61
61. மக்களின்
அருளுடையார் பலர் உண்டு. அவரது அருட்செயல் வியப்பை மிகத் தருவது. பாம்பு நஞ்சுடையதாதல் பற்றி
அதனைக் காண்பவர் கொல்லவே கருதுவர். அப் பாம்புக்குப் பாலுணவு விருப்பம் தருவது. பாம்புண்ணும்
இனிய நீரும் அதனுடைய நஞ்சே பெருகுதற்கு ஆக்கமாகும். என்பதை உலகவர் நன்கு அறிவர். “நஞ்சே
பாம்புண் தீ நீர் மாதோ” ( 49 ) என ஞானாமிர்தம் கூறிகறதன்றோ? அருளுடையார் நஞ்சுடையமைபற்றிப்
பாம்பைக் கொல்வதில்லை; அந்நஞ்சு பாம்புக்குத் தற்காப்பாக அமைந்தது; தன்னைத் தீண்டினாரையல்லது
எவரையும் அது தானாகப் போந்து தீண்டுவதில்லை என்று எண்ணி, அதனைக் கொல்லக் கருதார்; அதற்குப்
பாலுணவு நல்குவர். அதைக் கண்டறியும் உலக மக்கள் பாம்புக்கு பாலுணவு தந்து கொல்வது நன்றன்று என்று
கூறுவதைக் காட்டி, அவ் வுலகவர் கூற்று குற்றமன்று என்பது தெளிவாகத் தெரிகிறது; அதுபோலவே, செய்வதும்
தவிர்வதும் தெரிந்து செயற்படும் எனக்கு மனமும் உடலும் உதவி வளர்க்கும் நீ என்பாற் குற்றம்
கண்டு இரங்காமை செய்தல் கூடாது; இருள் செய்யும் மலத்தாலும் சுழல்கின்ற மனத்தாலும் துன்பங்கள்
தொடர்ந்து வந்து வருத்துகின்றன என்று முறையிடுகின்றார்.
2231. பொன்கின்று பூத்த சடையாய்இவ்
வேழைக்குன் பொன்னருளாம்
நன்கின்று நீ தரல் வேண்டும்அந்
தோதுயர் நண்ணிஎன்னைத்
தின்கின்ற தேகொடும் பாம்பையும்
பாலுணச் செய்துகொலார்
என்கின்ற ஞாலம் இழுக்குரை
யாதெற் கிரங்கிடினே.
உரை: பொன் போன்ற சடையை உடையவனே, துயர்கள் போந்து என்னைத் துன்புறுத்துகின்றன வாதலால் நினது பொன்போலும் அருளாகிய நலங்களை அருளுதல் வேண்டும்; அதனால் உலகம் நின்பால் குற்றம் காணாது; ஏனெனின் அது நஞ்சுடைய பாம்பாயினும், அதற்குப் பாலுணவு தந்து கொல்லலாகாது என்று கூறும் இயல்புடையது காண். எ.று.
பொன்கு இன்று பூத்த சடை - பொன்னிறம் இப்பொழுது பூத்தது போன்ற சடை. பொன்மை, பொன்கு என வந்தது; நன்மையையுடையது நன்கு என வருதல்போல, தின்றல் -இங்கே நின்று வருத்துதல் மேற்று; “இவை என்னைத் தின்னும் அவர்க் காணலுற்ற” (குறள் : 1244) என்றாற்போல. பாம்புக்குப் பாலுணவு தருவது உலகில் இன்றும் வழக்கமாகும். கொடுமைபற்றிப் பாம்பைக் கண்டாற் கொல்வது உலகவர் செயற்பண்பாயினும் பாலுணவு தந்து பின்னர்க் கொல்வது வழக்கன்று; அதனால்தான் “கொடும்பாம்பையும் பால் உணச்செய்து கொல்லார்” என்று கூறுகிறார். உலக வாழ்வாகிய பாலுணவு தந்து வாழ்விக்கின்ற அருளாளனாகிய நீ, அருளறிவு தந்து உய்விக்காது ஒழிவது உலகவர்க்கும் இழுக்காய்த் தோன்றுதலால், நீ அருளுதலே வேண்டத்தக்கது என முறையிடுகின்றார்.
இதனால் உலகியல் வாழ்வு தந்த நீ என்னை அறிவருளித் துன்பமில்லாமல் வாழச் செய்தல் வேண்டுமென வற்புறுத்துவது பயனாம். (61)
|