57

     57. உடையோரை யடைந்து இல்லார் பலர் சென்று தமக்கு வேண்டுவன அருளுமாறு இரத்தலும், அவர்கட்கு உடையோர் அளித்தலும் இயல்பு. உடையவர் அளிக்குமிடத்து உடனே தருதலும் காலம் தாழ்த்துத் தருதலும் உண்டு. வேண்டப்பட்ட பொருள் எளிதாயின் உடனே தருதலும் அரியதொன்றாயின் தாழ்த்துத் தருதலும் உலகியற்கு ஒத்தவையாகக்  கருதப்படுகின்றன. இரக்கும்போதும் அரியதொன்றை நாடியிரத்தல் இரக்கத்தக்கதெனக் கருதுவர். எவரும் எளிதிற் பெறக் கூடியதொன்றை வேண்டியிருத்தல் இரப்போர்க்கே யன்றி ஈவோர்க்கும் இன்பம் பயவாது. அதனைக் காண்பவரும் கைகொட்டி நகைப்பர். சிவபரம் பொருளின் சிறப்பையும் தகுதிப் பாட்டையும் நோக்கி அவர்பால் இரந்து வேண்டப்படும் பொருள் ஏனையோர்பால் பெறமுடியாத உயர்வும் அருமையும் உடையதாகல் வேண்டும். அதனைக் காண்பவரும் வியப்பும் பெருமிதமும் கொள்வர். மிக எளிய சிறிய பொருள் ஒன்றைப் பெருஞ் செல்வரை யடைத்து பெறுவதில்லை; ஒத்தார் ஒருவரிடம் அஃது இனிது பெறப்படும். பெரும் பொருள் வேண்டுங்கால் தக்க செல்வப் பெருமகனை அடைந்து கேட்கத்தக்கது வேறு; பிறரை தக்கது வேறாம். “கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை தாட்பால் வணங்கித் தலை நின்றிவை கேட்கத் தக்கார்” என ஞானசம்பந்தர் அறிவிக்கின்றார். இன்னோரன்னவற்றை எண்ணிய வடலூர்வள்ளல், சிவன்பால் தாம் வேண்டியதை நினைக்கின்றார். தேவர்கள் வேண்டிய அமுதமன்று; அதுபோல்வதுமன்று தாம் வேண்டுவது. சிவனை நோக்க, அவன் அடியார்க்கு அருளும் நலங்களை நோக்க, அவர் வேண்டியது மிக மிக எளிதாய்த் தோன்றுகிறது. அஃது ஏனை அடியார் அறியின் நகைத்தற்கு இடமாம் என எண்ணுவதோடு, ஈதொருபொருளாகச் சிவன்பால் வேண்டத்தக்கதன்று; கேட்கப்படத்தக்க அரியன பல இருக்க இதனைப்போய்க் கேட்டனையே, இது தகுமா? ஏன் வேண்டிக் கேட்டனை என என்னை இகழ்வார்கள். இத்துணை எளிய என் வேண்டுகோட்கு இரங்குதல் செய்யாமல் தாழ்க்கின்றாய்; இது நன்றன்று என முறையிடுகின்றார். உலகில் தனக்கு அடிமையாளாக ஒருவனைத் தேடிக் கொள்வது உயர்ந்தோர்க்கு ஒத்த செயலாகும். அவ்வாறு ஒருவனுக்குச் சோறும் கூறையும் தந்து அடிமையாகக் கொண்ட பின்னர், அவனுக்கு உணவுதர மறுப்பதோ, தாழ்ப்பதோ இல்லை; உலகியல் அதுவாக, எல்லாவுலகிற்கும் மேலாய இறைவனாகிய நீ அடியேனை ஆட்கொண்டபின் அருள் செய்வதில் தாழ்ப்பது பொருந்தாது என வள்ளலார் புகழ்கின்றார்.

2227.

     வான்வேண்டிக் கொண்ட மருதோமுக்
          கண்கொண்ட வள்ளலுன்னை
     நான்வேண்டிக் கொண்டது நின்னடி
          யார்க்கு நகைதருமீ
     தேன்வேண்டிக் கொண்டனை என்பார்
          இதற்கின்னும் ஏனிரங்காய்
     தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக்
          கூழிடத் தாழ்ப்பதுண்டே.

