39
39. ஒளியியல்பினதாகிய
மாயையாகிய சத்தியை முதற்காரணமாகக் கொண்டு இயன்றது மனம்; உடலும் உலகும் அம் மாயையின்
காரியமே யாகும். அவற்றோடு கலந்து வினைபுரியும் உயிர், அவற்றால் விளையும் பயனை நுகருமிடத்து
அதுவதுவாய் இயைந்துவிடுவது உயிர்க்கு இயல்பு. அக்காலை மாயாகாரியங்களின் நீங்காவாறு உயிரைப்
பிணித்து மயக்குவதும் அவற்றிற்குச் செயலாதலைக் தெளிகின்றார் வடலூர் வள்ளல். மாயையின் மயக்க
வரம்புக் குட்பட்டுழலும் மனம், மாயை வினைகளையே நினைந்து அவலம், கவலை, கையாறு அழுங்கல் முதலியவற்றுக்கு
இரையாகி வருந்தும். உயிர் அவற்றால் விளையும் போகங்களை நுகர்ந்து துயர்ப்பட வேண்டும்.
கருவியாய்ப் பயன்படுவனவாகிய இவைகள் அறிவை மயக்கித்துன்பத்தில் ஆழ்த்துவானேன் என எண்ணுபவர்,
இவற்றைப் படைத்து உதவும் இறைவன் சோதனை போலும் என நினைக்கின்றார். சிவத் தொண்டர்களின்
வரலாறுகளை நோக்கின் அவை பலவும் இறைவன் சோதனைக் குள்ளாக்கின்றன. இங்ஙனம் மனம்
மாயாகாரியங்களின் மயங்கித் துன்புறுவதும் சோதனைபோலும் எனக் கருதிச் “சோதிக்கவேண்டா” என
இறைவன் திருவருள்பால் முறையிடுகிறார்.
2209. ஆதிக்க மாயை மனத்தேன்
கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின்
றேன்நிள் வழக்கம்எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல்
அருளத் தொடங்குகண்டாய்
போதிக்க வல்லநற் சேய்உமை
யோடென்னுள் புக்கவனே.
உரை: நடுவே மகனான முருகன் இருக்க, இருபாலும் உமாதேவியும் தானுமாய் என் உள்ளக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே, மாயையின் ஆதிக்கத்தில் இருக்கும் மனமுடையேனாதலால், துன்பங்கள் அடுத்தடுத்து வந்து அலைத்தலால் நொந்து வருந்துகின்றேன்; தொண்டர்களை வருத்திச் சோதிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டு, எளியனாகிய என்னைச் சோதிக்கத் தொடங்குதல் வேண்டா; அருள்புரியத் தொடங்குக, எ.று.
ஆதிக்கம் - அதிகார மிகுதி; அதிகாரியொருவன், அதன் வரம்புக்குட்பட்ட உயிர் பொருள் இடம் முதலியவற்றின்மேற் செலுத்தும் அதிகாரநிலை ஆதிக்கமெனப்படுகிறது. மாயையில் தோன்றி மாயாகாரியமாகிய உடற்குள் இருந்து அதன்மேலும் கருவிகள் மேலும் ஆட்சி செலுத்தும் இயல்புநோக்கி, மனத்தை மாயையின் ஆதிக்கத்தில் இருப்பது தெரிவிக்க. “ஆதிக்க மாயை மனத்தேன்” என மொழிகின்றார். என் உடம்பினுள் இருந்து எனக்குரியதாய் இருக்கற்பாலதாகிய மனம், பொறி புலன்கள் மேற்சென்று மயங்குதற்குக் காரணம் மாயையின் ஆதிக்கம் என்பது கருத்து. மாயையின் ஆதிக்கம் மனத்தை மயக்குதலால், அது பொறிபுலன்களில் தோய்ந்து ஆசை மிக்குற்றுப் பெற்றது கொண்டு அமையாது பேரவா எய்திப் பல்வகைத் துன்பங்களால் அலைப்புண்பது கண்டு “கவலை அடுத்தடுத்து வாதிக்க” என்று கூறுகிறார். ஆசைப்பட்டது அடையுமோ அடையாதோ என இரண்டுபட்டு எண்ணி வருந்துவது கவலை; பொருளாசை எழும்போதெல்லாம் கவலை அடுத்தடுத்துத் தோன்றுதல் இயல்பு. ஆசையால் கவலைமிகும்போது, மேற்கொண்டு செய்க எனவும் செய்யற்க எனவும் இருவகை யுணர்வு தோன்றி, தக்க ஏதுக்காட்டி வாதம் செய்யுமாறு விளங்க, “அடுத்தடுத்து வாதிக்க” என்கிறார், இந்நிலையில் துணிவு பிறவாவழி நோய் உண்டாதலின், “நொந்து வருந்துகிறேன்” என இறைவன்பால் விண்ணப்பிக்கின்றார். அந்நிலையில் இறைவன் அருட்செயல்களின் ஒன்றான சோதனை புரிதல் நினைவில் எழுகிறது. திருநீலகண்டர் இயற்பகை இளையான்குடி மாறர் முதலிய பெருமக்களின் வாழ்வில் இன்னொரன்ன கவலையைத் தோற்றுவித்து மனமாசு கழுவியதை நினைத்து, அவ்வாறு எளியனாகிய என்னைச் சோதிக்க வேண்டா; சோதனைகளைத் தாங்கும் அத்துணை ஆற்றல் என்பால் இல்லை என்னும் குறிப்புப்புலப்பட, “நின் வழக்கம் எண்ணிச் சோதிக்க என்னைத் தொடங்கேல்” என வுரைக்கின்றார். 'எண்ணி என்னைச் சோதிக்கத் தொடங்கேல்' என முறை செய்து கொள்க. தொடங்கேல், எதிர்மறை வியங்கோள்; “வெட்டெனப் பேசேல்” என்றற்போல, சோதனையைக் கைவிட்டவழி வேறு செயற்பாலது இது என விளக்குவாராய், “அருளத் தொடங்க” என வுரைக்கின்றார். கடுஞ் சோதனைக் குள்ளாக்கி முடிவில் முருகன் நடுவிருக்கத் தேவியும் தானுமாய்ச் சிவன் காட்சியளித்த அருட்செயலை நினைந்து, அவ்வாறு செய்தற்கு இடமில்லை; என்னுள் நீவிர் மூவிரும் எழுந்தருளியுள்ளீர்கள் என்பாராய், “போதிக்க வல்ல நற்சேய் உமையோடு என்னுள் புக்கவனே” எனப் புகழ்கின்றார்.
இனிச் சோதனை வேண்டாமல் அடியேனுக்கு அருள் புரிக என முறையிடுவது இப்பாட்டின் பயனாதல் காண்க. (39)
|