51
51. உலகில் மக்கள் ஒருவரை யொருவர் சார்ந்து ஒழுகுவது இயல்பு. சார்பும் அவரவர் செய்யும் உதவியின்
அடிப்படையில்தான் உளது. உதவி காரணமாகச் சார்பு தோன்றுவதும், சார்பின் பின் பயனாக சார்பு
பிறப்பதும் இயற்கை நிகழ்ச்சியாக எங்கும் உள்ளன. இறைவனை மக்கள் சார்வதும் வழிபடுவதும் இப்பெற்றிய
தாயதொரு சார்பும் உதவியும் நாடியே நிற்கின்றன. இங்கு இறைவனைச் சார்ந்து மக்கள் நலம்பல பெறுவது
உண்டேயன்றி, மக்களைச் சார்ந்து இறைவன் பெறுவதொன்றும் இன்று. இறைவன் தன்னைச் சார்ந்த உயிர்கட்குச்
செய்து உதவியை மணிவாசகப் பெருமான் நன்கு ஆராயந்து காண்கின்றார். படைப்போன் முதலிய தேவர்களைப்
படைத்து அவர்கள் தத்தம் பணிகளை ஒழுங்குறச் செயதற்கு வேண்டும் அறிவும் ஆற்றலும் அருளும் இறைவன்,
அருக்கனிற் சோதியும், திங்களில் தண்மையும், தீயில் வெம்மையும், வானத்திற் பல்வகைப் பூதக்
கலப்பும், காற்றின்கண் இயக்கமும், நீரின்கண் சுரையும், மண்ணின்கண் திண்மையும் வைத்து, உலகுயிர்கள்
நிலைபெற நின்று வாழ்வாங்கு வாழ உதவியுள்ளான். இனி, சிறப்பு நிலையில் அருளாரமுதம் உண்டு இன்புற்ற
சான்றோர், “அடியேற்கு அருளிய தறியேன், பருகியும் ஆரேன்; விழுங்கியும் ஒல்லகில்லேன்; செழுந்தண்
பாற்கடல் திரையுறைவித்து உவர்க்கடல் நள்ளும் நீர் உள்ளகம் ததும்ப, வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால்
தோறும் தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன்தழை குரம்பை போதறும் நாயுடலத்தே, குரம்பை கொண்டு
இன்றேன் பாய்த்தி, நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன்; உருகுவது
உள்ளங்கொண்டு ஒரு உருச்செய்தாங்கு எனக்கு அள்ளூறாக்கை அமைத்தனன்; ஒள்ளிய கண்தேர் களிறு
எனக் கடைமுறை என்னையும் இருப்பதாக்கினன்; என்னில், கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமுது
ஆக்கின், பிரமன்பால் அறியாப் பெற்றியோன்” என்று இறைவன் செய்த அருட்கொடையை மணிவாசப்பெருமான்
நன்முறையில் பாராட்டியிருப்பது வடலூர் அடிகளின் நல்லுள்ளத்தை இன்புறுத்துகிறது. அவரும் இறைவனை வேண்டி,
பெருமானே உன்னைச் சார்ந்தோர்க்கு தீ அளிக்கும் அருளின்பத்தை அடியேனுக்கும் அளித்தருளக என வேண்டுகிறார்.
2221. சிற்பர மேஎஞ் சிவமே
திருவருள் சீர்மிகுந்த
கற்பக மேஉனைச் சார்ந்தோர்க்
களிக்குநின் கைவழக்கம்
அற்பமன் றேபலன் அண்டங்
களின்அடங் காததென்றே
தற்பர ஞானிகள் வாசகத்
தால்கண்டு நாடினேனே.
உரை: சிற்பரமே, சிவமே,. கற்பகமே, உனைச்சார்ந்தோர்க்கு நீ அளிக்கும்; நின் கைவழக்கம் அற்பமன்று; அது எண்ணிறந்த அண்டங்களில் அடங்காத பெருமையுடையது என்று, நல்ல பரஞானச் செல்வராகிய மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தால் உணர்ந்து, அது குறித்து நின்னை நாடுகின்றேன் எ.று.
சிற்பரம் - உணர்ந்த அறிவுருவாயது. சிவம் - இன்பமயமானது. கற்பகம் தெய்வ வுலகத்து நன்மைதரு மரங்களிலொன்று; தன்னையடைந்தார் வேண்டுவது வேண்டியாங்குத் தரவல்லது. இக்கற்பகம் தானும் தன்னின் ஒத்த உலகத்ததும், தாழ்ந்த மண்ணுலகத்ததுமான நன்பொருளை நயந்தாங்கு அருள்வது; எல்லாவுலகத்துக்கும் மேலாய சிவலோகத் திருவருட் செல்வத்தைத் தரமாட்டாது. சிவமொன்றே அதனைச் செய்யவல்லது. அதுபற்றியே, சிவனை, “திருவருள் சீர்மிகுந்த கற்பகமே” எனப் புகழ்ந்துரைக்கின்றார். தேவவுலகத்துக் கற்பகம் நல்குவன நுகர்ந்தவழிக் கழிந்து கெடும் இயல்பின; திருவருட் சீர்மிகுந்த கற்பகம் சிவனைச் சார்ந்தோர்க்கு வரையறையின்றி வழங்குப்படுமியல்பிற்று; அதனால் அதன் கொடை சிறிது என இகழற்பாலதன்று என்றாங்குச் “சார்ந்தோர்க்களிக்கும் நின் கைவழக்கம் அற்பம் அன்றே” என அறிவுறுத்துகின்றார். “சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம்; நேர்ந்தவவ்” (திருவல்லம் 5) என ஞானசம்பந்தரும் கூறுதல் காண்க. சிவபெருமானுடைய அருட்கொடைக்கு அண்ட கோடிகள் பலவற்றை அடுக்கி நோக்கினும் நிகராகாது என்கிறார் வள்ளலார். “நின் கைவழக்கம் அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது” எனவுரைத்து, அண்டங்களின் மதிப்பை யான் அறியேனாயினும், பரஞானிகள் இனிதுணர்வர் என்பது புலப்பட, “பல அண்டங்களின் அடங்காததென்று நற்பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினன்” என உரைக்கின்றார். நற்பரஞானிகள் என இங்கே வள்ளலார் குறிப்பது, மணிவாசகப்பெருமானை எனக் கொள்ளல் வேண்டும். அவர் தான் திருவாசகத் திருவண்டப் பகுதியில் சிவபரம்பொருளின் அருட் கொடையை, “உலையா அன்பு என்புருக, ஓலமிட்டு, அலைகடல் திரையின் ஆர்த்தார்த்து ஓங்கித் தலைதடுமாறு வீழ்ந்து புரண்டலறிப், பித்திரின் மயங்கி, மத்தரின் மதித்து, நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும், கடக் களிற்று ஏற்றாத் தடப்பெரு மதத்தின் அற்றேனாக அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன்” என்று விரித்துரைக்கின்றார். இங்ஙனம் பெரியோர் கூறுவதனால், அடியேனும் நின் திருவருள் வழக்கத்தைப் பெறுவது குறித்து நாடிப் பரவுகின்றேன் என்ற கருத்துப் புலப்பட, “நற்பரஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினேனே” என உரைக்கின்றார்.
இதனால், பரஞானிகளின் அருளுரை கொண்டு சிவத்தின் திருவருளை நாடிப் பெறலாம் என்பது பயனாதல் காண்க. (51)
|