53

         53. அருள் வழி நின்று மேன்மையுற்ற கூடல் நகர்ப் பாணனை நினைந்த வடலூர் வள்ளலின் நினைவில், சேரமான் பெருமான் காலத்து மதுரையில் வாழ்ந்த வேறோர் பாணபத்திரன் அருட்செல்வம் எய்திய வரலாறு எழுகிறது. இவ் வரலாறு இரண்டும் அடிகளார் உள்ளத்தில் அருள் வேட்கை மிகுவித்து அலைக்கின்றன. அவ் வரலாற்றைச் சுட்டித் தனக்கு அருள்புரிய வேண்டும் என்று பரவுகின்றார்.

 

2223.

     கருமுக நீக்கிய பாணனுக்
          கேகன கங்கொடுக்கத்
     திருமுகம் சேரற் களித்தோய்என்
          றுன்னைத் தெரிந்தடுத்தென்
     ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற
          ஏழைக் குதவிலையேல்
     உருமுக வார்க்கும் விடையோய்
          எவற்மற் றுதவுவரே.

உரை:

     பாணன் பொருட்டுச் சேரமானுக்குத் திருமுகம் கொடுத்தவன் நீ என்று உன்னை வரலாற்று வாயிலாகத் தெரிந்து கொண்டேன்; அதனால் உன்னை அடுத்து நின்று 'ஒரு முகம் பார்த்தருள்' என்று ஏழைமையால் வேண்டுகிறன்; விடையேறும் பெருமானே, நீ உதவாயாயின், உதவுவோர் வேறு யாவர் உளர். எ.று.

     பிறப்புக்கு ஏதுவாகிய நினைவு செயல்களிலிருந்து நீங்கிப் பிறவாப் பேரருள் பெறுதற்குச் சமைந்திருந்த பாணன் என்றற்குத் “கருமுகம் நீக்கிய பாணன்” என்று கட்டுரைக்கின்றார். அருள் வாழ்வு பொருளாலன்றிச் செம்மையுறாதாகலின், பொருள் இன்றியமையாத் துணையென்பர் திருவள்ளுவர். “அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு” என்பது அவரது திருக்குறள். அருள் என்னும் குழவி பொருள் என்னும் செவிலியின் துணையின்றேல், உளதாகாமல் தேய்ந்து மாய்ந்துபோம் என்றற்கு, “பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு” என்று கூறுகிறார். சிவபெருமானுக்கு அது தெரிந்த உண்மையாதலின், அருள் வழி நின்று பாணற்குத் திருமுகம் அருளினார். அது கொண்டு சென்ற பாணனார்க்குச் சேரர் பெருமான் “சாரும் மணிமாளிகை யுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும், சீர்கொள் நிதியம் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்து ஆளின்மேல், பாரில் நெருங்க மிசையேற்றிக் கொண்டு வந்து” கொடுப்பித்தார். கொடுப்பாரை அறிந்து இரப்பது சிறப்பாகலின், “உன்னை தெரிந்து அடுத்தேன்” என்று கூறுகிறார். “கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன்னின்று இரப்பும் ஓர் ஏர் உடைத்து” என்பது தமிழ்மறை. “ஒரு முறை என் முகத்தைப் பார்” என்றற்கு, “ஒரு முகம் பார்த்தருள்” என உரைக்கின்றார். ஏழைமை அருட்பேற்றுக்கு இடையூறு செய்வதுபற்றி “ஏழையேன்” என்று அடிகளார் குறிப்பால் உரைக்கின்றார்.

     இறைவனுக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ அருளுடையார் பிறர் இல்லாமை உலகறிந்த உண்மையாதலால் “உதவிலையேல் எவர் மற்று உதவுவர்” என வினா வாய்வாட்டால் விளம்புகின்றார். தீங்கு செய்யும் இடியும் தகர்ந்து தவிடு பொடியாகிக் கெடுமாறு ஆர்ப்பது நீ விரும்பி ஏறும் ஏறு; அத்தகைய அருளுருவாய எருதேறும் பெருமானாதலால் நீ அருளா தொழிதல் கூடாது என்றற்காக.

          “உரும் உக ஆர்க்கும் விடையோய்”

என உரைக்கின்றார். இதனால் தனது அருள் வேட்கையைப் புலப்படுத்துவது பயன்.

     (53)