47
47.
வறுமை காரணமாக ஒருவன் எய்தும் துன்ப வகைகளைக் குறிப்பதற்கு “மிடி” என்றொரு சொல் தமிழ் நூல்களிற்
காணப்படுகிறது. இச் சொல்லைச் சங்க இலக்கியங்களில் காண்பதரிது; அவற்றிற்கு உரைகண்ட நச்சினார்க்கினியார்
முதலியோர் பெரிதும் எடுத்து வழங்கின்றார்கள்; பிற்கால நூலோர் பலரும் வறுமைத் துன்பங்களை
இச் சொல்லால் குறிக்கின்றார்கள். இல்லாமை, இன்மை, வறுமை, நல்குரவு எனப் பல சொற்கள்
இருக்க, மிடியென்றும் மிடிமை என்றும் வழங்கும் இப் புதுச்சொற்கள் தோற்றுவானேன்? என்ற
கேள்வி இங்கே எழுகிறது. இல்லாமை எனத் தொழிலுருவில் நிற்கும்சொல் இன்மையெனச் சுருங்கிப்
பண்புருவில் வருகின்றது. “இன்மையே இன்னாதது” என்ற சொல் வழக்கு இதனை நினைவுருத்துகிறது. உள்ளதும்
உடையதுமாகிய பொருள் நாளடைவிற் செலவாய்ச் சுருங்கி வற்றி இல்லாகும் இன்மை வறுமையாகிறது. ஒப்புரவுபோல
ஈறு கொண்டுலவும் நல்குரவு இவ்வின்மைப் பொருளை உணர்த்துகிறது. ஒப்புரவு என்பது ஒத்தது என்ற
பொருளில் திருவள்ளுவரால் உரைக்கப்படுகிறது. ஒப்புதல் ஒத்தலாதலால், தல்லீற்றுப் பொருளையே
உரவு என்னும் ஈறும் உணர்த்துவது காணலாம். அம் முறையில் நல்குரவு என்பதும், நல்குதல் என்ற
பொருளில் பிறந்து நல்காமைக்குரிய இன்மை நிலையைக் காட்டுவது தெரிகிறது. உடன்பாட்டு வகையில்
தோன்றி எதிர்மறைப் பொருள் தருவது யாங்ஙனம் எனின், மங்கலமரபிற் சொற்களைப் படைத்து
மொழிவது என்ற வழக்காறு பற்றி இங்ஙனம் வந்தது என்னலாம்; விண்ணுலகத் தேவர் கண்கட்கு இமையில்லை;
அதனால் அவரை இமையாதவர் என்னல் வேண்டும்; ஆனால் அவர்களைச் சான்றோர் இமையவர் எனக்
குறிக்கின்றார்கள்; இமையவர் என்பது ‘இமையை’ உடையவர் எனப் பொருள் தருவது இதனால் சொற்பிறப்பின்கண்
இப்படியும் ஒரு பிறப்புண்டெனத் தெளிவாகிறது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மக்களுருவில்
உறுப்புக் குறைவு சிறிதுமின்றி மக்கட்பண்பு இல்லாதவர் உண்டு; மக்களெனப்படற்கு உரியரல்லராயினும்
அவர்கள் மக்களென் உலவுகின்றனர். அவர் கலந்த மக்களினத்திற் பிறந்து அவரிடையும் நிலவுதலால்,
சொற்களிடையும் நல்குரவு போல்வன உளவாய், நிலவ இடம் உண்டெனக் கொள்வதில் தடை ஏது?
இனி, முதனிலையும் இறுதியும் எனப் பிரித்து
நோக்காமல், ஒலிக் குறிப்பை அடியாகக் கொண்டு எண்ணுவோமாயின் ‘உரவு’ என்பது பிரிந்திசைப்பது
தெரியும். அது, தனிநிலையில் வலிமை, பரத்தல் எனப்பொருள் தருவது. “உரவுச் சினம் திருகிய
உருகெழு ஞாயிறு” (புறம். 25) “உரவு நீர்மா கொன்ற வென்வேலான்” (கலி. 27) என்பன இப்
பொருண்மைக்குச் சான்று.
