43
43. ஆதி சங்கரர் கேரள நாட்டில் தோன்றி வளர்ந்தபோது வைதிகக் கொள்கைகளும் கவ்வியும்
பிராமணரிடையே நல்ல செல்வாக்குடன் திகழ்ந்தன. வைதிக அறிவு பெற்றவர்கள் உலகியல் வாழ்க்கையையே
பெரும்பொருளாகக் கருதினார். தங்கள் வாழ்வை வளமுடையதாக்குவதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர்.
தமிழ் நாட்டில் கி.பி. எட்டாம் நூற்றாண்டு தொட்டே வைதிக வொழுக்கம் உலகியல் வாழ்வையே
குறியாகக் கொண்டிருந்தது; அதனைச் சேக்கிழார் பெருமான் தெளிவாகக் கொண்டு கூறுகின்றார். வேதநெறி
ஒரு மருங்கும் சைவநெறி ஒரு மருங்கும் வளர்ந்து வந்தன. “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் இலகு
மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும்” என்று
சேக்கிழார் கூறுவது மேற்காட்டிய நிலைமையைத் தெளிவாக்குகிறது.
வேதநெறியின் போக்கை ஆதிசங்கரர் தெரிந்துணர்ந்தார்.
வேத வேதாந்த நூல்களின் ஞானவாய்மையை உணரும் நற்றவப்பேறு அவர் பிறந்த குடியில் பெருஞ்சிறப்
பெய்திருந்தது. அதனால் சங்கரர் வேத வேதாந்தக் கல்வியின் குறிக்கோள் மெய்ஞ்ஞானப்பேறு என்று
கண்டார். பாரமார்த்தமாகிய உண்மை ஞானம் உலகியற் செம்மை வாழ்வை அடிப்படையாகக் கொண்டது
என்பதையும், ஞானத்தின் திருவுருவாகிய ஆதிசங்கரர் ஐயமற அறிந்தார். அந்நாளைய வேதியர்க்கென
ஒழுக்கங்கள் (ஆசாரங்கள்) இவையென ஆராய்ந்து கண்டு இனிய நடையில் நூல் எழுதினார். பலர்
அதனைக் கற்று ஒழுக்கத்தால் உண்மை ஞானப் பேற்றுக்கு உரியராயினர். வேதாந்த நூல்களான உபநிடதங்களும்,
அவற்றின் பிழிவாய்த் தோன்றிய பிரமசூத்திரமும், ஞானமூர்த்தமாய் நின்ற சங்கரரது ஞானக்கண்களுக்கு
மிக்க சிறப்புடையவாய் விளங்கின. அவற்றின் தொன்மை அவர் கால அறிஞர்கட்கு எளிதில்
பொருள் விளங்காத சூழ்நிலையைத் தோற்றுவித்தமையின், அப் பெருஞானச் செல்வரான சங்கரர்க்கு
இனிது விளங்கத்தக்க நிலையில் அந்நூல்கட்கு உரையெழுத வேண்டும் என்ற திருவுள்ளம் உண்டாயிற்று.
அதனால் சிறந்த பல உபநிடதங்கட்குப் பொழிப்புரையும், பிரமசூத்திரத்துக்குப் பேருரையும் எழுதினார்.
பிரம சூத்திரத்தைச் சமன்வயம், அவிரோதம், தூதனம், பலம் என நான்கு அத்தியாயங்களாக வகுத்து,
ஒவ்வொன்றையும் நந்நான்கு பாதங்களாகப் பிரித்து விரிவுரை கண்டிருப்பது அவரது பரந்த கல்வியையும்
நிறைந்த புலமையையும் காட்டிப் படிப்போருள்ளத்தில் வற்றாத இன்பத்தைச் செய்வதாகும். மூன்றாவதாகிய
சாதனாத்தியாயத்தில் பிரமவித்தையையும், இறுதி அத்தியாயத்தில் அப் பிரம வித்தையின்
பயனையும் கூறுகின்றார். இவ்விரிவுரையில் அவர் மேற் கொண்ட சொன்னடையோ பாலும் தேனும் போலப்
பயில்வோர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பான்மையுடையது.
