38
38.
உலகியற் செல்வருள் ஈயா நெஞ்சுடையோர் இருவகையர். ஒரு திறத்தார் வெட்டெனப் பேசுபவர்; மற்றத்
திறத்தர் மெத்தெனப் பேசுபவர். உள்ளத்தை மறைத்து இலலென மொழியுமிடத்து வெட்டென்ற
சொல்லால் மறுத்து, மீளத் தம்மை நினைந்து வாராவாறு பேசுவர் பலர். கடுத்த பார்வையும்,
சிடுசிடுத்த முகமும் கொண்டு, இரப்பவர் காணுந்தோறும் மனம் வருந்தி நீங்கிச் செல்லுமாறு செய்வது
அவரது இயல்பு. வேறு திறத்தார், கொடா மனத்தால் கல்போல் உறைப்புண்ட இவர்கள் அது புறத்தே தெரியாதபடி
மெத்தென்ற சொற்களைச் சொல்லி இரவலரை மீளச் செய்வர். இனிய சொற்களால் வரவேற்று “வறிது
பெயர்குவமல்லெம்” என இரவலர் நினைக்குமாறு பால்போல நயம் நிறைந்த சொற்களையே வழங்குவர்.
இரவலர் மனம் குளிரும்படி கொடாரது மனக்கொடுமையைப் பல சொற்களால் விரிவாகப் புனைந்துரைத்து
மகிழ்வுறுத்துவர். தம்பால் உள்ளதை மறைத்து இல்லென வுரைத்து, உளதாயின் தமது கொடை நலம் இம்முறையில்
இயலும் எனச் சொற்பந்தரிட்டுக் கேட்பவர் மனங் குளிருமாறு பேசுவர். மெத்தென்ற அவருடைய இன்சொற்கள்
இரவலரைக் குளிர்ப்பித்துக் கொடாக்கொடுமையை நினைவிற் கொள்ளாது நீங்குமாறு செய்யும்;
அவரும் முகமலர்ச்சி குன்றாமல் கொடாரைப் பாராட்டிக் கொண்டு செல்வர். இப் பெற்றியோர்
பலரைக் கண்டு அறிவாராதலின், வள்ளற் பெருமான், அப் பண்புதானும் சிவன்பால் இல்லாமை கண்டு
இரங்கிக் கூறுகின்றார். கன்னெஞ்ச வஞ்சர் கொடா முன்பே சொற்கோட்டை கட்டித் தம்மை இரப்பவர்
மனம் உடைந்து வருந்திச் செல்லாவாறு இன்மொழி புகன்று விடுப்பர்; நின்னை அருள் வேண்டி நிற்கும்
எனக்கு, நீ சிறிதும் இரங்குகின்றாய் இல்லை; வெறுஞ் சொற்கோட்டை கட்டி ஏமாற்றி விடுக்கும்
பண்பு எம்பால் இல்லை என்பாயேல், அதனை யான் ஏலேன்; முன்பொருகால் மதுரையில் அடியார்க்கு
உணவளிக்கும் நற்றொண்டு குன்றாமைப்பொருட்டு இறைவன் உலவா நெற்கோட்டை யருளியது நினைவில்
எய்தவும், அன்று நெற்கோட்டை யருளியது போன்று எளியேனுக்கும் அருளுக என வேண்டுகிறார்.
2208. கற்கோட்டை நெஞ்சருந் தம்பால்
அடுத்தவர் கட்குச் சும்மாச்
சொற்கோட்டை ஆயினும் கட்டுவர்
நின்னைத் துணிந்தடுத்தேன்
அற்கோட்டை நெஞ்சுடை யேனுக்
கிரங்கிலை அன்றுலவா
நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை
யோமுக்கண் நின்மலனே.
உரை: முக்கண் கொண்ட நின்மலனே, கல்போன்ற நெஞ்சுடையாரும் தம்மை அடுத்தவர்க்குச் சும்மாச் சொற்கோட்டை கட்டுவர்; நின்னையே துணிந்து வந்தடுத்த அடியேனுக்கு இரங்குகின்றாய் இல்லை; அன்று தொண்டர் ஒருவர்க்கு உலவா நெற்கோட்டை அளித்த வள்ளல் நீயல்லவா? எனக்கும் அருளுக எ.று.
