46

46. மானம் என்னும் குற்றம் தம்பால் இருந்து விளைவிக்கும் துன்பத்தை எடுத்து மொழிக்கின்றார். மாண்புடையதும் மாண்பில்லாததுமாக மானம் இருவகைப்படும். மாண்புதரும் நல்ல அறநெறி ஒழுக்க நெறிகளின்றும் அறிவும் சால்பும் உடையராய்ப் பலரும் நன்கு மதிக்கும் பண்புடைய நிலையொன்று யாவர்க்கும் உண்டு. அந்நிலைக்குத் தாழ்வு தரும் செயலில் ஈடுபடாதொழுதல் மாண்புடையமானமாகும்; இதனை யாவரும் விரும்புவர்; தம்மை அறியாமல், காரணமின்றியே தாழ்வுதோன்றிவிடின், மானம் பொறாமல் சிலர் உயிரையே விட்டொழிப்பர்; அவர் செயலும் மாண்புடைய மானமாகும். “மயர் நீர்ப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்” என்று திருவள்ளுவர் அம் மான மாண்புடையாரை எடுத்துக் காட்டுகிறார். தாழ்ந்து பணியவேண்டிய பெரியோர்க்கும் தலை தாழ்ந்து பணிந்தொழுகுவது அறமாதலின் அத் தாழ்வு குற்றமான மானமாகாது. இழி செயலால் கீழ்மையுற்றோர்க்கு அஞ்சித் தாழ்வதும், தம் நிலையின்றும் தாழ்வு படுத்தும் பொருள் மிகவும் இன்றியமையாததென்று கருதிச் செய்வதும், தம் சிறப்புக்கு இழிவுதரும் செயலை மேற்கொள்ளுவதும், இழிபடுத்துவோரைப் பின் சென்று ஒழுகுவதும் மானமுடையார்க்கு ஆகாத செயல்களாகும். பெருந்தகைமை பீடழிய வந்தபோதும், எதிர்பாராத வகையில் கண்டார் இகழும் இழிவுதோன்றிய காலையும், ஒருவன் மானம் கருதி உயிர் விடுவது, இம்மையிற் புகழும் மறுமையில் தெய்வவாழ்வும் தரும் எனத் திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். இத்தகைய மானவுணர்வின்றி வாழ்வோர் மக்களினத்திற் காணப்படுகின்றனர். அவர்களாற் சமுதாயம் கீழ்மைப்படுகிறது. அது கண்டு நல்லோர் வருந்துகிறார்கள். அறிவுடையோர் அஞ்சுகின்றார்கள். ஆன்றாரும் சான்றோரும் அவலம் எய்துகின்றார்கள். இங்ஙனம் தம்மையும் தம்மைச் சூழவுள்ள சமுதாயத்தையும் தாழ்வுறுத்தும் மானம் என்னும் குற்றம் இல்லாதவாறு நீங்குதல் எங்ஙனம் என எண்ணுகிறார் நம் வள்ளற் பெருமான், உலகிற் பிறந்து உணர்வு தோன்றும் காலத்தே உயிர்வாழ்வில் விருப்பும் அதற்குரிய பொருள்மேல் பற்றும் உண்டாகின்றன. உயிர்ப்பற்றும் பொருட்பற்றும் மக்களறிவை மயக்கித் தம்மையே நோக்குமாறும் பேணுமாறும் செய்கின்றன. மயங்கி உறைப்புண்ட அறிவு, வாழ்க்கையையும் பொருளையுமே விழைந்து “அவற்றை எய்துதற்கே மனமொழி மெய்களை இயக்குகிறது. அவைகளை எய்துதற்காக மேற்கொள்ளும் செயல் வகைகளால் உண்டாகும் உயர்வு இழிவுகளை எண்ணாத உறைப்பும் திண்மையும் மக்கள் உள்ளம் அடைகிறது. மயங்கிய மனம் உயிர்நெறியின் உயர்வையே கருதுவதை விடுத்து உயிர் வாழ்க்கையொன்றே நினைந்து இழிவுதரும் செயலையும் செய்யத்தக்கது எனத் துணிந்து செயற்படுகிறது. “இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உயிர் உய்க” எனச் சில பொருள் நூல்கள் கூறுகின்றன. இவ்வாற்றால் குற்றமான மானவுணர்வு தோன்றி மனத்தின் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. ஏனை வாயும் மெய்யும்போல் மாசு துடைத்து நீக்கப்படும் பொருள் அன்று மனம்; இறையருளாலன்றி மயக்ககன்று குற்றம் நீங்கும் வாய்ப்பில்லாமை காண்கின்றார்; இறைவன்பால் முறையிடுகின்றார்.

