42
42. இளமைக் காலத்து உடல் வளமைமிக்கு மேனியில் ஒளியும் பொலிவும் பொங்கி நிற்கும். இஃது
எல்லாவுயிர்ப் பொருட்கும் பொது இயல்பு. மரம் செடி கொடிகள் முதல் மக்கள் ஈறாகவுள்ளன யாவும்
இளமைக்கண் வளர்ச்சியும் எழுச்சியும் பெற்றுக் கண்ணுக்கு இனிய காட்சியும் கருத்தைக் கவரும் ஈர்ப்பும்
கொண்டு கவின் பெறுகின்றன. ‘இக் கவினும் கவர்ச்சியும் உயிர்ப்பொருட்டு ஏன் உண்டாகின்றன?’
இதனால் விளையும் பயன் யாது? என எண்ணுவதுதான் அறிவுடைய மக்கள் செயல். இளமையின் வளமையைக்
கூர்ந்து நோக்கிய அறிஞர், இளமை கழிவதையும் முதுமை எய்துவதையும் ஒப்ப நோக்கி, “இளமையிற்
சிறந்த வளமையில்லை” ( நற்றிணை ) என்று உரைக்கின்றனர். இளமைக்கண் இவ்வளமை ஏன் என எண்ணுகின்றார்.
வளமை இளமைக்கு வனப்புத் தந்து அவ்வவ்வற்றின் இனப்பெருக்கத்துக்கு ஆக்கமும் ஊக்கமும்
உதவுகிறது. ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் அவாவுகின்றனர். வளமைமிக்க இளந்தளிரும் பசுந்தழையும்
போர்த்துச் செடிகளும் மரங்களும் கொடிகளும் புதர்களும் யாவும் அரும்பி மலர்கின்றன. மலர்கள்
வண்டினத்தை தம்முடைய மணத்தானும் வண்ணத்தாலும் வருவித்துத் தன்பாற் சுரக்கும் தேனைத் தந்து அவ்
வண்டினம் தம் மேனியிற் கொணரும் பிறபூக்களின் தாதுபெற்றுக் கருக்கொண்டு காயும் கனியுமாய்த்
தம் இனம் பெருகச் செய்கின்றன. இவ்வாறே புள்ளினங்களும் இன்னிசையும் இனிய தோற்றமும் கொண்டு
ஆணும் பெண்ணும் கூடிக் கருக்கொண்டு முட்டை ஈன்று தம் இனத்தைப் பெருக்குகின்றன. விலங்களும்
இதுவே செய்கின்றன. மக்களிடையேயும் இனம்பெருக்கும் இச் செயல் நிகழ்கிறது. ஆயினும் மக்களல்லாத
பிறவுயிர்களிடத்தே ஒரு காலவரையறை யுளது. இனம் பெருக்கும் உணர்ச்சியும் முயற்சியும் ஒரொரு காலத்தின்தான்
தோன்றுகின்றன. அக்காலம் கடந்தபின் அவ்வுயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடியிருப்பினும், இனப்பெருக்கக்
கிளர்ச்சி அவற்றிடையே தோன்றுவதில்லை. மக்களினத்தில் அக் காலவரையறை இல்லை. மக்களினத்தின்
பண்டைய வரலாற்றை நோக்கினால், அவரிடையே இல்லை. மக்களினத்தின் பண்டைய வரலாற்றை நோக்கினால்,
அவரிடையே காலவரையறையே யன்றி உறவு வரையறையும் இல்லாதிருந்தமை தெரிகிறது. பெற்ற தாயை மகன்
மணந்து கொண்டதும், உடன் பிறந்தார் ஒருவரையொருவர் மணந்து கொண்டதும் வரலாறுகள் வடித்துரைக்கின்றன.
வாழ்வியல் உணர்வு பெருகவும் உறவுவகை மாறி வரையறைப்படுவதாயிற்று. இனப் பெருக்கத்துக்குரிய உணர்ச்சியும்
முயற்சியும் மாறவேயில்லை; அவற்றை ஊக்குதற்கேற்ப உணவிலும் உடையிலும் புதுமைகள் தோன்றி ஒப்பனைத்
துைறையை உயர்த்தின. காலவரையறை யில்லாமையால் ஆணும் பெண்ணும் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்ளும்
கருத்து முற்பட நின்று கற்பனையைத் தூண்டி ஒப்பனைக்கு ஊக்கிக் கொண்டிருக்கிறது. மக்களினத்துப்
பெண்ணினம் நாளும் செய்கின்ற பணிகளில் ஒப்பனைக்கு முதலிடம் தந்து “தையல்” என்ற பெயர் பெற்றுக்கொண்டது.