இந் நூற்கடலில் தோய்ந்து அவற்றின்
பொருளை நினைந்து நினைந்து ஆழ்ந்த சிந்தையும் அஃகி அகன்று அறிவும் உடையரானார், அவற்றைப்
பன்முறையும் எண்ணித் தாம் இன்புறுவதை உலகும் இன்புற வேண்டும் என்ற அருள் உள்ளத்தால் ஏட்டில்
எழுதினார்; அவ்வெழுந்து உள்ளத்துச் சிந்தைக்கண் ஊறி உறைந்தது. அது வழியாகப் பிரம ஞானம் என்னும்
பரஞானம் அவர் கைவரப் பெற்றார். “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர்”
என்றபடி பரமே பார்த்திருக்கும் பரஞானச் செல்வராய் பிரமஞானப் பெருமகனாய் விளக்க மெய்தினார்.
பரமார்த்தமே அவரது பார்வை ஆயிற்று.
மிக விரைந்து செல்லும் வானவூர்தியில்
நம் நாட்டின் மேலைக்கடற் கரையிலிருந்து மேற்றிசை நோக்கிச் செல்வோன் மீண்டுவந்து சேரும்
வரை ஞாயிற்றொளியிலேயே இருப்பது போலவும், வானவெளியில் நிலவுருண்டையின் “வளியிடை வழங்கா
வழக்கரு நீத்தம்” எனும் எல்லைக்கண் அவ்வுருண்டையைச் சூழவருவோன் ஞாயிற்றொளியிலே இருப்பது
போலவும், பகவானான சங்கரர் பரம்பொருளான பிரமத்தின் ஞானவொளியிலேயே இருக்கலானார். வானவூர்தியில்
சூழ வந்தவன் நிலவுருண்டையைச் சுற்றிக் கருங்கதிர்க் கற்றைபோல இருள்தோன்றக் காண்கின்றான்.
சங்கரரோ நிலவுலகில் உடம்பொடு கூடி நின்றே தமது ஞானத்தால் மேலுயர்ந்து பிரமத்தின் ஞானப்பரவெளியில்
நிலவுருண்டை யையும், அதுபோன்ற பிற அண்டங்களையும், அவற்றின் புறத்தும் அகத்தும் இருக்கும்
பொருள்கள் அத்தனையையும் கண்டார்; ஆனால், அவரது ஞானக்கண்ணுக்கு எங்கும் பிரமமே காணப்பட்டது;
பார்க்குமிட மெங்கும் நீக்கமற நிறைந்த ஒரு பரிபூரணப் பிரமமே தோன்றியதல்லது இருளே காணப்படவில்லை.
“எனை நான் என்பதறியேன் பகல் இரவாவதும் அறியேன்” என்ற திருவாசகத்தின் செம்பொருளாய்
விளங்கினார்.
இங்ஙனம் பிரமஞானியாகத் திகழ்ந்த
சங்கரர், தட்சிணாமூர்த்தி சுலோகம் என்ற சிறுநூல் ஒன்றைச் செய்கின்றார்; அதற்கு ‘மான
சோல்லாசம்’ எனப் பெயரிய மொழிப்புரையுண்டு. பிரமத்தை நிர்க்குண நிலையிற் கண்ட அவர் சகுண
நிலையில் தட்சிணாமூர்த்தத்திற் கண்டு வழிபடுகின்றார். அந்த மூர்த்தம் (திருவுரு) அறிவும்
செயலுமுடைய சிவவடிவு என்றும், சிவன் உலகைப் படைப்பதும், ஆன்மாவுக்குக் கட்டும் வீடும் அமைவதும்,
கட்டு நீங்கி வீடு பெறுதற்கு அறிவுரை (உபதேசம்) வழங்குவதும் ஆகிய யாவும் மாயையால் ஆவன (தஸ்மாத்
மாயா வலாச அயம் ஜகத் கர்த்ருத்வம் ஈஸூது: பந்த மோக்ஷோபதே ஸாதி வ்யவஹாரோபி மாயயா) என்றும்
கூறுகின்றார். மற்றொரு சுலோகத்தில் இந்த மாயையை அவித்தை என்று கூறி, அது உலகியல் வாழ்க்கைக்குக்
காரணம் என்று கூறுகின்றார். இந்த மாயைக்கு இடம்யாது என்ற வினாவுக்கு மயக்குகின்ற இந்த மாயை
மாகேசனுடைய மாயாசத்தி (ஏஷைவ மோகினீ நாம மாயாஸக்தி: மகேஸ்து:) என விடை கூறப்படுகிறது. இந்த
மாயையின் மயக்கும் நீங்கினாலன்றி ஆன்மாவுக்கு வீடு பேறில்லை என்பதும் இங்கே கூறப்படுகிறது.