கற்கோட்டை நெஞ்சர் - கருங் கல்லாற் கட்டப்பட்ட கோட்டை போல் அமைந்த நெஞ்சினை யுடையவர். ஏனைச் செங்கல்லாலும் மண்ணாலும் இயன்ற கோட்டைகள் போல் எளிதில் அழிக்கப்படுவனவாகாத கோட்டைகளைச் சிறப்பித்தற்குக் “கற்கோட்டை நெஞ்சர்” என வுரைக்கின்றார். எளியோருடைய இனிய மெல்லிய இரப்புரைகளை ஏற்று இரங்குதல் இல்லாது நெஞ்சு என்றற்கு இவ்வாறு கூறியருளுகின்றனர். நெஞ்சம் கற்கோட்டையாய் இருத்தலின், இரங்கி ஒன்றை ஈதல் இலராதல் பற்றி, வருவாரை முகத்து இனிதுநோக்கி வரவேற்று, தேனும் பாலும் போன்ற சொற்களால் மகிழ்வித்து, பொய்ச்சொற்களைக் கொண்டு அழகிய சொற்கோட்டை கட்டி, இரப்பவர் மனம் குளிர்ந்து வெறுங்கையுடன் செல்லவிடுவர் என்பதைத் “தம்பால் அடுத்தவர்கட்குச் சும்மாச் சொற் கோட்டையாயினும் கட்டுவர்” என்று உரைக்கின்றார். கொடுப்பவர், கொடார் ஆகிய இருதிறத்தாரையும் வெறும் தோற்றங்கண்டு துணிதல் கூடாது; அவருடைய சொற்களையும் செயல்களையும் பன்முறையும் கேட்டும் கண்டுமே துணிதல் வேண்டும்; யான் உலகில் மிகப் பலரைக் கண்டு, முடிவில் உன்னைத் தவிரச் சொல்லும் செயலும் ஒப்பவுடையார் பிறரின்மை கண்டு துணிந்தேன் என்பது விளங்க, “நின்னைத் துணிந்து அடுத்தேன்” எனச் சொல்லுகின்றார். துணிதல் - கலங்கித் தெளிதல். கலங்கித் தெளிந்த நீரைத் “துணி நீர் மெல்லவல்” (மதுரைக் 284) என்பது சான்றோர் வழக்கு. கொடாதார் நெஞ்சைப் பழித்தமைக் காண்பார்க்கு, அருளின்றி வாடும் தமது நெஞ்சின் இயல்பையும் எடுத்துரைப்பது நேர்மையாதலை நினைந்து, “அற்கோட்டை நெஞ்சுடையேன்” என மொழிகின்றார். அற்கோட்டை - இருள் நிறைந்த கோட்டை. அருளொளி புக்கு விளக்கம் செய்யாமை பற்றி இவ்வாறு இயம்புகின்றார். அருள்வேண்டி நிறையிட்டுப் பாடிக்கிடக்கும் தமக்கு அது செய்யவேண்டும் என்றற்காக “நெஞ்சுடையேனுக்கு இரங்கிலை” என்று இசைக்கின்றார். இரங்காமைக்கு ஏது இருள்படிந்துள்ளமை என்பது தோன்ற, “அற்கோட்டை நெஞ்சுடையேன்” என அறிவிக்கின்றார். சொற்கோட்டை கட்டுதலும் பொருட்கோட்டை ஈதலும் எனக்கு வழக்கல்லகாண் என இறைவன் உரைத்து, மறுத்தால் என் செய்வது என்று முற்கூட்டி நினைந்து, மதுரையில் உலவாக்கோட்டையருளிய திருவிளையாடலை எடுத்துக் காட்டுவாராய், “அன்று உலவா நெற்கோட்டை ஈந்தவன் நீ யல்லையோ” என்றும், என்றும் எதனையும் மறவா இயல்பினன் என்பது விளங்க, இறைவனை “முக்கண் நின்மலனே” எனவும் மொழிகின்றார்.
இதனால், அருளொளியின்றி இருள்பட்டுக் கிடக்கும் நெஞ்சுடைய எனக்கு நின் அருளொளியை நல்குதல் வேண்டு மென்று கூறியாவாறாயிற்று. (38)
|