37

       37. மக்கள் பெறும் செல்வங்கள் இருவகைப்படும்; ஒன்று உலகிடைப் பெறும் பொருட் செல்வம், பொருட் செல்வம் இல்வழி இவ்வுலகில் வாழ்வில்லை. இதுபோலவே இறைவன்பாற் பெறலாகும் திருவருளும் செல்வமாகும். நிலவுலக வாழ்விற்குப் பொருட் செல்வம் போல மேலுலக வாழ்விற்கு அருட்செல்வம் சிறந்து விளங்குவது, “அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்றார் திருவள்ளுவர். 

      வாழ்வார்க்கு வாழ்வுதரும் வகையில் செல்வம் மிகச் சிறந்த ஒன்றாயினும், தன்னைப் பெற்றாரை மயக்கி இறுமாப்பு எய்துவிக்கும் இயல்பு இதற்குண்டு. உலகியற் பொருட்செல்வம் பயக்கும் இறுமாப்பு தன்னையுடைய செல்வனது அறிவை மயக்கிக் கண்பார்வையைச் சுருக்கிக் காணப்படுவர் யாவராயினும், அவரைத் தம்மிற் சிறியராக மதிக்கச் செய்யும்; அவர் சொற்கள் எத்துணை அறிவும் அறமும் நிறைந்திருப்பினும் அவற்றை ஏவாது எள்ளிப் புறக்கணிக்கச் செய்யும். இவ்வாறே தெய்வவுலத்துத் தேவர்களையும் இச் செல்வம் இக் குறைபாடுகட்குள்ளாக்கி இறமாப்பால் ஈடழியச் செய்யும்; செத்துப் பிறக்கின்ற தமது சிறுமையை எண்ணாமல், “மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல் தேவரென்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே” (திருச்சத. 4) என்று மணிவாசகர் இரங்கி மொழிகின்றார். இவற்றை நோக்குங்கால் செல்வத்துக்குத் தன்னையுடையார்க்கு  இறுமாப்பு உண்டு பண்ணுவது இயல்பாவது புலப்படும். இந்நிலையில் அருளும் செல்வம் எனப்படுதலால், அதற்கும் இறுமாப்பு விளைவிக்கும் தன்மையுண்டென்று காணலாம். அருளுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இருத்தலால், இரண்டும் பயக்கும் இறுமாப்பில் வேறுபாடு உண்டென்று கொள்ளல் வேண்டும். “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்பது  திருக்குறள். பூரியாராகிய கீழ் மக்கள் கைப்பட்டுக் கீழ்மையுறுவதும் போருட்செல்வத்துக்கு இயல்பு; ஆனால் அருட்செல்வம் பூரியார் கைப்படாது உயர்ந்தோர்பாலே இருப்பது; அது பற்றியே அதனைச் “செல்வத்துட் செல்வம்” என்று சிறப்பிக்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். பொருட் செல்வத்தை ஒருவர் இழப்பின் மீளவும் பெற்றுக் கொள்வர்; அருட் செல்வத்தை இழந்தால் மீள ஒரு காலும் பெறலாகாது; “அருளற்றார் அற்றார்; மற்று ஆதல் அரிது” எனத் திருவள்ளுவப் பெருமான் அருளின் அருமைப்பாட்டை வரைந்து கூறுகிறார். அற்ற வழி மீளப் பெறலாகா அருமையும், உயர்ந்தோர்க் கன்றிப் பிறர்க்கு செல்வமாகப் பெருமையும் உடைய அருட் செல்வம் பயக்கும் இறுமாப்பு, பொருள் பயக்கும் இறுமாப்பின் வேறாய் அதனோடு ஒவ்வாத ஏற்றமும் எழிலும் உடையதென்றும் தெளிதல் வேண்டும். அருள் இன்ப வெள்ளத்தால் பெறலாகும் இறுமாப்பின் ஏற்றத்தைக் கண்டே திருநாவுக்கரசர், “இறுமாந்திருப்பன் கொலோ நின்பல் கணத்தெண்ணப்பட்டுச் சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங் கிறுமாந்திருப்பன் கொலோ” என்று மகிழ்ந்துரைக்கின்றார். மணிவாசகப் பெருமான், “கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகே னாயிடினும் மற்றறியேன் பிற தெய்வம் வாக்கியலால் வார்கழல் வந்து உற்றி இறுமாந்திருந்தேன் எம்பெருமான் அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கு இடுமாறன்றே நின் பொன்னருளே” (ஏசறவு. 5) என்று வியப்பு மேலிட்டுரைக்கின்றார். இத்தகைய அருட்பேற் றிறுமாப்பு எய்துகின்றார் வடலூர் வள்ளல்; பிறர் எவரையும் மதித்துப் பேணும் மனப்பான்மை போய் விடுகிறது; யாவர் யாது படினும் அவர் மனம் கவலையுறாது கழிகிறது; இனித் தான் உலகியற் சூழலிற்பட்டு வருந்துதற்கு இடமில்லை என்று தெளிகின்றார்; அதனைச் செம்மாப்போடு பாடுகின்றார்.