இதனால், இன்ப நிலையமான வீடுபேற்றுக்குத் தடையாய் மேன்மேலும் பிறப்பிறப்புத் துன்பத்துக்குக்
காரணமாய் இருப்பது மாயை என்று அறியலாம். தனக்கு இடமாகிய பிரமத்தை மயக்காத நிலையை மாயை
எனவும், பிறவுயிர்களை மயக்கும் பிரமத்தை மயக்காத நிலையை மாயை எனவும், பிறவுயிர்களை மயக்கும்
நிலையில் அவிச்சை எனவும் சங்கரர் வழி நிற்கும் அறிஞர் கூறுகின்றனர். உணரும் உணர்வை மயக்குதலால்
அவ்விச்சையை இன்ன தன்மைத் தென உரைப்படாமையின் ‘அநிர்வசனீயம்’ எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.
இவ்வகையால் சங்கரரையும் அவர் வழி நிற்போரையும் அநிர்வசனீய வாதிகள் என்று பிறரெல்லாம்
கூறுவதுண்டு.
இந்நிலையில் சங்கரரது பிரமவித்தை தோன்றுதற்கு
முன்பே இன்ன காலத்தில் இன்னவரால் காணப்பட்டதெனத் தெரியவொண்ணாத சைவ நெறியில் மாயை என்றும்,
அது மலம் மூன்றனுள் ஒன்று என்றும் வழங்கி வந்தது. ஒளிமயமான சத்திவடிவினதாய் சிவசத்தியை ஆதாரமாகக்
கொண்டிருப்பது சைவர் கூறும் அந்த மாயை. பேரின்பமான சிவப் பேற்றுக்கு வழிமுறையான உலகியல்
வாழ்வுகட்கு முதற் காரணமான உள் பொருளாதலால் அநிருவசனீயம் அன்று; “பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாய்
நித்தமாய்ச் சடமாய் முதல்வனுக்குப் பரிக்கிரக சத்தியாய் முதல்வனின் வியாப்பியமாய் மெய்ப்பொருளாய்
அருவாய் உள்ளது மாயை” என்றனர்.
சங்கர வேதாந்திகள் ‘அவிச்சை அநிர்வசனீயம்
எனப்’ புதுமையாக வுரைத்த மாயை என்ற வடசொல், மறைதற் பொருளில் மாய் என்ற வினையுரிச்
சொல்லின் அடியாகத் தோன்றிய மாயம் என்ற சொற்போல ஓசையும் பொருளும் ஒத்து நிற்பதுபற்றித்
தமிழர் மறைப்பது என்ற கருத்தில் தமது பேச்சிலும் எழுத்திலும் கையாளத் தொடங்கினர். சமய
நூலறிஞருட் பலர் துன்பத்துக்கெல்லாம் காரணம் அறியாமை என்றும், அறிவை மறைப்பது மாயை என்றும்
நாட்டு மக்களிடையே பேசலுற்றனர். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் சென்னையில் சங்கரவேதாந்திகளிற்
சிலர் அதன் வடபகுதியில் திருமடம் அமைத்துச் சங்கரர் உரைத்தருளிய பிரம ஞான வேதாந்தத்தைப்
பரப்பி வந்தனர். திருவொற்றியூரிலும் கோடம்பாக்கத்திலும் இருந்து சைவத்தை உரைத்துவந்த
கோளகிமடமும் நிறைந்த நாயனார் என்ற நிரஞ்சனகுரவர் திருமடமும் பதினாறு பதினேழாம் நூற்றாண்டில்
மறைந்தன. அதனால் சென்னையில் இருந்து சமய ஞானப் பணிபுரியும் சைவ மடங்கள் இலவாயின. தமிழல்லாத
பிற மொழிகளில் யாவர் யாது கூறினும் அதனை ஆர்வமோடு ஏற்று ஆதரிக்கும் மனப்பாங்கு அக்காலத்
தமிழரிடையே பெரிதும் நிலைபெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் சமயவுணர்வு வளரப் பெற்றவராதலால்
துன்பத்துக்கெல்லாம் காரணமாவது மாயை என்று வடமொழியால் சங்கர வேதாந்திகள் புதிது காட்டியதைப்
பொதுமக்கள் அறிந்திருப்பது பற்றி, துன்பக் காரணமான மாயையைப் போக்குதற்குத் திருவருளே
பெருந்துணை என எடுத்துரைத்து, அவ்வருளை வழங்கத் திருவுள்ளம் கொள்க எனச் சிவன்பால் வடலூர்
வள்ளல் முறையிடுகின்றார்.
