52

      52. தம்மைத் தாக்கி வருத்தும் துன்பம் இவ்வாறு கையோட, வல்லவர் ஒரு பதினாயிரம் கற்பம் இருந்து எழுதினும் அடங்காத பேரளவினதாகக் கண்டுரைத்த வள்ளலார் திருவுள்ளம், இத்துன்பம் தன்னைப்பற்றி வருத்துதற்கு உள்ள தொடர்பு யாது என எண்ணுகின்றது. சிவத்தை நினையாமல் உலகியல் வாழ்வையே நினைந்து மனத்தாலும் மொழியாலும் உடம்பாலும் தீயன செய்தார்க்கும் இத் துன்பத்துக்கும் தொடர்புண்டு. யானோ வாழ்விடை இருந்தும் அதனைப் பொருளாக நினையாமல் சிவமே பொருள் எனத் தெளிந்து அதனையே சிந்தித்துத் தொழுத வண்ணம் இருக்கின்றேன். இங்ஙனம் தொழுவதாகிய விழுமிய பேறு பெற்றிருக்க, இத் துன்பப் பெருக்கு என்னைத் தொடர்வதற்குக் காரணம் யாதாகலாம் என எண்ணுகின்றார். துன்பமென்பது அறிவுடைய பொருளன்று; “வினை பேச அறியாது” என்று தாயுமானார் முதலிய சான்றோர் கூறுவர். வினையின் இத் தன்மையை நினையாமல் சிலர், “பல்லாவுள் உய்த்து விடினும் பசுக்கன்று தன் தாயை நாடி யடைவது போல, செய்வினையும் செய்தவனை அடையும்” என்பர். உணர்வில்லாத வினைக்கு உண்ரவுடைய பசுங்கன்று பொருந்திய உவமமாகாது. தீவினைப் பயனாகிய துன்பத்தை அதனைச் செய்தவனை அடையுமாறு கூட்டுதற்கு அறிவுடைய பொருளொன்று, வினைக்கும் வினைமுதற்கும் வேறாக இருத்தல்வேண்டும். வேறாகச் சிவமல்லது இல்லை. சிவத்தின் திருவருள் வினைப்பயனாகிய துன்ப இன்பங்களை வினைமுதலாகிய உயிர்களை எய்துவிக்கின்றது. உயிர்கள் “இருவினையின் போக்குவரவு புரியா” இறைவன் “ஆணையின் நீக்கமின்றி நிற்கும்” என்று சிவஞான போதம் தெரிவிக்கிறது. சிவபெருமான் திருவுள்ளம் கொண்டு அருளுவனாயின், துன்பம் வந்து தாக்காமை பெறலாம். சிவனோ மாறாப் பேரருளாளன். அவனது அருள் நினைந்து தொழுதுறையும் நானோ செல்லரிக்கும் மரம்போல் சிறுமையுற்று நடை தளர்ந்து துன்பத்துள் மூழ்கி நிற்கிறேன்; இது அவனது அருளியலுக்கு அழகன்று என நினைக்கின்றார். யான் தொழுபவனும், சிவன் தொழுப்படுபவனுமாகிய தொடர்பால் சிவபெருமான்பால் முறையிடுவதல்லது வேறு செயலில்லை என்று தெளிந்து திருவருள் வேண்டி வடலூர் வள்ளல் முறையிடுகின்றார்.

2222.

     வருஞ்செல்லுள் நீர்மறுத் தாலும்
          கருணை மறாதஎங்கள்
     பெருஞ்செல் வமேஎஞ் சிவமே
          நினைத்தொழப் பெற்றும் இங்கே
     தருஞ்செல் அரிக்கு மரம்போல்
          சிறுமைத் தளர்நடையால்
     அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன்
          இதுநின் அருட்கழகே.

உரை:

     கடல் நீரை முகந்து நிறம் கறுத்துவரும் மழை முகில் நீர் பொழிய மறுத்தாலும், மறுத்தலை எண்ணாத கருணையுள்ளமுடைய செல்வமே, சிவமே! நின்னைத் தொழுவதே செயலாகப் பெற்றும், செல்லரிக்கும் மரம் வளர்ச்சிகுன்றித் தளர்ந்து கெடுவதுபோல் சிறுமையும் தளர்நடையும் உற்றுப் போக்குதற்குரிய துன்பத்துள் மூழ்கி வருந்துகின்றேன். நின் அருளுக்கு இஃது அழகு தருவதன்றே எ.று.

     வரும் செல் எனவே, கடற்குச் சென்று நீர் முகந்து வரும் கமஞ்சூல் கருமுகிலாயிற்று. “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்பவாகலின் “கருணை மறாத பெருஞ்செல்வமே” என்றும், தமக்குள்ள தொடர்பு தோன்ற “எங்கள் பெருஞ்செல்வமே” என்றும் கூறுகின்றார். சிவன் சேவடி தொழுதெழுவார் துன்பமிலர் எனச் சான்றோர் பலரும் கூறுதலால், “சிவமே நினைத்தொழப் பெற்றும்” என்று மொழிகின்றார். செல் - வெள்ளெறும்பு. செல்லரிக்கும் மரம் நாளடைவில் பசுமையிழந்து சிறுத்து வலியழிவது யாவரும் அறிந்தது. துன்பமும் மனத்திற் கிடந்து உள்ளுருப்புக்களைக் கரைத்து உடம்பைச் சுருக்கிச் சிறுமையும் தளர்ச்சியும் பயத்தால் 'செல்லல்' எனப்படுகிறது. 'தளர் நடையால்' என்பதற்குத் தளர் நடை எய்துதலால் என உரைக்க. சிறு செயலும் தளர்ந்த ஒழுக்கமும் உடையனாய் செல்லில் மூழ்கி நிற்கிறேன் எனப் பொருள் கூறுவது, அருள் வேண்டி முறையிடுதற்குப் பொருத்தமாகாது. உயிரறிவிற் கிடக்கும் மலவிருள் கண்டு பேரருள் கொண்டு உடம்பும் உலக வாழ்வுமளித்த நீ, துன்பத்தால், அவையிரண்டும் கெடுமாறு பார்த்திருப்பது அருட்குமறுதலையாம் என்றற்கு, “இது நின் அருட்கு அழகே” என வினவுகின்றார். ஏகாரம், வினா. “ஊடுவதுன்னோடுவப்பதும் உன்னை உணர்த்துவதுனக்கெனக் குறுதி” எனச் சான்றோர் கூறுவதால், வள்ளற்பெருமான் “நின் அருட்கு அழகே” என ஊடுகின்றார்.

     (52)