54
54. இனி, தெருளும் பொருள் இறைவன் சீர் அருளே எனத் தேர்ந்ததை வரலாறொன்றினால் எடுத்துரைக்கின்றார்.
மதுரையில் வாழ்ந்த ஆதிசைவ வேதியருள் தருமி யென்பவன் இளமையில் தாய் தந்தைரை இழந்து நல்லாசிரியர்பால்
மாணவனாயிருந்து சிவாகமங்களை நன்கு பயின்று மண்ம் செய்துகொள்ளும் பருவம் எய்தினான். அதற்கு
வேண்டும் பொருள் இல்லாமை வருத்திற்று. அந்நாளில் மதுரையில் அரசு புரிந்த பாண்டிமன்னன் தன்
தேவி கூந்தலில் கமழந்த நறுமணம் இன்ன பூவின் மணம் எனத் தெரியமுடியாமல், “இது வேறு திவ்விய
வாசமாக இருந்தது; தென்றல் காவில் வவ்விய வாசமன்று; காலுக்கும் வாசம் இல்லை; எவ்வியல் வாசமோ”
என எண்ணி, மகளிர் குழற்கு இவ்வாசம் இயற்கையோ செயற்கையோ என்று ஐயமெய்தி, இதனைப் பிறர்க்கு
உரைக்கலாகாமையின், தன் கருத்தறிந்து உரைப்பார்க்கு இக் கிழியினைத் தருவேன் என ஆயிரம்
பொன்னை ஒரு கிழியில் வைத்துக்கட்டி அறிஞர்க்குத் தெரிவித்தான். அதனைப் பெறற்க்குப்
புலவர் பலர் முயன்று வெற்றி கண்டார் இல்லை. இதனை அறிந்த தருமி மதுரைச் சொக்கப்பெருமான் திருமுன்
தெரிவித்துப் பரவினான். எல்லார் உள்ளத்துக்கும் நிகழும் எல்லாவற்றையும் அறியும் பெருமானாதலின்,
பாண்டி வேந்தன் கருத்திற்கேற்பக் “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது
கண்டது மொழிமோ. . . . . .அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே” என்று, காதலன்
தன் காதலியின் கூந்தல் மணம் வியந்து வண்டொடு உசாவும் வகையில் அமைந்த பாட்டொன்றைப் பாடித்
தருமிக்கு வழங்கினான். அது கண்டு வேந்தனும் மகிழ்ந்தான். அதுபற்றித் சங்கப் புலவரிடையே
சொற்போர் நிகழ்ந்தது; முடிவில் தருமி பொற்கிழி பெற்று இன்புற்றான். இந்நிகழ்ச்சியில்
இறைவன் புலவனாய்த் தோன்றி வாதுபுரிந்து வெற்றிகண்டு தருமியைப் பொன்பெறுவித்த பேரருள்,
இறைவனையே நெஞ்சிற் கொண்டொழுகும் அன்பர்க்கு மிக்க எழுச்சியும் ஊக்கமும் பயப்பதை வடலூர்
அடிகளார் நினைந்து மகிழ்கின்றார். திருவருள் நாடி முறையிடும் தமக்கும் அது துணையாதலை எண்ணுகிறார்.
இன்பம் மீதூர்ந்து பாடுகின்றார்.
2224. மருப்பா வனத்துற்ற மாணிக்கு
மன்னன் மனமறிந்தோர்
திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி
ஈந்தநின் சீர்நினைந்தே
விருப்பா நினையடுத் தேன்எனக்
கீந்திட வேஇன்றென்னை
கருப்பாநின் சித்தம் திருப்பாய்என்
மீது கறைக்கண்டனே.
உரை: பாண்டி மன்னன் மனக்கருத்தறிந்து தருமியாகிய மாணிக்குப் பாசுரம் செய்து கொடுத்துப் பொற்கிழி பெறுவித்த நின் சீரருளை நினைந்து நின்னை அடுத்தேன்; என்மீது நின் சித்தம் திருப்புதல் வேண்டும்; அதற்குக் கருப்பில்லையே. எ.று.
