45
45. உலகில் அறிவன அறிந்தும் செய்வன செய்தும்
நுகர்வன நுகர்ந்தும் வாழ்வாங்கு வாழ்ந்து உய்திபெறுதல் கருதி உடம்பும் கருவிகளும் படைத்து அவற்றை
நன்னெறியில் இயக்குதற்கெனத் திருவுள்ளம் அருள் கூர்ந்து அளித்த நெஞ்சம் மிகநுண்ணிய மாண்பு
சான்ற கருவியாகும். நன்மையே யுருவாகிய பரம்பொருளாகிய நீ படைத்தளித்த பெருமையுடைய தாகையால்
அந் நெஞ்சம் நல்லதே யாவதல்லது வேறாதற்கு வழியில்லை. கருவிகளோடு கூடிக் கலந்து காண்பன காண்டற்கும்,
கண்டவற்றை ஆய்ந்து தெளிதற்கும், ஐயமும் திரிபும் தோன்றி அலைத்தவழித் தேறித்தெளிந்து செம்மை
எய்துதற்கும், கருவியொடு கூடாது தனித்திருந்து நீள நினைதற்கும், ஆழ்ந்து சிந்தித்தற்கும் இன்றியமையாத
திருவருளைச் செய்தும், திகைப்புறுமிடத்துத் திப்பிய அருளறிவின் ஒளி வழங்கியும், பால் நினைந்தும்
ஊட்டும் தாய் போலப் பரிந்து உதவுகின்றாய். நின் அருளாரமுதத்தை ஆரவுண்டு ேபதக்குகிறது
என் செவ்விய நெஞ்சம். இங்ஙனம் இருக்கவும், நின் பேரருளை யுணர்ந்து அதன்வழி நின்று நின்
உதவி நினைந்து அன்பு மிகுந்து நின்னை அடைதலைக் கருதாமல், உடல் கருவி யுலகு என்ற பொருள் வழி
நின்று புன்மையுறுகிறது. இதற்கு என்னையோ காரணம் என்று எண்ணும்போது ஒன்றும் தெரியவில்லை; எனது
நெஞ்சு கல்லோ, கட்டையோ, எட்டிக்காயோ எதனால் இயன்றதெனத் தெரியவில்லை. இது நன்னெஞ்சமாதல்
வேண்டும்; ஆனால் அன்றிப்பயனில்லை இதற்கு யான் செய்ய வேண்டியது யாது? அருள் புரிக என
வள்ளலார் முறையிடுகிறார்.
2215. முன்னஞ்ச முண்ட மிடற்றர
சேநின் முழுக்கருணை
அன்னஞ் சுகம்பெற உண்டும்உன்
பால் அன் படைந்திலதால்
கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச
மோஎட்டிக் காய்நெஞ்சமோ
என்னெஞ்சமே ன்னஞ்ச மோதெரி
யேன்இதற் கென்செய்வதே.
உரை: முன்பொருகால் நஞ்சமுண்ட திருக்கழுத்தையுடைய பெருமானே, உன் கருணையாகிய அருளமுதத்தை நன்கு வுண்டும், சுகமாகிய அன்பைப் பெறாமல் குறைப்பட்டுக் கிடக்கிறது என்னெஞ்சம்; இஃது என்ன கல்லானதா? மரக்கட்டையாலானதா? எட்டிக்காயாலானதா? எதனால் ஆகியது? என்ன செய்வது? அடியேனுக்கு விளக்குகின்றதில்லை. எ.று.
முன்பொருகால் இறவாப் பெருவாழ்வு வேண்டித் தேவர்கள் கடல் கடைந்த காலத்தில். அக் கடலிடைத் தோன்றிய நஞ்சினையுண்டு அத்தேவர் இறவாநிலை பெற்று மகிழவேண்டிக் கழுத்திலே நிறுத்தி, “இவ்வாறு இனிமுயலலாகாது; அது பயனுடைய செயலன்று; இறவாத அமர வாழ்வு என நீங்கள் நினைப்பது இறந்துபடும் இயல்புடையது; என் திருவடியடைந்து பெறும் சிவஞான வாழ்வொன்றே நிலையாயது; அந்த நல்வாழ்வை அழிக்கவல்லது யாதும் இல்லை; உயிர் வாழ்வை அழித்தொழிக்கும் ஆற்றல் மிக்கது எனக் கண்டு நீங்கள் அஞ்சிய நஞ்சு என்பால் ஒன்றும் செய்யமாட்டாது தன் தன்மை கெட்டு நிற்பது காண்மின் எனக்காட்டுவது திருக்கழுத்து என்று விளக்குதற்கு, “நஞ்சம் உண்ட மிடற்று அரசே” என்று வள்ளலார் மிடற்றைக் குறித்தருளுகின்றார்.
'அன்னம்' என்பது சோற்றுணவு. அதனை உண்பது சுகம் பெறற்கென்பது உலகியற் கருத்து. கொடையாகப் பெறுவனவற்றுள் பெறுவோர் “போதும்” என மனவமைதி பெறுதற்கமைந்தது, அன்னமாகிய உண்டியல்லது பிறிது யாதும் இல்லை. அன்னம் இடுவோரும் அதனைக் குறையுண்டாக இடுவதில்லை. உண்போர் அமைதிபெறும் அளவே நல்குவர். இக் கருத்தெல்லாம் விளங்க “நின் முழுக்கருணை” எனவும், “சுகம்பெற உண்டும்” எனவும் அடிகளார் எண்ணி இயம்புகின்றார். அன்னம் உண்டவர் உடனடியாகச் சுகம் பெறுவதுபோல, நின் கருணையாகிய அன்னத்தை ஆரவுண்டும் அன்பாகிய சுகம்பெறவில்லை என்று காட்டுதல் வேண்டு, “அன்னம் சுகம்பெற வுண்டும் உன்பால் அன்பு அடைந்திலது” எனவுரைக்கின்றார். அதற்குக் காரணம் கொடுக்கப்பட்ட அன்னமாகிய அருளின் அளவு குறைவாக இருக்குமோ எனின், அற்றன்று, நிறைய அளிக்கப்பட்டது என்றற்காகவே “முழுக்கருணையன்னம்” என மொழிகின்றார். அற்றாயின் அன்னத்தையுண்ட நெஞ்சின்கண் குறையுளதாகல் வேண்டும் எனத் தெரிந்து அதனை ஆராய்கின்றார். அந்நிலையில் நெஞ்சின்பால் கல்லின் தன்மையும், மரக்கட்டையின் தன்மையும், எட்டிக்காயின் தன்மையும் எனப் பல தன்மைகள் தோன்றக் காண்கின்றார். இதுதான் என வரையறுத்துத் துணியமாட்டாமை புலப்பட, “என் நெஞ்சமோ எனது நெஞ்சம் தெரியேன்” எனச் செப்புகின்றார். இவற்றுள் ஒன்றோ பலவோ துணியப்பட்டாலும், அத் தன்மை மாறினாலன்றிக் கருணையாகிய அன்னமுண்டு பெறும் சுகமாகிய அன்பு பெறலாகாது; அதற்கு என்ன செய்வது; அருளுக என முறையிடுவாராய், “இதற்கு என் செய்வது?” என இசைக்கின்றார். 'ஈசன்பால் அன்பே சிவஞானம்” என்பர் சேக்கிழார் போன்ற சான்றோர். அதனாற்றான் அடிகளார் அன்புக்காக அவலிக்கின்றார் என்பது இப்பாட்டின் பயன். (45)
|