2207.

     மதியாமல் ஆரையும் நான் இறு
          மாந்து மகிழ்கின்றதெம்
     பதியாம் உனது திருவருட்
          சீருரம் பற்றியன்றோ
     எதியார் படினும் இடர்ப்பட
          டலையஇவ் வேழைக்கென்ன
     விதியா இனிப்பட மாட்டேன்
          அருள்செய் விடையவனே.

உரை:

     விடையேறும் பெருமானே, இங்கு யாரையும் மதியாமல் இறுமாந்து மகிழ்வது நின் திருவருளின் சீரிய வன்மை பற்றியாகும்; இனிப் பிறர் படுவன நோக்கித் துன்புற்றலைய எனக்கென்ன விதியா? இல்லை; நான் துன்பப்பட மாட்டேன்; ஏழையாகிய எனக்கு நின் அருளைச் செய்க. எ.று.

     அருட் பெருமையை யுணர்ந்து அதன்வழி நில்லாதார் எத்துணைப் பெரியராயினும் மதிக்கத் தகுவரல்லார் என எண்ணி, மதியாதுதாம் ஒழுகுவதை உணர்ந்து கூறுதலின், “மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்வது” என்றும், அதற்குக் காரணம் திருவருட் செல்வம் நல்கும் மனத்திண்மையும் செம்மாப்பும் ஆகும் என்பாராய், “உனது திருவருட்சீர் உரம் பற்றியன்றோ” என்றும் உரைக்கின்றார். யாவர், எத்தகைய செல்வத்திற் களிப்பினும், அல்லற்பட்ட வலிப்பினும், திருவருட் கலப்பின்மை கண்டு கவலைப்பட வேண்டுமென்பது எனக்கு முறையாக இல்லை; யானே திருவருட்செல்வக் குறைபாட்டால் ஏழையாகியிருப்பவன் என்று உரைப்பாராய், “எது யார்படினும் இடர்ப்பட்டலைய இவ்வேழைக்கென்ன விதியா?” என்று மறுக்கும் குறிப்பு விளங்க மொழிகின்றார். திருவருள் பெறுதற் பொருட்டன்றி, வேறே யாது கருதியும் வருந்தமாட்டேன்; ஆதலால் அருள் செய்க என்று கேட்கலுற்ற வள்ளலார், “இனிப் படமாட்டேன் அருள் செய்” என்று வேண்டுகின்றார். இவ்வுரையின்கண் திருவருள் வழிப் பிறக்கும் பெருமிதம் விளங்குதல் காண்க. “இனிப் படமாட்டேன்” என்ற தொடர், வள்ளலார் இதுகாறும் எத்தனையோ பெருந்துயர்ப் பட்டமையைப் புலப்படுத்துகின்றது. பிறர்படுவது கண்டு இடருற்று அதனைப் போக்கற்கு வருந்தி அலைந்தமையுண்டு; இனி அலைய வேண்டுவதில்லை; அலையவேண்டும் என்று எனக்கு விதியும் இல்லை; என்று இதனை இறைவன்பால் முறைகின்றாராதலால், அங்கே இறுமாப்புப் புலப்பட உரைக்க இடமின்மையின், தன்னை “இவ்வேழை” எனத் தாழ்த்தி யுரைக்கின்றார்.

     இதனால், திருவருட்பேற்றாற் பிறக்கும் இறுமாப்பின் ஏற்றமும் இன்றியமையாமையும் தெரிவிப்பது பயனாம்.

     (37)