2213. சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின்
சித்தம் திருவருள்என்
பால்வைக்கும் மேல்இடர் எல்லாம்
எனைவிட்டப் பால்நடக்கக்
கால்வைக்கு மேநற் சுகவாழ்வென்
மீதினில் கண்வைக்குமே
மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு
மேதங்கள் வாய்தனிலே.
உரை: கயல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியைப் பாகத்தில் கொண்ட பரமனே, நின் சித்தத்தை என்பால் அருளோடு வைப்பாயாயின், இடரெல்லாம் என்னை விட்டு நீங்கும்; சுகவாழ்வு எனக்கு எய்தும்; மாயையின் வாயில் மண் விழும். எ.று.
கயல் மீனைப் பரதவர் 'சேல்' என்று கூறுவர். நின் சித்தத்தில் எனக்குத் திருவருள் விளக்கம் உண்டாதல் வேண்டும் என நினைத்தருள்க; அதன் விளைவு பெரிது என்றற்கு “நின் சித்தம் திருவருளை வைக்குமேல்” என்று கூறுகின்றார். அஃது இன்னும் எனக்கு எய்தவில்லை என்பது குறிப்பு. என் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தோன்றித் துன்பம் பயக்கும் குற்றமெல்லாம் நீங்கத் தலைப்படும்; அவை இப்போது என்பால் இருந்துகொண்டு என்வாழ்வுக்கு இடர் செய்கின்றன என்று விளக்குவாராய், “இடர் எல்லாம் என்னைவிட்டு அப்பால் நடக்கக் கால் வைக்கும்” என்று உரைக்கின்றார். நீங்கத் தலைப்படும் என்பதை நடக்கக் கால் வைக்கும் என நயமாக மொழிகின்றார். கால் வைத்தல் - தொடங்குதல். இருள் நீங்க ஒளிபரவுவதுபோல் இடர் நீங்க இன்ப வாழ்வு எய்துதலால் “நற் சுக வாழ்வு என் மீதினில் கண் வைக்கும்” என்று இயம்புகிறார். சுகவாழ்வு எனப் பொதுப்படக் கூறின் உலகியல் இன்ப வாழ்வையும் சிவானந்தப் பேரின்ப வாழ்வையும் ஒப்பக் குறிக்குமாதலால், சிவபோகப் பெருவாழ்வையே குறித்தற்கு “நற்சுகவாழ்வு” எனக் கூறுகின்றார். “சருவஞானோத்தரம் என்னும் ஆகமம், தத்ஸூகம் பரமம் புரோக்தம்” என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கது. ஆன்ம அறிவை மறைத்து மயக்கும் மலத்தின் வழி நின்று மாயை மயக்குமாயினும் அதனால் விளைவது அறிவுவிளக்க மாதல் பற்றிச் சைவ வேதாந்திகள் அதனை “நல்ல மாயை” எனச் சிறப்பித்து, “இருள் ஆணவம் மயக்குவது அதனால், நல்ல மாயையும் கருமமும் நாடிய உயிரை வல்லவாறெலாம் மயக்குவ; மயக்கும் ஆணவம் தேய்ந்து இல்லையேல் அவை உயிரையும் மயக்குவதிலையே” (திருவானைக்காப். ஞானோப. 23) என விளக்குவர். அறிவை மயக்கித் துன்பத்துக் குள்ளாக்கும் அவிச்சையை 'அநிர்வசனீய மாயை' என்று சங்கர வேதாந்திகள் உரைக்கின்றனர். அந்த அவிச்சை மாயையை வள்ளலார் இங்கே கருத்திற் கொண்டு “மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்தனிலே” என்று உரைக்கின்றார்.
இதனால் திருவருள் எய்துமாயின், இடரெல்லாம் நீங்கும்; அதற்குத் தாயாகும் மாயை கெடும்; சுகவாழ்வு இனிது எய்தும் என ஏதுவும் பயனும் காட்டி முறையிடுகின்றார். (43)
|