40
40. தில்லையம்பலத்தும் மதுரை வெள்ளயம்பலத்தும் சிவபெருமான் திருக்கூத்து இயற்றுவதை
வள்ளற்பெருமான் நினைக்கின்றார். திருக் கூத்துக்கள் நாளும் நடக்கின்றன; நடப்பதால் உயிர்கள்
நல்வாழ்வு பெறுகின்றன. அதனால் திருக்கூத்தும் பயன் தருவதாகவே இருப்பதை உணர்கின்றார். உலகியிர்களின்பால்
அருள்மிகுந்து திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே, என் குறையையும் முடித்து ஆட்கொள்க; இதனை யான்
பல முறை சொல்லுகின்றேன், நின் பெருந்தன்மைக்குப் பொருந்தாதே நின் மௌனம் என முறையிடுகின்றார்.
2210. பிறைமுடித் தாண்டொரு பெண்முடித்
தோர்பிள்ளைப் பேர் முடித்த
நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி
செய்திட நித்தமன்றின்
மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என்
பாலருள் வைத்தெளியேன்
குறைமுடித் தாண்டுகொள் என்னே
பலமுறை கூறுவதே.
உரை: மேலே பிறைத் திங்களையும் கங்கையும் கொக்கிறகையும் முடித்தமையால் நிறைவுற்ற முடிகொண்ட சிவந்த சடைகள் மன்றின் கண் நாடோறும் நடம்புரிந்து விளங்கி, நீ வேதங்களின் உச்சிக்குரிய வேதாந்த நடனத்தைச் செய்கின்றாய்; இவையனைத்தும் உலகுகள் நிலை பெறவும் உயிர்கள் வாழ்வுபெறவும் செய்யும் அருள் நடனம் எனப்படுமாயின், என்பால் அருள் செய்து, எனக்குள்ள குறைகளை நீக்கி ஆட்கொள்வாயாக; இதனை நான் பன்முறையும் கூறுவதனால் நினக்கு என்ன பயன்? எ.று.
சிவன் தலைமுடியில் பிறையும் கங்கையும் கொக்கிறகும் இருந்து அழகு செய்தலின், “பிறை முடித்து, ஆண்டு ஒரு பெண் முடித்து, ஒர் பிள்ளைப் பேர் முடித்த நிறைமுடி” என்று உரைக்கின்றார். இறைவன் ஆடுங்கால் திருமுடிச் சடைகளும் ஆடுதலின், “நிறைமுடித் தாண்டவம் செவ்வேணி செய்திட” என வுரைக்கின்றார். மின்போற் சிவந்து ஒளிசெய்யும் சடையாதலால், “செவ்வேணி” எனச் சிறப்பிக்கின்றார். சுந்தரேசப் பெருமானுக்குப் பிள்ளைப் பாண்டியனென்றும் பேருண்மையின் “ஓர் பிள்ளைப் பேர்முடித்த” வன் எனப் புகழ்கின்றார். இரவு பகல் எப்போதும் இறைவனது திருக்கூத்து நிகழ்வதாதலால், “நித்தம்” எனக் குறிக்கின்றார். மறைமுடி, வேதாந்தம் என்பர். வேதங்கூறும் பொருள்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்ட பரமனாதலின், அவனது பரமநாடகத்தை “மறைமுக தாண்டவம்” எனவும், அதனை அயர்வின்றி நிகழ்த்துவது பற்றி “மறைமுடித் தாண்டவம் செய்வோய்” எனவும் புகழ்கின்றார். பன்னாளாக என் குறைகளைச் சொல்லி முறையிட்டேன்; நீ காலம் தாழ்த்துவதே செய்தனை; அதனால் என் குறை தொடர்ந்து என்னை வருந்திற்றேயன்றி நினக்கு ஒரு பயனும் இல்லை என்பார். “என்பால் அருள் வைத்து எளியேன் குறைமுடித்து ஆண்டுகொள் பலமுறை கூறுவது என்” என வேண்டுகிறார்.
இதனால், பன்னாள் தொடர்ந்து முறையிடச் செய்யவிடாது அருள் புரிக என்பது பயனாம். (40)
|