8

8. அறிவின் சிறுமை கண்டு உரைத்தல்

       56. சிவன், உயிர், உலகு என்ற பொருள் முன்றனுள், சிவனும் உயிரும் அறிவுடைப் பொருள்கள்; உலகு அறிவில்லாதது. அறிவுடையதைச் சித்து என்றும் சேதனம் என்றும், சைதன்னியம் என்றும், அறிவில்லதை அசித்து எனவும், அசேதனம் எனவும் அறிஞர் கூறுவர். சிவனும் உயிரும் அறிவுடைய சித்துப் பொருள் எனினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. சிவமாகிய சித்து தன் வயத்தது, தூயவுடம்பினது, இயற்கை யுணர்வினது, முற்று முணர்வது, இயல்பாகவே பாசங்களின் நீங்கியது, பேரருளுடையது, முடிவிலா ஆற்றலுடையது, எல்லையில்லா இன்பமுடையது. உயிராகிய சித்து, பிற பொருள்வயமாவது, மாசேறும் உடம்புடையது, கல்வி கேள்விகளால் எய்தும் செயற்கை யுணர்வினது, ஒன்றென்றாய்ப் பார்த்துக் குறைபடவுணர்வது; சிவச் சார்பாலன்றிப் பாசங்களின் நீங்காத குற்றமுடையது; குறையுற்று அருளைப் பெறும் இயல்பினது; எல்லைக்குட்பட்ட ஆற்றலுடையது; சிற்றின்பமே யுடையது. இக் குறைகளெல்லாம் நீங்கின போதும் உயிர் சிவமேயாய் ஒன்றாவதில்லை; வேறாய் நின்று சிவபோகத்தை நுகரும் இயல்புடையது. இவ் வேறுபாட்டை அருணந்தி சிவனார்,

     “சிவன் சிவன் என்றிரண்டும் சித்து ஒன்றாம் என்னில்,

     சிவன் அருட்சித்து இவன் அருளைச் சேரும் சித்து அவன்தான்

     பவம் கேடு புத்தி முத்தி பண்ணும் சித்து அவற்றில்

     படியும் சித்து அறிவிக்கப்படும் சித்தும் இவன்தான்;

     அவன் தானே அறியும் சித்து, ஆதலினால் இரண்டும்

     அணைந்தாலும் ஒன்றாகாது அநந்தியமா யிருக்கும்” 

என்று கூறுகின்றார். 

      இங்ஙனம் இயல்பிலேயே அறிவிற் சிறுமையுடையாதாக இருப்பதால், உயிரைச் சிற்றுயிர் என்பது மரபாயிற்று. இதனோடு ஒளியில் இருள்போல அறிவில் மலக்கலப்புற்று அறியாமை எய்தும் குறையும் உயிர்க்கு உளது. இதனால், அறிவதும் செய்வதும் இரு வழியிலும் குற்றப்பட்டுத் துன்புறுவது உயிர்க்கு உளதாயிற்று. இதனை நன்கு எண்ணுகின்றார் வடலூர் அடிகள். மக்கள் எய்தும் துன்பங்களுக் கெல்லாம் அறிவின்சிறுமையும் மலக்கலப்பால் உளதாகிய அறியாமையும் காரணம் எனத் துணிகின்றார். அறியாமையைப் பொறுத்தலும், அறிவின் சிறுமைக்கு இரங்கி அருள் புரிதலுமே வேண்டப்படுவன. இவற்றைச் செய்து இன்புறுத்தற்கு மக்களுலகில் ஒருவரும் இலர்; தேவருள்ளும் சிவனையன்றிப் பிறர் இலர் என்று தெளிந்து, சிவன்பால் முறையிடுகின்றார்.

2226.

     கருத்தறி யாச்சிறி யேன்படுந்
          துன்பக் கலக்கமெல்லாம்
     உருத்தறி யாமை பொறுத்தருள்
          ஈபவர் உன்னையன்றித்
     திருத்தறி யார்பிறர் அன்றேமென்
          கன்றின் சிறுமைஒன்றும்
     எருத்தறி யாதுநற் சேதா
          அறியும் இரங்குகவே.

