49

       49. தன்னுடைய குறைகளைப் பிறர்க்கு உரைத்துத் தீர்வு காண்பதை இயல்பாகவுடைய மக்கள் போல ஊர்முழுதும் சொல்லித் திரிபவரும் உண்டு. சிலரிடம் கூறுதலினும் மிகப்பலர் அறியச் சொன்னால் யாவரேனும் சிலர் மனம் இரங்கி வேண்டுவன நல்கி யுதவுவர் என்பது அவர்கள் கருத்து. அவர்களைப் பார்த்து உலகம் எள்ளி நகைப்பதையும் வள்ளலார் கண்டுளார். அவரது புன்மையையும் உணர்ந்திருக்கிறார். அதனால் இறைவனை நினைந்து, ஐயனே, யானுறு குறைகளை உன்னிடம் உரைத்து மனம் ஆறுவேனேயன்றி ஊரவர்க் குரைத்து வருந்தேன் என உரைக்கின்றார்.

2219.

     மானெழுந் தாடுங் கரத்தோய்நின்
          சாந்த மனத்தில்சினந்
     தானெழுந் தாலும் எழுகஎன்
          தளர்வை எல்லாம்
     ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப்
          பேன்அன்றி ஊர்க்குரைக்க
     நானெழுந் தாலும்என் நாஎழு
          மோமொழி நல்கிடவே.

உரை:

     கையகத்தே ஏந்திய மானாட ஆடும் பெருமானே, நின் மனத்தில் சினம் எழினும் எழுக என்ற கருத்தால், என்னிடத்துற்ற ஊனங்களை எடுத்து உன்பால் ஒழியாமல் உரைப்பேனேயன்றி, ஊரார்க்கு உரைப்பதற்கு நான் எழுந்தாலும், என் நா ஒரு சொல்லும் சொல்லற்கு இசைந்து எழாது. எ.று.

     சாந்தமேவடிவாயது சிவத்தின் திருவுள்ளம்; அதனைச் “சாந்தமனம்” என உரைக்கின்றார். யாதொரு சலிப்பும் தளர்ச்சியும் இல்லதென்றற்குச் “சாந்தமன” மென்பது இயல்பாயிற்று. என் குறைகளை நாடோறும் கணந்தோறும் மறவாமல் பன்னிப் பன்னி ஓதி முறையிடுவது கேட்டருளும் பெருமானாகிய நின் திருவுள்ளத்தில் வெறுப்பும் வெகுளியும் தோற்றுவிக்குமென்பது ஒருவர் சொல்லாமலே உளதாவது. அதனால் நின் திருமனத்தில் சினம் பெருகி எழலாம். எவரையும் எப்பொருளையும் எந்நிலையினும் வெறாது அருளே புரியும் அமைவுடைத்தாகலின், “சாந்த மனத்தில் சினந்தான் எழுந்தாலும் எழுக” என எண்ணும் திண்மையுண்டாயிற்று எனக் குறிப்பால் தெரிவிக்கின்றார். தளர்வையும் சிதைவையும் உரத்த குரலெடுத்து மிடற்றுத் தசையும் நரம்பும் வெளிப்படப் பன்முறையும் நின்பாலே உரைப்பன் என்பாராய், “என் தளர்வையெல்லாம் ஊன்எழுந்து ஆர்க்க நின்பால் உரைப்பேன்” என வுரைக்கின்றார். என்பால் உரைப்பதை விடுத்து, உன்போல் உலகிடை ஊர்க்கண் வாழ்வார்பால் உரைத்துத் தீர்வுபெற்றுக் கொள்க எனின், அது செய்யேன்; அது நினக்கு மாட்டாமையும் குறைவையும் விளைவித்துச் சிவத்தின்பால் அன்பர்க்கும் இழிவுபயக்கும் என்பதுபற்றி, நான் முற்பட்டாலும் எனது நா ஒரு சொல்லேனும் மொழிய முற்படாது என்பது புலப்பட, “நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே” எனப் பாடுகின்றார்.

     இவையிரண்டு பாட்டாலும் சிவன்பாற் பெறக்கூடிய திருவருளை உலகிற் பிறர்பாலும் ஊரவர்பாலும் முறையிட்டுப் பெறலாகாது என்பது கூறப்பட்டது.

     (49)