60
60. மக்களுடைய அறிவு, கண்,
காது முதலிய புறக்கரணங்களைக் கொண்டு பிறர் எய்தும் வருத்தத்தை அறிய வல்லதாகிறது. பிறருடைய
மெய்யாலும், செயலாலும், சொல்லாலும் அவர்படும் துன்பத்தை நன்கு அறிய முடியும். அவர்களின் உள்ளிருக்கும்
மனத் துயரத்தை உண்ணுழைந்து கண்டறிதல் இல்லை. அவர்களின் மெய்ப்பாடும் சொல்லும் கொண்டு
கருதலளவையால் உய்த்துணரும் திறம் மக்கட்கு உண்மையால், ஒரளவு உள்ளுறு துயரத்தை அறிய முடிகிறது.
எனினும் புறத்தே அறிகருவிகளால் அறிந்து மெய்ம்மை துணிவதுபோல், மனத்தே அனுமானவாயிலாக உணர்வது
ஒரோவழிக்குற்றப்படுதற்கும் இடமுண்டு. இறைவனோ எப்பொருளிலும் அகமும் புறமும் கலந்திருந்து அறிபவன்;
அறியுமிடத்தும் அவனுடைய அறிகருவிகள் நம்முடையனபோல வழுப்படுவனவல்ல. “ஒன்றொன்றாய்ப் பார்த்துணர்வது
உள்ளம்” என்பர். மெய்கண்டதேவர். உள்ளம் என்றது உடலுக்குள்ளிருந்து உணர்வன உணரும் உயிர்.
ஒன்றொன்றாய்ப் பார்த்துணர்வது. உயிர் எனின், எல்லாவற்றையும் ஒருங்கு தோய்ந்து ஒன்றும் ஒழியாது
உணர்வது சிவன் என்பது பெறப்படும். அது பற்றியே சிவனை முற்றுணர்வினன் என நூல்கள் கூறுகின்றன.
உள்ளும் புறமும் ஒப்ப வுணரும் பெருமானாகிய சிவன் என்பது நன்கு அறிந்திருந்தும், அவன் திருமுன்னின்று
ஒன்றும் அறியாத கீழ்மக்களேயன்றி, கற்று வல்ல சான்றோர் பலரும் முறையிடுவது இயல்பாகவுள்ள திறத்தை
வள்ளற் பெருமான் சிந்திக்கின்றார். அடியேன் அகத்தின்கண் எண்ணிறந்த துன்பங்கள் கிடந்து
வருத்துகின்றன; நீயும் என் அகத்தின்கண் இருத்தலால் அவற்றைக் கண்டிருக்கின்றாய்; அங்ஙனமிருக்க,
உன் திருவடிக் கண் முறையிடுவது என்ன காரணம் என எண்ணுகின்றார்.
2230. எள்ளிருக் கின்றதற் கேனுஞ்
சிறிதிட மின்றிஎன்பான்
முள்ளிருக் கின்றது போலுற்ற
துன்ப முயக்கமெல்லாம்
வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண்
டார்எனில் மேவிஎன்றன்
உள்ளிருக் கின்றநின் தாட்கோதல்
என்எம் உடையவனே.
உரை: எம்மை உடைய பெருமானே, எள்ளிருக்கத் தக்க இடமும் இன்றி முள் தைத்துக் கொண்டிருப்பது போல என்பால் துன்பங்கள் துதைந்திருக்கின்றன; வெளியிலே என்னைக் காண்கின்ற என்போன்ற மக்கள் என் புற நிலையைப் பார்த்து ஓரளவு உணர்த்துகொண்டு, என்பால் இரக்கம் கொள்கின்றனர்; என் உடலகத்தே என் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கின்ற நீ எல்லாம் நன்கறிந்துள்ளாய்; நிலைமையிதுவாக, நின் திருவடிக்கண் முறையிடுவது என்ன காரணம்? கூறியருள்க. எ.று.
மிகச் சிறிய பொருளாதலின் 'என்' எனக் கூறினார். “அணுப்புதைக்கவும் இடமின்றி” என்பதை, “எள்ளிருக்கவும் இடமின்றி” எனவுரைக்கின்றார். உடல் முழுவதும் முள் தைத்த்துபோலத் துன்பங்கள் வருத்துகின்றன என்பதை, “துன்ப முயக்கமெல்லாம் முள்ளிருக்கின்றதுபோல் உற்றன” என உரைக்கின்றார். துன்ப மிகுதியைத் துன்பமுயக்கம் என மொழிகின்றார். முயக்கம் - கலத்தல். வெள்ளிருக்கின்றனர் - வெளியுலகில் காண்பவர். வெள் - வெள்ளிடை. உடலின் அகத்தே உறைகின்ற நீ யாவும் அறிந்திருப்பதை அறிந்தும், மக்கள் அறியாதான் போலக் கருதி நின் திருவடியில் முறையிடுகின்றார்கள். இது மிக்க வியப்புத் தருவதனால், “நின் தாட்கோதல் என்?” என உரைக்கின்றார். நினைப்பதும் பேசுவதும் செய்வதும் ஆகிய கருவிகள் அனைத்தையும் உடையவன் இறைவனாதலால் “உடையவனே” என வுரைக்கின்றார்.
இறைவன் தம்முள் கலந்திருக்கின்றான் என்பதை மக்கள் அறிவாராயினும்; நெஞ்சின்கண் உள்ளத்தைப் பிறரிடம் சொல்லி ஆற்றிக் கொள்ளும் இயல்பினால் இறைவன் திருவடிக்கண் முறையிடுவது அவர்கள் செயலாகிறது. (60)
|