50

      50. தம்மின் உயர்ந்தாரிடம் சென்று தமது குறை மொழிந்து உதவி வேண்டுபவர் உலகில் பலர். அங்ஙனம் மொழியுங்கால் இடக்குறை, பொருட்குறை, துணைக்குறை முதலிய குறைகளை மொழிந்து கேட்பவர் மனத்துள் இரக்கம் பிறப்பித்து உதவும் செயல் உண்டாகச் செய்வர். தமது சிறுமைக்குக் காரணமாக உள்ளவற்றை எடுத்துரைத்துக் கேட்பவர் கரவாது ஈதற்குக் வழிசெய்வது ஒருவகை. செயற் கருவிகளான கை கால் வாய் முதலியவற்றில் உண்டான குறைகளை எடுத்துரைத்தும் உதவி வேண்டுவர். இக் குறைகள் பிறவியிலேயே உண்டாயினவும் வாழ்விடையே செயற்கையாய்  உண்டாயினவும் என இரு திறப்படும். இயற்கைக் குறைகளினும் செயற்கையில் உண்டான உடற்குறைகளை மிக்க சொல்வளம் படவும் கேட்பவர் மனம் உருகும்படியாகவும் உரைப்பர். இவர்கள் இவ்வாறு தமக்குற்ற குறைகளைத் தம்போல் மக்கட்கு உரைப்பதால் போதிய பயன் எய்தாது; ஓரளவு பொருளுதவி கிடைக்குமேயன்றி இக்குறைகள் முற்றவும் நீங்காவே என எண்ணுகின்றார் வடலூரடிகள். இங்ஙனம் இருக்க இவர்கள் சிறிதும் நாணிமின்றிப் பிற மக்களிடம் தம் குறைகளைக் கூறல் கூடாது; நான் ஒருகாலும் இது செய்யேன் என இறைவனிடம் முறையிடுகின்றார்.

2220.

     வனமெழுந் தாடும் சடையோய்நின்
          சித்த மகிழ்தலின்றிச்
     சினமெழுந் தாலும் எழுகஎன்
          றேஎன் சிறுமையைநின்
     முனமெழுந் தாற்றுவ தல்லால்
          பிறர்க்கு மொழிந்திடஎன்
     மனமெழுந் தாலும்என் வாய்எழு
          மோஉள்ள வாறிதுவே.

உரை:

     நின் சித்தம் மகிழ்வடைதலின்றி சினம் கொள்ளினும் கொள்க என்று என் சிறுமைகளை நின்முன் உரைத்து ஆற்றுவதன்றிப் பிறர்க்கு உரைக்க என வாய் எழாது, காண். எ.று.

     வனம் - தண்ணீர்; இங்கே கங்கையைக் குறிக்கிறது. யான் கூறவன கேட்பதில் நின் சிந்தை மகிழ்தல் வேண்டும்; அவ்வாறின்றிப் பன்முறையும் வேண்டிப் பரவுதலைச் செய்கின்றார் எனப் பொறுமை இழந்து சினங்கொள்ளற்கு இடமுண்டு. அன்புரையும் அளவிறக்குமாயின் வன்புரையாய் வெறுப்பை விளைப்பது இயல்பு. அம்முறையில் என் உரைகாளால் நின் மனத்தில் சினம் உண்டாக்கலாம் என்றற்கு “மகிழ்தலின்றிச் சினமெழுந்தாலும்” என உரைக்கின்றார். உயர்ந்தோர் சினம் நெடிது நில்லாது இடைப்போதில் நீங்கிவிடும் என்ற துணிவினால் “சினமெழுந்தாலும் எழுக” எனத் தெரிவிக்கின்றார். அருள் நாடற்கு ஏதுவாகிய குறையும் சிறுமையும், சொல்வது இன்றியமையாமைபற்றிச் சொல்லுகின்றேன் பொறுத்தருள்க; குறையும் சிறுமை பிறவும் யாம் முன்பே அறிந்தவையாதலின் வெறிது உரைத்தல் வேண்டா என நீ விலக்கினும், யான் உளம் சுருங்காமல் நின் திருமுன் உரைத்துத் துயரத்தை ஆற்றிக் கொள்வதன்றி, பிறரிடம் சென்று உரைக்க விரும்பேன் எனபாராய், “என் சிறுமையை நின் முனம் எழுந்து உரைத்து ஆற்றுவதல்லால் பிறர்க்கு மொழிந்திட என் வாய் எழாது” எனக் கூறுகின்றார். வாயால் உரைத்தலின் மனத்தின்கண் நினைப்பது பிறர் அறிய நிகழ்வதின்மையின் துன்பம் தருவதின்றாயினும், “மனமெழுந்தாலும் என் வாயெழுமோ” எனப் புகன்று உரைக்கின்றார். யான் கூறுவது கொன்னே நிகழும் சொல்லளவன்று; உள்ளத்தே நிகழும் உண்மை கூறுவதே என்பார் “உள்ளவாறு இதுவே” என உரைக்கின்றார்.

     இதனால் தன்னுறு குறையை தலைவனாகிய இறைவன் முன்பன்றி அவன் அருள்வழி நிற்கும் பிறமக்களிடம் தெருவிப்பது பயனில் செயல் என்பது வற்புறுத்தவாறு.

     (50)