இங்ஙனம் வன்மைக்கும் பரத்தற்கும்
இடமாகிய உரவு என்னும் ஒலியுணர்வு, ஒப்பலும் நல்கலும் என்ற இரண்டொடும் கலந்து ஒப்புரவு, நல்குரவு
என இயைந்து, உலக நடை நல்குமியல்புகளின் வன்மையையும் பரந்த பண்பையும் சுட்டுவது புலனாகும். நல்கும்
இயல்பு ஒருவரிடத்தே உருக்கொள்ளுமிடத்து எதிர்நிற்கும் பொருட்பற்றை வீழ்த்தியே செயற்படும்.
பற்றினும் நல்குணர்வு வலியுடைத்தானாலன்றி வெற்றி பெறாது. மங்கல மரபால், பொருள் உண்மை
சுட்டும் ‘நல்குதல்’ என்ற சொல்லொலி, பொருளின்மைக்கு ஆகி, இன்மையால் இரத்தலைத் தடுத்து
நிறுத்தும் மானவுணர்வைத் தன் வன்மையாற் கெடுத்துச் செயற்படுத்தும் திறம்பற்றி, நல்குரவு என்று
வருவதைப் பார்க்கின்றோம். திருவள்ளுவப் பெருமான், இவ்வன்மையை வியந்து, “இன்மை இடும்பை
இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் வன்பாட்டாது இல்” என்பது, நுண்ணுணர்வாற் கண்டு இன்புறத்
தகுவதாம். இதனோடு பரத்தல் என்ற பொருண்மையும் புலப்படுமாறு, இரந்தேனும் உயிர் வாழ்தல் வேண்டுமென
உலக நடையைப் படைத்தவன் நாடு முழுவதும் பரந்து இரந்து கெடுக என மொழியும் திருவள்ளுவர்,
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” எனப் பிறன் கோளை மறுத்துரைப்பதால்
அறிகின்றோம். இவ்வாறே நிரப்பு என்னும் சொல்லும் நிரம்புதல் என்ற விதிப்பொருண்மையிற்
பிறந்து ‘நிரம்பா’ நல்குரவு என்ற பொருளில் நிலவுகிறது. “நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடரிது”
என்ற திருக்குறளைக் காண்க.
இன்மையும் வறுமையும் அடியாக நல்குரவையும்
நிரப்பையும் போக்கற்கு இன்றியமையாத வன்பாடும் பரத்தற்பண்பும் சுட்டி நிற்கும்
சொற்களிருப்ப ‘மிடி’ என்னும் சொல் வரலாறு யாது? மிடி என்னும் சொல்மிடுக்கு, மிடை, மிடல்
என்பது போல மனத்துக்கு மகிழ்ச்சி பயவாத வல்லுணர்ச்சியைக் காட்டும் ஒலிக்குறிப்புடையது.
கடியென்னும் சொல்லடியாகக் கடிதல், கடித்தல் என்ற சொற்கள் தோன்றுவதுபோல, இதனடியாக மிடித்தல்,
மிடித்தார் எனத் தோன்றியுள்ளன; கலித்தொகை சீவக சிந்தாமணி முதலிய நூலுரைகளில் நச்சினார்க்கினியர்
பல வாய்ப்பாடுகளில் வழங்குகின்றார். அவர் கூறுவதலால், வறுமைக்கண் துன்பம் மிடைந்து வருத்தும்
நிலை மிடிமையாவது காண்கின்றோம்.
மிடிமை நிலை இரத்தற்கு
இடந்தராது மறுக்கும் நாணமாகிய நற்பண்பையும் தாழ்வுவரின் உயிர் வாழாத உணர்வுதரும் நாணத்தையும்
வன்மையாகப் போக்கி மனநோயை விளைவிக்கும் இயல்பினது. உண்ணாமை மேற்கொண்டார்க்கு வேண்டும்ம்
நோன்மை (பொறுக்குமதன்மை) யினும், மிடிமையை ஏற்றுத் தாங்குவது பெரிதாகும். இன்மை காரணமாக
வரும் பசித்துன்பம் உடலோடே நின்று, காலம் தவறுமாயின் ஒரளவு குறையும் தன்மையதாகும்; உண்பொருள்
கிடைத்த வழி ஒழிந்து போவதும் அதற்குள்ள உண்மையியல், மிடிமை பயக்கும் கடுந்துன்பம்
பொருளால் மாத்திரம் ஒழிவதன்று; திருவருளால் எய்தும் அறிவு வன்மை மேல் நிற்பது. அவ் வன்மை
தமக்கு எய்தியிருப்பதை உணர்கின்றார் வடலூர் வள்ளல். அருளுதவியின் அருமையை நினைந்து நோக்குகிறார்.