உரை:

     சிறியேனாகிய யான் படும் துன்பக் கலக்கங்கட்கெல்லாம் காரணம் உருத்து அறியாமை; அதனைப் பொறுத்தருள்க; அறிவதறியும் அறிவு தந்து திருத்துபவர் உன்னையன்றிப் பிறர் யாரும் இல்லையன்றோ? கன்றின் சிறுமையை அதனை ஈன்ற செவ்விய பசுவன்றி எருது அறியாது; ஆதலால் எம்பால் இரங்கியருள்க எ.று.

     குணம் குற்றங்களைத் தேர்ந்தறியும் திறம் இங்கே கருத்து எனப்படுகிறது. “ஒருத்தி நான், ஒருத்திக்கிந்த ஒரு மகன், இவனும் தேறும் கருத்திலாச் சிறுவன்” (திருவிளை. மாமனாக. 10) என்பது போல. அறியாமைக்கு ஏது அறிவின் சிறுமை என்பது புலப்படுத்தற்குச் “சிறியேன்” என்று தெரிவிக்கின்றார். அறியாமையால் துன்பமும் துன்பத்தால் கலக்கமும் உளவாவாதலால் “சிறியேன் படும் துன்பக் கலக்கம்” என்று சொல்லுகின்றார். துன்பத்தால் அறிவின்கண் தெளிவு பிறத்தலும் கலக்க மிகுதலும் உண்டு; இங்கே கலக்கமே மிகுந்தது என்பது தோன்றத் “துன்பக் கலக்கமெல்லாம்” என விளக்குகின்றார். நோக்கப்படும் பொருளின் கூறுகளை நுணுகி நோக்குவது உருத்த நோக்கம். அங்ஙனம் நோக்காமை அறியாமையாதலால், “உருத்து அறியாமை” என்று உரைக்கின்றார். அறியாமை மலமறைப்பால் உளதாகலான், “பொறுத்து” என்றும், அவனது திருவருளாலன்றி மலவிருள் நீங்காதென்பது பற்றி “அருள்” என்றும் முறையிடுகின்றார். அருளறிவு தந்து திருத்திப் பணி கொள்வது இறைவன் செயல் என ஞானாசிரியன்மார் நவில்கின்றார்கள். இருளாய உள்ளத்தின் இருளைநீக்கி இடர் பாவம் கெடுத்தேழை யேனையுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல் சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை” என்று திருநாவுக்கரசரும், “திருத்தித் திருத்தி வந்து என் சிந்தையிடங்கொள் கயிலாயா, அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருள்வாயே” (ஊர்த். 8) என நம்பி ஆரூரரும் தெளியவுரைத்துள்ளனர். இச் செயல் மேலாய பரம்பொருட் கன்றிக் கீழான தேவர்கட்கும் பிறர்க்கும் ஆகாது என்பது பற்றியே “ஈபவர் உன்னையன்றித் திருத்தறியார் பிறர்” என்று கூறுகின்றார். திருத்துதல் என்பது விகுதி குன்றி முதனிலைத் தொழிலாய் வந்தது. இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குகின்றார். கன்றீன்ற பசு, மென்மை சான்ற தன் கன்று செய்யும் குற்றத்தைப் பொறுப்பதுபோல எருது செய்வதில்லை என்பாராய், “மெய்கன்றின் சிறைமையொன்றும் எருது அறியாது நற்சேதா அறியும்” எனத் தெரிவிக்கின்றார். சேதா - செம்மையான் ஆ. கன்றீன்ற சேதா என வெளிப்படுத்தற்கு “நற்சேதா” எனக் கூறுகிறார். கன்றின் உயிர்க்கு உடல் தந்து வன்மடி சுரக்கும் பாலையும் தந்து பேணி வாழ்விக்கும் சேதாவைப்போல உயிர்கட்கு உடல் தந்து உலகில் வாழ்வு தந்து ஒம்புவதுபற்றி இறைவனைச் சேதாவோடு உவம் செய்கின்றார். “அடியார் மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே” என மணிவாசகனார் இவ்வுண்மையை விளக்குகின்றார்.

     இதனால் என் அறிவின் சிறுமையும் அறியாமையும் பொறுத்து அருளறிவு தருக என வேண்டுவது பயனாதல் காணலாம்.

     (56)