44
44. நாட்டவரிடையே வல்வழக்கிட்டு வலியோர் மெலியோரை வருத்தும் செயல் ஆங்காங்கு நிகழ்வது
கண்டு மனம் வருந்துகிறார் வடலூர் வள்ளல். மண்ணாசையும் பொருளாசையும் பொருளாக இத்தகைய வழக்குகள்
நீதிமன்றங்களில் நாளும் வந்து நிற்பதையும் காண்கின்றார். வழக்காடும் வன்மைமிக்கோர் இல்லனகூறி
வஞ்சித்து வழக்காடுவதும் பார்க்கின்றார். நீதிபதிகள் உண்மையறிய மாட்டாமல் திகைப்பதும்,
காலம் கடத்துவதும் வள்ளலார்க்கு வேதனையைத் தருகின்றது. மக்களினப் பெருக்கமும் ஆசை மிகுதியும்
நாள்தோறும் வளர்வதால் நீதிமன்றங்கள் வழக்குகளை விரைந்து ஆய்ந்து முடிவு காண மாட்டாமல் ஆண்டுக்கணக்கில்
காலம் கழிக்கின்றன. முறை வேண்டி வழக்குத் தொடுப்பவருட் பலர் தமது வாழ்நாள் எல்லைக்குள்
முடிவு பெறாது இறத்தலும் செய்கின்றனர். அரசுக்குரிய கடமைகளான முறை செய்தல் காப்பாற்றல் என்ற
இரண்டனுள் முறை செய்தலையே திருவள்ளுவரும் முதற்கடனாக மொழிகின்றார். நீதி மன்றங்களின்
நடையும் வகையும் முறைசெய்தலாகிய அறத்துக்கு அரண் செய்வதாக இல்லை. மேனாட்டவரும் முறை தெரிந்து
நீதி வழங்குவது காலத்தாழ்வுக்கு இரையாகக் கூடாது; காலத் தாழ்வு நீதியை மக்கட்கு மறுப்பதுபோலும்
குற்றமாம் என்பர். எனினும், காலத்தாழ்வும் அதனால் பொருட்கேடும் நீதிமன்றங்களின் இன்றைய
இயல்பாக அமைந்துள்ளன. இக் குறை விரைவில் நீங்கலாகாத நிலையில் இருப்பதை எண்ணிய வடலூர்
வள்ளல் இறைவன் மாமனாக வந்து வழக்குத்தீர்த்த அருட் செயலை எண்ணுகிறார்.
மதுரை நகரில்
வாழ்ந்த தனபதி யென்ற வணிகன் தான் ஈட்டிய பொருளைத் தன் உடன் பிறந்தாள் மகனுக்கு உரிமை செய்துவிட்டு
மகப்பேறு வேண்டித் தம் மனைவி வழிபடத்தவம் மேற்கொண்டு சென்றான். அவன் வாரான் எனத் தெரிந்த
தாயத்தார் மருகனை வெருட்டிவிட்டு வணிகனது உடமைகளைத் தாம் கவர்ந்து கொண்டனர். நீதி வேண்டி
முயன்ற தாய்க்கு அது இனிது கிடைப்பதாகத் தோன்றவில்லை. அவள் ஆலவாய் இறைவனிடம் முறையிட்டாள்.
அப் பெருமானும் அருள் கூர்ந்து தனபதியின் உருவிற் போந்து நீதிமன்றத்தில் உண்மைகூறி வழக்குரைத்து,
அவள் பக்கல் நின்று தாயத்தார் கவர்ந்து கொண்ட பொருளைப் பெறுவித்தார்.
வல்வழக்கிடுவோரும்
விரைந்தாய்ந்து, முறை செய்யமாட்டாத நீதிமன்றங்களும் இந்நாளிற் பெருகியிருப்பது வடலூர்
வள்ளற்கு வருத்தம் விளைத்தலால், முன்போல் இப்போதும் என்போல் ஏழை எளியவர்கள் நீதி பெறுதற்கு
வழக்குரைத்தல் வேண்டும் என இறைஞ்சி முறையிடுகின்றார்.
2214. ஒருமாது பெற்ற மகன்பொருட்
டாக உவந்துமுன்னம்
வருமாம னாகி வழக்குரைத்
தோய்என் வழக்குரைத்தற்
கிருமா நிலத்தது போல்வேடங்
கட்ட இருத்திகொலோ
திருமால் வணங்கும் பதத்தவ
யானுன் சிறுவனன்றே.
உரை: திருமால் வணங்கும் திருவடிகளையுடைய சிவபெருமானே, மதுரை மாநகரில் ஒருத்தி பெற்ற மகனுக்காக மாமனாகி வந்து அன்று வழக்குரைத்து நீதி பெறுவித்தாய்; அதுபோல் இன்று என்பொருட்டு வழக்குரைத்தற்காக வேடம் பூண்டு வருதற்குரிய அருளுள்ளம் கொள்ளுதல் வேண்டும்; யானும் உன் சிறுவர்களில் ஒருவனன்றோ எ.று.
ஒரு மாது - தனபதி என்ற வணிகனுடன் பிறந்த தங்கை, தன் மகன் பெற்ற பொருளைத் தனபதியின் தாயத்தார் கவர்ந்து கொண்டாராக அப் பெண் ஆலவாய்ப் பெருமான் திருமுன் சென்று நின்று,
“என்மகன் தன்னை மைந்தன் இன்மையால் எவரும் காணத் தன்மக னாகக் கொண்டு தகுதியால் அன்றே காணி பொன்மனை பிறவும் நல்கிப் போயினான் எம்முன்; இப்பால் வன்மையால் தாயத் தார்கள் அவையெலாம் வௌவிக் கொண்டார்.
“ஒருத்திநான் ஒருத்திக் கிந்த ஒருமகன் இவனும் தேறும் கருத்திலாச் சிறுவன்; வேறு களைகணும் காணேன் ஐய அருத்திசால் அறவோர் தேறும் அருட்பெருங் கடலே எங்கும் இருத்திநீ அறியாய் கொல்லோ”
என்று முறையிட்டு வழிபட்டாள். அவன்பொருட்டுச் சொக்கப் பெருமான் மாமனாகிய தனபதியுருவில் வந்தாராகலான், “மகன் பொருட்டாக உவந்து முன்னம் வரு மாமனாகி வழக்குரைத்தோய்” என்று வள்ளலார் உரைக்கின்றார். புராண காலத்திற் போந்தது போல, இந்நாளில் இறைவன் வந்து எளியவர் பொருட்டு வழக்குரைப்பரோ என உலகவர் ஐயுறாமைப் பொருட்டு எடுத்துரைக்கின்றாராததால், “என் வழக்குரைத்தற்கு வேடம் கட்ட இருத்தி கொலோ” என வேண்டுகிறார். அன்பர்களின் வேண்டுகோட்கேற்ப உருக்கொண்டு போந்து உண்மை யுணர்த்துவது இறைவன் இயல்பாதலால், “வேடம் கட்ட இருத்தி கொலோ” எனக் கூறுகின்றார். வணிக மகன் “தேறும் கருத்திலாச் சிறுவன்,” அவனைப் போலவே யானும் சிறுவனாதலால் என் பொருட்டு வழக்குரைத்தல் தகும் என்றற்கு “யான் உன் சிறுவனன்றே” என விண்ணப்பிக்கின்றார். சிறுமை - எளிமை.
அன்று வழக்குரைத்து மக்கட்கு வாழ்வளித்ததுபோல இன்றும் என் போலும் எளியார்க்கு அருள் வழங்குக என முறையிடுவது இப் பாட்டின் பயன். (44)
|