2216.

     வானம் விடாதுறு கால்போல்என்
          தன்னை வளைந்துகொண்ட
     மானம் விடாதிதற் கென்செய்கு
          வேன்நின்னை வந்தடுத்தேன்
     ஊனம் விடாதுழல் நாயேன்
          பிழையை உளங்கொண்டிடேல்
     ஞானம் விடாத நடந்தோய்நின்
          தண்ணருள் நல்குகவே.

உரை:

     ஞானநடம் புரியும் பெருமானே, என்னை வளைந்து கொண்ட மானம் விடுவதாக இல்லை; யான் ஒன்றும் செய்யமாட்டாமையால் நின்னை வந்தடைந்தேன்; மானத்தால் விளையும் ஊனமாகிய குற்றத்தின் நீங்கமாட்டாது வருந்துகிறேன்; என் பிழையைத் திருவுள்ளத்திற் கொள்ளமால் நின் தண்ணிய அருளொளி நல்குக. எ.று.

     குற்றமான மானத்துக்கும் மக்கட்கும் உள்ள தொடர்பு காற்றுக்கும் வானத்துக்கும் உள்ள தொடர்புபோல்வது என்றற்கு, “வானம் விடாதுறு கால்போல் என்னை வளைந்து கொண்ட மானம்” என உரைக்கின்றார். வானத்திலிருந்து காற்றுத் தோன்றுமென வேதம் கூறிற் றென்பர் வைதிகர். திருமுறை வழி நிற்கும் சைவர், காற்று ஒடுங்குதற்கு வானம் இடமாவதன்றி அது தோன்றுதற்கு வானம் காரணமன்று என்பர். நிலம் முதல் வானம் ஈறாகிய ஐந்தில் ஒவ்வொன்றும், தனக்குரிய தன் மாத்திரையினின்றும் தோன்றி ஒன்றினொன்று ஒடுங்குதற்கு இடமாம் என்பது சைவநூற் கருத்து. 'காற்றை விடாது வளைந்து கொண்டிருக்கும் வானம் போல என் உள்ளத்தை மானம் வளைந்து கொண்டுள்ளது' என வுரைக்கின்றார். இது நின் திருவருள் அமைப்பதாலின், என் செயலன்று என்பாராய், “என் செய்குவேன்” எனத் தமது ஆற்றலின்மையை வெளிப்பட மொழிகின்றார். மானம் வளைந்துக் கொண்டதனால் உணர்வு குறைபட்டுப் பிழை மிக்கவனானேன்; பிழை செய்வாரை ஆதரித்தால் மேலும் பிழையே செய்வன் எனக் கருதிக் கைவிடலாகாகது என உரைக்கலுற்று, “ஊனம் விடாது உழல்நாயேன் பிழையை உளம் கொண்டிடேல்” என உரைக்கின்றார். ஊனம்-குறைவு; குற்றமுமாம். உலகில் வாழ்வாங்கு உயிர்கள் வாழ்தல் வேண்டி ஆடுவது “ஊன நாடகம்”; யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி ஆடுவது “ஊன நாடகம் என்று மணிவாசகரின் திருவாசகம் தெரிவிப்பது காண்க. இவ் விருவகைப்பற்று மொழித்து அருள் வாழ்வில் வாழ்விப்பது ஞான நாடகம், “ஊன நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனைப் பருக வைத்தவா, ஞான நாடகம் ஆடுவித்தவா, நைய வையகத் துடைய இச்சையே” என்பது திருவாசகம். திருவருள் ஞானம் எய்தினன்றிக் குற்றமறுத்த பெருவாழ் வெய்தாதென்பது முடிபாதலின் “தண்ணருள் நல்குகவே” என முறையிடுகின்றார்.

     இதனால் மானமாகிய குற்றம் அமைந்திருக்கும் திறம் அறிவித்து அதனின் நீங்கி ஞானவாழ்வு பெறத் தண்ணிய அருள் நல்குக; மக்களினம் மாண்புறும் என்பது கருத்தென அறிக.

     (46)