59

           59. என்மனம் நின்னையன்றி என்னோடு ஒப்ப வாழும் பிறரையோ ஊரவரையோ நாடி என் குறைகளைச் சொல்லி ஆறுதல்பெற நினைப்பது இல்லை. இதற்குக் காரணம் ஒன்று உண்டு. அதனை நான் நன்கறிவேன். உலகில் மகிழ், தாழை முதலாய பூக்கள் சில உண்டு. அவை ஈரம் புலர்ந்து இதழும் மடலும் உலர்ந்தாலும் மணம் புலர்வதில்லை. அதுபோல நின்பால் ஒன்றிய என் உள்ளம் வேறொன்றை நினையாது. நாடாது உன்னுடைய திருவுள்ளமோ கடலினும் கருணை மாண்புடையது. கடல் நீர் வற்றிப் புலத்தாலும் நின் மனம் அருள் வற்றாது. அதனால் என் துயர் வகைகளை உன்பாலன்றிப் பிறர்க்கு உரைத்தல் இலேன் என உரைக்கின்றார்.

 

2229.

     மடல்வற்றி னாலும் மணம்வற்று
          றாத மலரெனஎன்
     உடல்வற்றி னாலும்என் உள்வற்று
          மோதுயர் உள்ளவெல்லாம்
     அடல்வற்று றாதநின் தாட்கன்றி
          ஈங்கய லார்க்குரையேன்
     கடல்வற்றி னாலும் கருணைவற்
          றாதமுக் கண்ணவனே.

உரை:

     கடல் வற்றினும் கருணை வற்றாத மூன்று கண்களையுடைய முதல்வனே, மடலும் இதழும் காய்ந்து புலர்த்தாலும் மணம் வற்றாத மலர்களுண்டு; அவற்றைப்போலத் துயர்மிகுதியால் என் உடல் வற்றி மெலிந்தாலும் என் உள்ளம் நின்பாற் கொண்ட அன்பு புலராது; என்பால் உள்ள துன்பங்க ளெல்லாவற்றையும் நின் திருவடிக்கன்றி அயலார்க்கு உரைக்கமாட்டேன் எ.று.

     இறைவன் சுருக்கமில்லாத கருணைக் கடலாகலின், அவனைக் “கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணனே” எனப் புகழ்கின்றார். தாழையும் மகிழும் ஈரம் புலரினும் மணம் புலர்வதில்லை; அவற்றை “மடல் வற்றினுலும் மணம் வற்றுறாத மலர்” என வனைந்துரைக்கின்றார். துயர் மிகுதியால் ஊணும் உறக்கமும் இழந்து வற்றலாய் உடல் வாடினும், உள்ளிருக்கும் என் மனம் நின்பாற் கொண்ட அன்பு குன்றாது என்றற்கு “என் உடல் வற்றினாலும் என் உள்வற்றுமோ” என உவந்துரைக்கின்றார். துயரும் இடுக்கணுமாய் வாழ்வின்கண் மலிந்துநின்று வருத்தும் துன்பங்களை நின் திருவடிக்கன்றி அயலார்க் குரைப்பதிற் பயனின்மை யுணர்ந்துளேன் என்பாராய், “துயர் உள்ளவெல்லாம் நின்தாட்கன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன்” எனக் கூறுகின்றார். நின் திருவடி அனைத்தையும் தாங்கும் அடல் மிக்கது என்றற்கு - “அடல்வற்றுறாத நின் நாள்” எனப் புகழ்ந்துரைக்கின்றார். அடல்-வலிமை “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” என இறைவன் திருவடியை நக்கீரர் சிறப்பித்துரைப்பது காண்க.

     இப் பாட்டால் துன்பங்கள் சுடச் சுடத் தாக்கினும், திருவடிக்கண் பதிந்த அன்பு வற்றாது காண் என உரைத்தவாறு.

     (59)