48

      48. திருவருளை வேண்டிப் பரமனையே நினைந்து பாடும் தமது இயல்பையும் செயலையும் நினைக்கின்றார் வடலூர் வள்ளல். முதன் முதலில் இறைவனைப் பாடிய காலம் நினைவுக்கு வருகிறது. அவரது திரவுருவத்தை எண்ணிப் பார்க்கின்றார். நிழற்படம் பிடித்து வைக்கும் முறை அக் காலத்தில் கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால் மனக் கண்ணாலேயே காண்கின்றார். அவரது சிறு இளமையுருவம் புலப்படுகிறது. அதனைக்கண்டு அதன் உள்ளே ஊடுருவி நோக்குகின்றார். அந்நிலையில் அவரது நல்லறிவு வளம் பெருமல் உளது; உணர்வும் தெளிவு சிறிதும் இன்றியுளது; தெருவிலே கால்வீசி ஓடியாடுகின்ற இயல்பு தெரிகிறது. அப்போது அவர் வாயிலே பாட்டு வருகிறது. பாட்டும் சிவபெருமான் பொருளாக உருவாகியுளது. அப்போதே சிவனை நினைந்து பாடும் செயல் உண்டாவதற்குக் காரணம் நினைக்கின்றார்; ஒன்றும் புலனாகாமற் போகவே, சிவன் தான் பாடும் அறிவளித்துப் பாடச் செய்தான் என எண்ணித் தெளிகின்றார். சிறுபருவத்திலேயே பாடவருள் புரிந்த பரசிவனது திருவருள் நலத்தை நினைத்துப் பரவசப்படுகின்றார். உருவாகவும் அருவாகவும் அருவுருவாகவும் விளங்கும் சிவனது தண்ணருளை வியக்கின்றார். அது ஒரு பாட்டாய் வருகிறது.

2218.

     உருவத்தி லேசிறி யேனாகி
          யூகத்தி லொன்றுமின்றித்
     தெருவத்தி லேசிறு கல்வீசி
          யாடிடச் சென்ற அந்தப்
     புருவத்தி லேநல் அறிவளித்
          தேஉனைப் பாடச்செய்தாய்
     அருவத்தி லேஉரு வானேய்நின்
          தண்ணளி யார்க்குளதே.

உரை:

     அருவாயும் உருவாயும் விளங்கும் சிவனே, உருவத்திற் சிறியனாய் உணர்வு சிறிதும் இலனாய்த் தெருவில் கால்வீசி விளையாடச் சென்ற அந்தப் பருவத்திலேயே உன்னை நினைக்கும் நல்லறிவு தந்து, உன்னையே பாடும் பணியும் எனக்கு அருளினாய்; உன் தண்ணிய திருவருள் வேறு யாவர்பால் உளது? எ.று.

     சிறு பருவத்தில் உடல் வளர்ச்சியின்மையின், “உருவத்திலே சிறியேனாகி” என்றும், நல்லது தீயது தெரிந்துணரும் உணர்வு வளர்ச்சி பெறாத நிலைமை புலப்பட “ஊகத்திலே ஒன்றுமின்றி” என்றும் உரைக்கின்றார். தெரு, தெருவம் என அம்முப் பெற்றது; “தாமரைப் பூவோடும் பொருவும் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவம்” (பரி. மதுரை) எனச் சான்றோர் வழங்குவது காண்க. தெருவில் நடையிடும் சிலர் கால்வீசிக் குதித்துச் செல்வது பற்றிக் “கால்வீசி யாடிடச் சென்ற” எனவுரைக்கின்றார். சிறுபருவத்திலே மனத்தால் கவரப்படும் பொருள்கள் மிகப் பலவிருக்க, வள்ளலாரின் திருவுள்ளம் சிவபெருமானைப் பாடுவதிலே ஒன்றியிருந்ததனை நினைவு கூர்ந்து வியந்து மகிழ்கின்றாராதலால் “நல்லறி வளித்தே எனைப் பாடச் செய்தாய்” எனப் புகழ்கின்றார். சிறுவனென்றும், ஊகம் சிறிதும் இலன் என்றும் எண்ணாது மனம் தன்னிடத்தே ஒன்றித் தன்னையே பாடச் செய்த சிவனது பேரருளைச் சிறப்பித்து, “நின் தண்ணளி யார்க்குளது” எனப் பாடுகின்றார்.

     இதனால், வள்ளற் பெருமானுக்கு மிக்க இளம்பருவத்தே சிவனைப் பாடற்கேற்ற திருவருள் கைவரப் பெற்றது அறிகின்றார்.

     (48)