‘தை’ என்று பழந்தமிழ்ச் சொல் ஒப்பனை என்ற பொருட்குரியதாகும். அதற்கொப்ப ஆணினம் ஒரளவு
ஒப்பனையை மேற்கொள்கிறது. இவ்வாற்றால் ஒப்பனையும் காலவரையறை பெறாதயிற்று.
இங்ஙனம் இனம் பெருக்கும் பணிக்கு இன்றியமையாத வேட்கை இருபாலார் உள்ளத்தில் நிறைந்தவழிக்
‘காமம்’ எனப் பெயர் பெறுகிறது.நிறைவுப் பொருள் தரும் ‘கமம்’ என்னும் சொல்தான், காமம்
எனத் தோன்றி வேறு சொல்லாயிற்று. அக் காமம் மீதூர்ந்தவழி உயிரறிவைத் தன்னடிப்படுத்தித்
தன்வழிச் செலுத்தும் தனிவன்மை அதற்குண்டு. மக்களுலகைப் பெருகப் படைக்கும் பெருஞ்செயல் அதன்பால்
உண்மையின், அதற்கு அத்துணை வன்மை வாய்ந்துள்ளது. அதன் வலிமிகுதியை வெல்லமாட்டாமைதான் இன்று
பல வல்லரசுகள் மாய்ந்து மறைந்தமைக்குக் காரணம் என்பதை மக்களினத்தின் வரலாறுகள் பறையறைகின்றன.
பொற்குன்றம்போல் நின்று விளங்கிய செல்வக் குடும்பங்கள் காமத்தின் காலவறையறை யில்லாக்
கொடுமையால் நயன் சாரா நல்குரவுற்று, நலிவெய்தின. குன்றெனத் திரண்ட குவவுத்தோள் ஆடவர் இதனால்
வலிகுன்றிச் சூம்பிய தோளும் கூம்பிய கையருமாய்ப் பிறரைக் கும்பிட்டு வாழும் சிறுமை எய்தினர்.
இளமையிலேயே முதுமைத் தோற்றம் பெறுவோர் பலராயினர்.
இந்நிலை அறிஞர் அறிவை அலைக்கலுற்றது. காம வாழ்வைக் கசந்தனர். அதனால் விளைந்த வீழ்ச்சியைக்
காட்டி அளவறிந்து வாழ்கென அறிவுறுத்தினர்; அறவாழ்க்கைக்குத் துணையாய்த் தெய்வவாழ்வு நல்கும்
ஏம மகளிர். காம வாழ்க்கையிற் காழ்கொண்டு கைகடந்து ஒழுகுமிடத்து அவர்களைக் கடிந்து பழித்தனர்.
அவர்கள் பின் சென்று பேதுறும் ஆடவரை ஈடிலாக் கேடுமாம் என இகழ்ந்து ஏசினர். ஒருபால் ஏசுவோரையும்
ஒருபால் ஏசப்படுவோரையும் காண்கின்றார் வடலூர் வள்ளல். அவர் திருவுள்ளம் ஏசப்படுவோர் உள்ளத்தின்பால்
பரிவு கொண்டு, அதனோடு இயைந்து தானும் வருந்துகிற மகளிர் தொடர்பு அறினும், அத் தொடர்புக்கு
ஏதுவாகிய காமவேட்கை உயிரறிவைக் கவ்விக் கொண்டு கவல்விப்பது காண்கின்றார். அதற்கு உய்தி
யாது என்று உன்னுகின்றார். மணிவாசகப் பெருமான் அருளிய ஒரு வாசகம் நினைவில் எழுகிறது. “காமவான்
சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யுமாறு என்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை,
முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய்” என்ற அவ்வருமை வாசகம் ஒளியும் ஊக்கமும்
தருகிறது. அதுகொண்டு தமக்கும் அந்த “மல்லற் கரை காட்டி ஆட்கொள்ள வேண்டும்” என்று முறையிடுகின்றார்.
2212. விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம்
வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின்
நாம மொழிந்தெளியேன்
குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்
அருளக் குறித்திலையேல்
பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக்
கஞ்சப் படுமுனக்கே.