வறுமையுற்று வாடும் மாணி என்றற்கு “மருப்பாவனத்து உற்ற மாணி” என்று கூறுகிறார். மருவனம். நீரும் நிழலுமில்லாத பாலை நிலம்; பொன்னும் பொருளுமில்லாத வறுமை நிலை இவ்வாறு குறிக்கபடுகிறது. பாவனம் பரந்த வனம். மாணவனாய் தோகமங்களைப் பயிலும் வேதிய இளைஞனை மாணி என்பர். இளமாணாக்கன் எனச் சங்கநூல்கள் குறிக்கும். இறைவன் அருளிய பாட்டாதல் பற்றிப் “திருப்பாசுரம்” என்றார். உயர்வுபற்றிப் பாட்டுப் பாசுரம் எனப்பட்டது. இறைவனது அருணெறியை நிலை நாட்டப் பாடிய திருப்பதியத்தை ஞானசம்பந்தர் “பாசுரம்” என வழங்குவது காண்க. கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாளுக்குப் பாணபத்திரன் பொருட்டு மதுரைச் சொக்கேசன் அருளிய திருமுகப்பாட்டைச் சான்றோர் திருமுகப்பாசுரம் என்னும் வழக்கையும் நோக்குக. பாசுரம் என்பது தமிழ் கலந்த வடசொல். பா என்பது தமிழ். ஆழ்வார்கள் பாடிய பாட்டுக்களை வைணவர்கள் பாசுரம் என்றே வழங்குவர். மன்னர் மனக்கருத்தையே பொருளாக வைத்துப் பாடினமை புலப்பட, “மன்னன் மனம் அறிந்து ஓர் திருப்பாசுரம் செய்து” என்றார். திருப்பாசுரம் மன்னனுக்கும், பொற்கிழி தருமிக்கும் தரப்படுதலால், “திருப்பாசுரம் மன்னனுக்கும், பொற்கிழி ஈந்த நின் சீர்” என்று சிறப்பிக்கின்றார். திருப்பாசுரமும் பொற்கிழியும் அளித்தருளிய முறையை நினைக்குபோது, நினைவில் இறைவன்பால் பெருவிருப்புத் தோன்றி நிறைவதுணர்ந்து “விருப்பால் நினையடுத்தேன்” என்று கூறுகிறார். “விருப்பானினை அடுத்தேன் என நிற்கற்பாலது விருப்பா நினையடுத்தேன் என இருப்பது ஏடு எழுதியபோது மாறிவிட்டது போலும். அன்று நின் திருவுள்ளத்துப் பெருகி நின்ற அருள் இன்றும் குறையவில்லை யன்றோ என்று கேட்கலுற்று “இன்று கருப்பா? என்னை?” என்கின்றார். கருப்பு - குறைவு; பஞ்சம் வந்தபோது கருப்பு வந்துவிட்டது என்பது உலக வழக்கு. உலக வழக்குக்கும் செய்யுட்குரியது; “வழக்கினாகிய உயர்சொற் கிளவி”; “வழக்காறல்ல செய்யுளாறே” “ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும், வருவகைதானே வழக்கென மொழிப” எனத் தொல்காப்பியர் உரைப்பது காண்க. 'திருப்பாய்' என்பது, திரும்புக என்னும் பொருளது. “செய்யாய் என்னும் முன்னிலை வினைச் சொல்செய் என் கிளவி ஆகிடன் உடைத்தே” என்பது தொல்காப்பியம். திருப்பாய் என்பதைச் செய்யென் கிளவியாக்காமல், நின் சித்தம் என்மீது திருப்பாதிருக்கின்றாய் எனினும் அமையும். நஞ்சுண்டதால் பிறந்த கறையையுடைய கழுத்தையுடையனாதலால் “கறைக்கண்டனே” என்று கூறுகிறார். இங்ஙனம் உரைப்பதிலும் ஒரு நயம் உண்டு. தேவர் அமுதுண்டற்கு இடையூறாகத் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு அருளிய பேரருளை நினைப்பித்து இறைவனை மகிழ்வித்தல் அதனாற் பயனாம். அம் மகிழ்ச்சி அருள் நல்கற்கு ஊக்கும் என அறிக.
இன்னோரன்ன காரணங்களால் யான் நின்னை அடுத்து அருள் நல்குமாறு வேண்டுவேனாயினேன் என்பது பயன். (54)
|