அஃதொரு பாட்டாய் வெளிவருகிறது.
2217. நாயும் செயாத நடையுடை
யேனுக்கு நாணமும்உள்
நோயும் செயாத வன்மிடி
நீக்கிநன் நோன்பளித்தாய்
பேயும் கொடுந்தவத்
தால்பெற்ற பிள்ளைக்குநல்
தாயும் செயாள்இந்த நன்றிகண்
டாய்செம் சடையவனே.
உரை: செஞ்சடையையுடைய சிவபெருமானே, நாயினும் பொல்லாத நடையையுடைய எனக்கு வன்மிடி நீக்கி நல்ல நோன்பை அளித்து உய்வித்தாய்; இப்பெருநன்றிக்கு யான் யாது செய்ய வல்லேன் எ.று.
நாயினும் கடைப்பட்ட செய்கைகளையுடையேன் என்பதை “நாயும் செய்யாத நடையுடையேன் என மொழிகின்றார். நடை ஒழுக்கம்; பொதுவாக “உலகநடை” என வழங்குவது. நாணம் அருவருப்பான சொற்செயல்களைக் காணுமிடத்து உள்ளத்தில் உண்டாகும் சுருக்கம். மனநோயை “உள்நோய்” என உரைக்கின்றார். வன்மிடி பொறுத்தற்கு அரிய இடும்பை. நோன்பு பொறுக்கும் தன்மை; இது நோன்மை எனவும் வழங்கும். பெற்ற பிள்ளைக்கு நலம் செய்வதில் தாயினும் சிறந்தவர் யாரும் இல்லை; அப் பிள்ளை தான் செய்த நற்றவத்தால் பிறந்து நற் பண்புடையதாயின் தனது இனிய உயிரையும் தருதற்கு அவள் பின்னிடாள். பேயினும் கொடியளாய்த் தீத்தவம் செய்து பொல்லாங்கின் திரட்சியே உருக்கொண்டாற் போலும் பிள்ளையைப் பெற்றுளாளாயினும், தனது நலம் மிக்க அன்பு செய்தே தீர்வள். அச் செயற்கே ஒரு நன்றியும் ஈடில்லையெனின், அடிநாயாய்க் கீழ்மை வடிவாய எனக்கும் மிடிதாங்கும் மனவன்மையை அருள்கூர்ந்து நல்கிய உனக்கு யான் எத்தகைய நன்றி புரியவல்லேன் என்பாராய்,. “என் செய்வனே” எனத் தெரிவிக்கின்றார். பெற்ற பிள்ளைக்காக உயர்தவம் செய்பவள் தாய்; கொடுந்தவத்தால் கொடுமை விளைவதறிந்து அதனை மகன்பொருட்டுச் செய்பவள் தாயாகாள்; பேயேயாவள். பேய்த்தாய் கொடுந்தவம் புரிவது புராணங்களில் உண்டே தவிர உலகில் இல்லை. உற்ற நோயைத் தாங்குவது தவச்செயலாதலால், மிடியால் உண்டாகும் துன்பத்தைப் பொறுக்கும் மனத்திண்மை அருளியது உயரிய தவவன்மை நல்கும் அருட்செயல் என வியக்கின்றார். மேலைநாடுகளில் மிடிமைத் துயர் பொறாமல் வறியவர் இனம் திரண்டு மக்கட் பண்பை இழந்து விலங்கினமாக மாறி நாட்டு மக்களைக் கொன்று குவித்தனர். செல்வமக்களை வேட்டையாடி அவரது செல்வத்தைச் சீர்குலைத்தனர்; வேந்தர்களைப் பற்றி வீதியில் நிறுத்தி உறுப்புறுப்பாக அறுத்தொழித்தனர். ஏழை மக்கள் பலர் குடும்பம் குடும்பமாகக் கடல் கடந்து சென்று கையறவு பட்டனர். இவ்வகையால் உயிரிழந்தோர் பலர்; உயர்ந்தவர் சிலரே. இதுபற்றியே மிடித்துன்பத்தை “வன்மிடி” என்று, அதனைத் தாங்கிக் கொள்ளும் மனத்திண்மையைத் “திருவருள் நலம்” என்றும் வடலூர் வள்ளல் நயந்து பாராட்டி அதற்குச் செய்யக்கூடிய நன்றி யாதும் இல்லை யெனத் தெரிவித்துக் கொள்ளுகின்றார். (47)
|