58
58. உடையார்பாற் சென்று இரப்பவர் கூட்டத்தையும் அவர்பாற் காணப்படும் பொய்மையையும் காண்கின்ற
வள்ளலார் அவர் செயலை வெறுக்கின்றார்; எனினும், அவர் கூறுவனவற்றை ஏற்று மனத்தே இரக்கங்கொண்டு
ஈத்து விடுகின்ற செல்வரையும் கண்டு மகிழ்கின்றார். தாம் திருவருள் வேண்டிச் சிவன்பால் முறையிடுகின்ற
செயலை நினைக்கின்றார். செல்வர்பாற் காணப்படும் அருணிலையைக் காட்டி அவர்போல் தமக்கும்
அருள் வழங்க வேண்டும் எனச் சிவனை வேண்டுகின்றார்.
2228. பையுரைத் தாடும் பணிப்புயத்
தோய்தமைப் பாடுகின்றோர்
உய்யுரைத் தாவுள்ள தில்லதென்
றில்லதை உள்ளதென்றே
பொய்யுரைத் தாலும் தருவார்
பிறர்அது போலன்றிநான்
மெய்யுரைத் தாலும் இரங்காமை
நின்னருள் மெய்க்கழகே.
உரை: படம் விரித்தாடும் பாம்பையணிந்த புயத்தையுடையவனே, பொருள்வேண்டித் தம்மை பாடிவருபவர், உடையவர் உள்ளத்தே கொள்ளவேண்டி, அவர்பால் உள்ளதை இல்லதென்றும் இல்லதை உள்ளதென்றும் பொய்யுரைப்பர்; பொய்யுரைப்பினும் பொய்யெனக் கொள்ளாது தகுவன கொடுத்து உதவுவர் உலகத்துச் செல்வர்; அவ்வாறன்றி அடியேன் மெய்யே யுரைக்கவும் நீ இரங்குகின்றாயில்லை; மெய்ம்மை சான்ற நின் அருட்கு இது அழகன்று. எ.று.
பை - பாம்பின் படம். உரைத்தல் - விரித்தல். “போர்க்குரை இப்புகன்று” (புறம். 97). பணி - பாம்பு விரித்த பாம்பு கிடந்தசையும் தோள் என்றற்கு, “பையுரைத்தாடும் பணிப் புயத்தோய்” எனப் புகழ்கின்றார். உய்யவுரைத்தல் - தாம் உரைப்பன கேட்போர் உள்ளத்திற் பதிந்து இரக்கம் பிறப்பித்தல். உள்ளதை இல்லென்றுரைக்கும் பொய்ம்மைக்கு வியந்து 'ஆ' எனக் கூறுகின்றார். உள்ளதன் உண்மையையும் இல்லதன் இன்மையையும் எடுத்துரைப்பது நேர்மை; அதனை விடுத்து உண்மையை மறுத்து இல்லென்றுரைக்கும் பொய்ம்மையை, “உள்ளது இல்லதென்றும் இல்லதை உள்ளதென்றும் பொய்யுரைத்தாலும்” எனப் புகல்கின்றார். பொய்யுரைத்தார்க்குப் பொய்ம்மையைக் காட்டி மறுத்தலின்றி, உலகிற் செல்வர் சிறிதேனும் ஈத்துவிடுவர்; அச்செயல் மேலும் பொய்யே யுரைத்தற்கு ஊக்குவதை யெண்ணாது செல்வர்கள் ஈத்தளிக்கின்றார்கள்; அதனையே “பொய்யுரைத்தாலும் தருவர்” என உரைக்கின்றார். உலகத்துச் செல்வரைப் பிறர் எனக் கூறுகிறார். பொய்ம்மைச் செயலை வளர்க்கின்ற கொடுமைபற்றி நான் மெய்யே யுரைக்கின்றேன்; மெய்ம்மை யறத்தை மேற்கொண்டேனை யூக்காது உனது அருளை வழங்காது தாழ்ப்பது அறமன்று என்றற்கு, இரங்காமை நின் அருளின் மெய்ம்மைத் தன்மைக்கு அழகு தருவதன்று, என்பார் “இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே” என முறையிடுகின்றார். ஏகாரம், வினா.
இதனால், அருளே உருவாகிய சிவபெருமான், உலகியற் செல்வர்க்கிருக்கும் அருட்பண்பும் இலனாய், அருள் செய்யானாவது அழகன்று என வள்ளற் பெருமான் முறையிடும் திறம் நன்கு காணப்படுகிறது. பொய்யுரைப்பார்க்கு அருள் கொண்டு உதவுவது பொய்யுரையை மேன்மேலும் கைக்கொண்டு வளர்க்கும் குற்றத்தைப் பெருக்குவதாம் என்று கருத்து அடிகளார் திருவுள்ளமாவதை, “பிறர்” என்பதனால் உணர்த்தும் திறம் நோக்கத் தக்கது. (58)
|