41

     41. நிலவுலகில் வாழும் மக்களின் சிவமாகிய முழுமுதற் பொருளின் மெய்ப்புகழேயன்றி, வேறு செத்துப் பிறக்கும் வரலாறு கொண்ட தெய்வங்களை நிலத்தில் வீழ்ந்து நெற்றி மண்பட வணங்கி வழிபடுவோர் உண்டு. தெய்வங்கள் எண்ணிறந்தன என்பதற்கு வேதங்களும் புராணங்களும் சான்றாக நிற்கின்றன. அவற்றின் வழி நிற்போரும் பலர். அவர்களை வழிபடுவது மக்கள் இயல்பாயிற்று. வடலூர் வள்ளல், பிற தெய்வங்களை வழிபடுவோர் வழிபடுக; என் கருத்து அத் தெய்வங்களின் வழிபாட்டில் ஈடுபடவும் அவர் புகழைப் பாடவும் செய்யாதே எனச் சிவனருளை வேண்டுகிறார்.

2211.

     நடங்கொண்ட பொன்னடி நீழலில்
          நான்வந்து நண்ணுமட்டும்
     திடங்கொண்ட நின்புகழ் அல்லால்
          பிறர்புகழ் செப்பவையேல்
     விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற
          மேஇம வெற்புடையாள்
     இடங்கொண்ட தெய்வத் தனிமுத
          லேஎம் இறையவனே.

உரை:

     விடமுண்ட கண்டத்தையுடைய அருட்குன்றமே இமயமலை வேந்தன் மகளான உமாதேவியை இடப்பாகத்தே யுடைய தெய்வமாகிய முழுமுதற் கடவுளே, எங்கள் இறைவனே, அம்பலத்தில் திருநடம்புரியும் திருவடிநீழலை நான் வந்தடையும்வரை, வலிமிக்க நின் புகழையல்லது வேறு தெய்வங்களின் புகழை நான் ஒதுமாறு செய்யவேண்டா. எ.று.

     தேவர்கள் வேண்டியதற்கு இசைந்து அருள்புரியுமாற்றால் நஞ்சுண்டு கரிய கழுத்தையுடையனானது வியந்து கூறுதலால், “விடம் கொண்ட கண்டத்து அருட் குன்றமே” எனப் புகழ்கின்றார். இமயமலைக்குரிய அரசன் மகளென உமாதேவியைப் புராணம் கூறுதல்பற்றி, “இமவெற்புடையாள்” என்றும், சிவன் திருமேனியில் இடப்பாகத்தைத் தனக்கு இடமாகக் கொண்டவள் என்பதுபற்றி “இம வெற்புடையாள் இடங்கொண்ட தெய்வத் தனிமுதலே” எனவும் சிறப்பிக்கின்றார். தெய்வங்கள் போல, முகமும் தோளும் கையும் காலும் கொண்டு உருவாய்த் தோன்றினும், அவற்றைப் போலச் செத்துப் பிறக்கும் தெய்வமாகாது தனி முதலாய்த் திகழ்வது விளங்க, “தெய்வத் தனிமுதலே” எனப்பரவுகின்றார். செய்வினைக்கேற்ப முறைசெய்தல் பற்றி “இறைவன்” என ஏத்துகிறார். தொல்காப்பிய்ர் முழுமுதற் கடவுளைப் “பால்வரை தெய்வம்” எனக் குறிப்பதும் இவ்வுண்மையைப் புலப்படுத்தற்கே யாகும். மக்களுடைய மனம் நிலைபெற நில்லாமல் கணந்தோறும் மாறும் இயல்பினது. கடற்கண் அலைபோல மனத்தின்கண் எண்ணங்கள் எழுவதும் ஒடுக்குவதும் உண்டு. கடற்பரப்பில் வீசும் காற்றுப் போலக் குணங்கள் படர்ந்து எண்ண அலைகள் எழுப்பிய வண்ணம் இருக்கின்றன. இவ்வாற்றால் மனத்தின்கண் அசைவு தோன்றச் சொல்லும் செயலும் வேறுபடுகின்றன. காற்றாடி போலச் சுழலுவதே மன முதலிய கருவிகளின் செயலாகிவிடுகிறது. உயிர் உடலின் நீங்குங்காறும் இச் சுழற்சி இருந்துகொண்டிருத்தலால், சொல்லும் செயலும் பிறவும் நமக்கு ஒரு நெறிப்படுவதில்லை. அது விளங்கவே என் உயிர் நின் திருவடியடைகிற வரையில் மன முதலிய கருவிகள் மாறாமை அருளல் வேண்டும்; நின் புகழை ஒதுவதொன்று ஒழிய வேறு மாற்றம் எய்துதல் கூடாது; என் நினைவும் சொல்லும் செயலும் நின் புகழையன்றிப் பிறர் புகழை நினைக்கவோ சொல்லவோ கூடாதபடி அருளுதல் வேண்டும் என்பாராய், “நான் வந்து நண்ணுமட்டும் நின் புகழல்லான் பிறர் புகழ் செப்ப வையேல்” என முறையிடுகின்றார். முடிவில் மன்னுயிரனைத்தும் சென்று சேருமிடம் இறைவன் திருவடியாதலால், “பொன்னடி நீழலில் நண்ணு மட்டும்” என்று மொழிகின்றார். “பொன்னார் திருவடி” எனப் போற்றப்படுவதுபற்றிப் “பொன்னடி” எனவும், திருவம்பலத்தில் நடம்புரியும் திருவடியாதலால், “நடங்கொண்ட பொன்னடி” எனவும் புகழ்கின்றார். ஏனோர் புகழ்கட்கு அவர்களுறையும் இடம் ஆதாரமாகும்; இறைவன் புகழ் அவனையே ஆதாரமாகக் கொண்டு, அவன் போல அழியா இயல்புற்றாதலால் “திடங்கொண்ட நின் புகழ்” எனச் சிறப்பித் துரைக்கின்றார்.

     இதனால், இறைவனது பொன்றாப் புகழை மாறாது உரைக்கும் மாண்பருள வேண்டுகிறார்.

     (41)