உரை:

     முக்கண் கொண்ட வள்ளலே, நான் நின்னை வேண்டியது தேவர்கள் அன்று வேண்டிக் கொண்ட மருந்தோ? அதனினும் மிகமிக எளிய தொன்றுதானே; உன்னை நான் வேண்டிக்கொண்டது, அடியார் கட்குத் தெரியுமாயின் மிக்க நகைப்பை விளைவிக்கும்; அன்றியும் அவர்கள் என்னை நோக்கி, இதனை ஏன் வேண்டிக் கொண்டாய் என இகழ்வர்; இத்துணை எளியதொன்றை நான் இரந்து கேட்கவும் நீ ஏனோ இரங்குகின்றாய் இல்லை; தானே தேடி வேண்டிக்கொண்ட அடிமையாளுக்குக் கூழாகிய உண்பொருள் நல்கத் தாழ்ப்பதுண்டா? இல்லையன்றோ எ.று.

     வான் - வானுலகில் வாழும் தேவர்கள். மருந்து இங்கே தேவர்கள் வேண்டிய அமுதமாகும். உண்டாரைச் சாவாது வாழப்பண்ணும் என்பது பற்றி தேவர்கள் வேண்டிய அமுதம், சாவா மருந்து எனப்படும். யாவரும் நன்கறிந்ததொன்றாதல் பற்றிப் புலவர் அதனை வாளா மருந்தென்பர். அதனால் அடிகளாரும் “மருந்தோ” என வுரைக்கின்றார். அது பெறலரிது என்பதுபற்றுத் தாமதிக்கலாம்; அதுவன்று என்றற்கு “வான்வேண்டிக் கொண்ட மருந்தோ” என உரைக்கின்றார். இறைவனது ஈயும் தன்மையைச் சிறப்பித்து “வள்ளல்” என்கிறார். “நான் வேண்டிக்கொண்டது “ என்ற தொடர், ஓசைக் குறிப்பால் “மிகவும் புல்லியது” என்பது பட, நிற்கிறது. அடியவர் பெறத்தக்கன பல விருக்க நான் வேண்டிக்கொண்டதை விளக்க வுரைக்கின் அவர்கட்கும் நகை விளைக்கும் என்பாராய், “நின் அடியார்க்கும் நகை தரும்” எனக் கூறுகின்றார். அடியவர்கள் பெரும் பண்புடையராதலால், நகைத்து இகழ்வதோடு ஒழியாது அருள் உள்ளத்தால் நான் வேண்டியது இன்னதென யான் சொல்லத் தெரிந்து, அதனை எங்கும் பெறலாமே, சிவபெருமானை யடைந்து கேட்கத் தக்க பெருமையுடைதன்றே, இதற்காகவா வேண்டிக் கொண்டாய் என்பர் என்பதற்காக, “ஈது ஏன் வேண்டிக் கொண்டனை என்பார்” என மொழிகின்றார். நான் வேண்டிக்கொண்ட பொருள் இத்தனை எளியதாயிருக்க, இன்னும் மனம் இரங்கி அருளுதலின்றிக் காலம் தாழ்த்துகின்றாய். என்றற்கு, “இதற்கின்னும் ஏன் இரங்காய்” என வேண்டுகிறார். தனக்கு அடிப்பணி செய்யத்தக்க ஆள் ஒருவர் வேண்டுமெனின் எங்கெங்கோ அலைந்து தேடி முடிவில் ஒருவனைக் கொண்டால், கொண்ட செல்வர் அவன் வேண்டுவதத்தனையும் விரைந்து தந்து தன்னின் நீங்காவாறு சூழ்ந்து கிடக்கவே செய்வர்; வீடுகளில் அடிமையாட்களுக்குத் தரப்படும் உணவு கூழாகும். இதனைக் கேழ்வரகுக் கூழ் என்பர். அடிமையாள் கேட்கும்போது வேலையின் அருமைபற்றி விரைந்து தருவது மரபு; தாழ்ப்பது இல்லை என்பதை வற்புறுத்தற்குத் “தாழ்ப்பதுண்டே” என உரைக்கின்றார்.

     (57)