வாழச்செய்த வண்மையையும் நினைந்து பரவும் வடலூர் வள்ளல், வாழ்க்கையில் இடும்பைகள் அடுக்கி வந்து தாக்கும் கொடுமையை எண்ணுகிறார். இன்பமே நுகர்விக்கும் ஏற்றமுடைய சிவத்தின் திருவருள் இத் துன்பத்திற்குக் காரணம்மாகாது; திங்கள் ஒளியில் தீத்தோன்றாது என்பர் சங்கச் சான்றோர் (கலி. 41) அற்றாக, துயரம் போந்து சுடுதற்குக் காரணம் காணுகின்றார். அருளே நினைந்து, அருள் மழையில் நனைந்து அருளே மொழிந்து அருள்நலமே கண்டு வாழும் அவர்க்குக் காரணம் புலனாகவில்லை. யாவர் கண்ணுக்கும் புலப்படாது தீண்டி வருத்தும் பேய்போலத் துயரம் தோன்றி வருத்துகிறது எனக் கருதுகிறார். இன்பத்துள் இன்பமும் துன்பத்துள் துன்பமும் உறுதல் முறையேயன்றி இன்பத்துள் துன்பம் தோன்றுதல் முறையாகாது; மற்று, விறகிடைத் தோன்றி அவ்விறகையே பற்றி அழிக்கும் தீப்போல இன்பத்துள் துயரம் தோன்றுவது வழக்குப்போலும் என நினைக்கின்றார். “வருத்த மிகுதி சுட்டுங்காலை, உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்” என்ற தொல்காப்பியத்தை நினைவு கூர்ந்து அமைகின்றார். இனிய செவ்விய முறையில் வளர்க்கப்படும் நாய் வெறி கொள்வது நினைவில் எழுகிறது. இனிய தூய சூழ்நிலையில் வளர்ந்து முதுமை எய்தினும் நாயை வெறி பற்றுவது உலகியல் வழக்கு. இருளின் நீங்கி இன்பம் பெறற்பொருட்டு அமைந்த இவ்வுலக வாழ்வில் துயரமாம் பேய் தோன்றித் துன்புறத்துகிறது எனத் தெளிகிறார். தாம் வளர்த்த நாய் வெறிகொண்ட வழி அதனைக் கட்டிவைத்துப் பேணுவதையே காப்பவர் செய்கின்றதை நோக்குகிறார்; அது நேரிது எனக் கருதுகிறார். துயரமாம் பேய் பற்றிக் கொண்டபோதும், இறைவனாகிய நீ அப் பேய்ப்பிடி நீங்குங்காறும் என்னைப் பேணிக் காத்தல் வேண்டும் எனச் சிவன்பால் முறையிடுகின்றார்.

2206.

     நெறிகொண்ட நின்னடித் தாமரைக்
          காட்பட்டு நின்றஎன்னைக்
     குறிகொண்ட வாழ்க்கைத் துயராம்
          பெரிய கொடுங்கலிப்பேய்
     முறிகொண் டலைக்க வழக்கோ
          வளர்த்த முடக்கிழநாய்
     வெறிகொண்ட தேனும் விடத்துணி
          யார்இவ் வியனிலத்தே

உரை:

     திருவருள் நெறி பற்றினாரடையும் நிலையமாகிய நின் திருவடிக்கு ஆட்பட்டு நிற்கின்ற என்னைக் குறிக்கொண்டு விளங்கும் வாழ்க்கைக்கண் துயரம் எனப்படும் கொடிய துன்பப்போய் பற்றி முறி கொண்டு வருத்துவது வழக்கு முறையாகுமா? ஆகாதன்றோ! வழக்கே எனின், தாம் அன்போடு நல்ல உணவிட்டு வளர்ப்ப முதிர்ந்த முடப்பட்ட கிழநாய் வெறிகொண்டதாயினும் இவ்வகன்ற உலகத்தவர் கைவிட நினைக்கமாட்டார்; ஆதலால் அடியேனைக் கைவிடலாகாது. எ.று.

     நெறிகண்ட நின் திருவடி - அருள்நெறி பற்றிச் செல்பவர் சென்று சேரும் இன்பநிலையமான திருவடி. தாமரை மலர் போல்வது பற்றித் 'திருவடித் தாமரை' என்று உருவகம் செய்கின்றார். ஆளாதல் குறித்து அருளப்பட்ட வாழ்க்கை என்றற்குக் “குறிக்கொண்ட வாழ்க்கை” என்று கூறுகின்றார். உள்ளத்தில் துயர்ம தோய்ந்த வழி நெறி கோடுவதும் துன்பம் பெருகுதலும் உளவாதலின் “துயராம் பெரிய கொடுங்கலிப் பேய்” என்று மொழிகின்றார். முறி கொண்டலைத்தலாவது, மரத்திலிருந்து முறித்த கொம்பு கொண்டு அடித்து வருத்துவது. “உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்” எனச் சான்றோர் வழக்குண்மை காட்டினும், அது நல்வழக்காகாது என்பாராய் “வழக்கோ” என எதிர்மறைக் குறிப்புப் புலப்பட மொழிகின்றார். வழக்கென்று கருதி என் துன்பம் துடைக்காமல் கை விடலாகாது என்று வள்ளலார் மொழிகின்றார். இதற்கோர் உலக வாழ்க்கை எடுத்துரைப்பாராய், “வளர்த்த முடக்கிழநாய் வெறி கொண்டதேனும் இவ்வியனுலத்தவர் விடத்துணியார்” என்று சொல்லி அருள் புரிதல் வேண்டும் என முறையிடுகின்றார்.

     இதனால் அருட்கடலான நீ என்னையும் ஒதுக்காதே ஆட்கொள்ளல் வேண்டும் என்று வேண்டுகின்றார்.

     (36)