உரை: பழிக்கஞ்சிய திருவிளையாடல் புரிந்த சொக்கேசனே, மின்போலும் இடையையுடைய மகளிரொடு கூடிப்பெறும் வாழ்க்கையை விரும்பி அயலேயுள்ள அறிஞரது பழித்துரைக்கும் அஞ்சி நீங்கினும், காம நினைவு போந்து அலைத்தற்கு மனம் பொறாமல், அதன்கண் நின்பெயராகிய திருவைந்தெழுத்தை நினைக்கும் நினைவை நிறுத்தி எளியனாகிய யான் குழிக்கஞ்சிபோல் மேற்செல்லுதலின்றி உறைந்து கிடக்கின்றேன்; அடியேனுக்கு அருள்புரியத் திருவுள்ளம் பற்றாயாயின், என்னால் எய்தலாகும் பழிக்கு நீ அஞ்ச வேண்டிவரும். எ.று.
உண்மை யுணரமாட்டாமல் வேட்டுவன்மேல் கொலைக்குற்றம் கூறி ஒறுத்தலால் வரும் பழிக்கஞ்சிய பாண்டியன் பொருட்டு, மணமகன் பிண மகனான காட்சியை மதுரையில் சொக்கநாதன் காட்டிய அருட்செயலைப் “பழிக்கஞ்சினோய்” எனக் குறிக்கின்றார். காமக்குறிப்பைப் புலப்படுத்திக் காணப்பட்டார் உள்ளத்திலும் அதனைக் கிளரச் செய்யும் கருவி கண்ணாதலின், அதனை விதந்து, அதற்குப் பொலிவுதரும் ஒப்பனைப்பொருள் அஞ்சன மையாதல் பற்றி, “விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்” எனக் காம மகளிரை உரைக்கின்றார். அவரது காமவாழ்வை விரும்புவது ஆடவர்க்கு வீழ்ச்சியாதால் தோன்ற “வீழ்ந்து” என்றும், வீழ்ந்தோர் எய்தும் புன்கண்மை கண்டு அயலோராகிய அறிஞர் அக்குற்றம் ஏதுவாக இகழ்ந்துரைப்பதை எண்ணும் நெஞ்சில் அச்சம் பிறத்தலின் “அயலோர் மொழிக்கு அஞ்சி என்றும், அச்சம் காரணமாக அம் மகளிர் தொடர்பை விட்டு நீங்கினும் காமநினைவு தோன்றித் தாக்கற்கும் மனம் பொறாது வருந்தும் திறத்தை “உள்ளம் பொறாது” என்றும் மொழிகின்றார். இனி அம் மனத்தின்கண் காமநினைவு எழுந்து தாக்காமைக்கு வழி இறைவன் பெயராகிய திருவைந்தெழுத்தாதலால் “நின் நாமம் மொழிந்தேன்” என உரைக்கின்றார். காம வான்சுறவின் வாய்ப்பட்டுக் கலக்கமுறும்போது ஐந்தெழுத்தையே புணையாகப் பற்றிய செயலை மணிவாசகனார் குறிக்கின்ரன்றோ? அப் பெருமான் ஐந்தெழுத்தின் புணைபிடித்துக் கிடந்தாற் போல வள்ளற் பெருமானும் குழிக்கஞ்சிபோல் உறைந்து செயலற்றுக் கிடப்பதைக் “குழிக்கஞ்சிபோல் மயங்கின்றேன்” என வுரைக்கின்றார். 'மயங்குகின்றேன்' என்பது 'மயங்கின்றேன்' என வந்தது. கயங்குதல் - கலத்தல். குழியிற் பெய்த கஞ்சி மண்ணொடு கலந்து உறைந்து நிற்றல்போல் வள்ளற் பெறுமானும் திருவைந்தெழுத்தில் உறைந்து நிற்றலை உணர்த்துகின்றார். அருளாவிடில் ஐந்தெழுத்துக்குப் பழியாம்; அவன் திருப்பெயர்க்கு பழியாம் என்பாராய், “உனக்கு என் பழிக்கு அஞ்சப்படும்” உனக்கு என்னால் உளதாகும் பழிக்கு அஞ்சுதல் வேண்டப்படும் என்கிறார். “அகத்தின்னா வஞ்சரை அஞ்சப்படும்” (குறள்) என்றற்போலும் அரிய சொல்வழக்கு இது. இதனால், பழியஞ்சும் பண்புடையனாகிய நீ என்னால் உளதாகும் பழிக்கஞ்சியேனும் அருள்புரிக என முறையிடுகின்றார். (42)
|