55
55. உலகியல் வாழ்வை எண்ணுகின்ற வள்ளலார் மக்கள் அதன் கண் எண்ணியவாறு பெறாது ஏமுற்று
வருந்துவதே எங்கும் இயல்பாய் இருப்பது காண்கின்றார். பொறாமைக்குரிய காரணங்களை எண்ணிக்
குற்றங்களைக் கண்டு திருத்திக் கொள்வதை விடுத்து, பெரும்பாலார் துன்புறுவதே தொழிலாகக் கொண்டுள்ளனர்.
அதனால் வாழ்வை மிக்க துன்ப வடிவாகக் கண்டு வருந்துகின்றனர். அவரோடு தாமும் உடனிருந்தது
துன்புற்றதை வள்ளலார் நினைக்கின்றார். வாழ்வை வாழ் வாங்கு வாழ்ந்து பெரும்பயன் உறுதற்குரியவன்,
அது செய்யாது துன்புற்ற குற்றத்திற்காக, மனம் மாறித் தன்னைக் கைவிடவேண்டாவென வள்ளலார் வேண்டுகின்றார்.
வாழை இலையாலும் காயாலும் கனியாலும் தண்டினாலும் பயன்படும் இயல்பறிந்து அதனைக் கொணர்ந்து வைக்கும்
உலகவர், பின்பு அதற்கு நீர்விட மறுப்பதில்லை. அச்செயலை எடுத்துக் காட்டித் தன்னைக் கைவிடாது
அருள வேண்டுமெனச் சிவபரம் பொருளை வேண்டுகின்றார்.
2225. பீழையை மேவும்இவ் வாழ்கையி
லேமனம் பேதுற்றஇவ்
ஏழையை நீவிட லாமோ
அடிமைக் கிரங்குகண்டாய்
மாழையைப் போன்முன்னர்த் தாங்கொண்டு
வைத்து வளர்த்தஇள
வாழையைத் தாம்பின்னர் நீர்விட
லின்றி மறுப்பதுண்டே.
உரை: பொன்போல் தேடிக் கொணர்ந்து வைத்து வளர்த்த இளவாழைக் கன்றைப் பின்னர் நீர்விடாது கைவிடுவோர் உலகத்து இலர் அதுபோல், பீழை பெருந்திய இவ்வுலக வாழ்வில் மனம் பேதுற்ற ஏழையாகிய என்னைக் கைவிடலாகாது; அடிமையாகிய எனக்கு இரங்கியருள்க. எ.று.
பீழை - பீழையால் உளதாகும் துன்பம் பீழையெனப்படும். வாழ் வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வ இன்ப வாழ்வுற பெறற்கென்று அமைந்த இவ்வாழ்வைச் செந்நெறியிற் செலுத்தாது தீநெறியிற்செலுத்தித் துன்புறுவதே மக்களது பெருந்தொழிலாயிருப்பது பற்றிப் “பீழையை மேவும் இவ்வாழ்வு” என எடுத்துரைக்கப்பட்டது. வாழப்பிறந்த மக்கள் வாழ்க்கையில் மனம் மொழி மெய் என்ற கருவிகளால் நல்லன அறிந்து கோடற்கேற்ற அறிவும் செயற்படுதற்குரிய திறமும் இறைவன் அளித்திருந்தும், அவற்றின் குறிப்புணராது வேறு நெறியில் அம்மனம் முதலியவற்றைச் செலுத்திப் பிழைபல செய்து பீழையுறவது மக்கள் வாழ்வின் பெரும்பான்மைச் செயலாதலின், “பீழையை மேவும் இவ்வாழ்க்கை” என இழித்துரைக்கின்றார். இக் குற்றத்தால் அறிவுடைய மக்கள் பால் இறைவன் சினம் கோடற்கு இடமுண்மையை வள்ளலார் காண்கின்றார். அறிவோடு கூடி நலம் தீங்குகளைப் பகுத்துணர்தற்குரிய நுண்ணிய மனமாகிய கருவி, அதனை விடுத்து உலகியலில் அறிவல்லனவற்றை விரும்பி அவற்றின்பால் மனத்தைச் செலுத்தி எய்தும் துன்பத்தால் கலக்குறும் செயலை “மனம் பேதுற்ற” எனவும், அதனால் சிறுமையுற்றமைபற்றி 'ஏழை' எனவும் குறித்துக் கூறுகின்றார். பிறப்பின் குறிக்கோளையும், அதன் பொருட்டளிக்கப்பட்டிருக்கும் வாழ்வின் குறிப்பையும் உணராது தவறிய குற்றம் கண்டு வெறுத்தல் வேண்டா என வேண்டும் கருத்தினராய், “நீவிடலாமோ” என உரைக்கின்றார். சினமிகுதியால் கைவிடற் கருத்து உள்ளத்தே தோன்றும்; வாழ்க்கைக்குரிய கருவியாகிய உடலும் நுகர்ச்சிக்குரிய உலகும் அளித்து உயிர்களைத் தனக்கு இறைவன் அடிமையாக்கிக் கொண்டமை நினைவிற்கொண்டு கூறலின், “அடிமைக்கு இரங்குகண்டாய்” என விளம்புகிறார். இல்லாதபோது வாழையின் பயப்பாட்டை நன்குணர்ந்து நாடிக் கொணர்ந்து வைத்து வளர்ந்த திறத்தை மாழையைப் போல் “முன்னர்த்தாம் கொண்டு வைத்து வளர்த்த இள வாழை” என எடுத்துரைக்கின்றார். வாழையின் வேர், தண்டு, இலை, பூ, காய், கனி அனைத்தும் பயன்படுவது பற்றி “மாழையைப் போல்” என அருமை தோன்றக் கூறினார். நீரல்லது பிடித்தெருவும் வேண்டாமையின் பின்னர் “நீர்விடலின்றி” மறுப்பதுண்டடே என வினவுகின்றார். ஏகாரம், வினா. நீ படைத்த உலகில் நீ வாழ்வித்த மக்களிடையே இச்செயல் காணப்படாது என வற்புறுத்தற்கு “மறுப்பதுண்டே” எனக் கூறுகின்றார்.
இதனால், பீழையால் மனம் பேதுறுவேனுக்கு இரங்கி அருள்புரிக என வேண்டியது பயனாம். (55)
|