62

      62. அறிவுக்கும் செயலுக்கும் ஏற்ப உடம்பிருக்கிறது; உண்டு உடுத்து உலாவி உறங்கி வாழ்தற்கு ஏற்ப அகன்று விரிந்த உலகம் உளது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்கிறது. இங்ஙனம் எல்லாம் இனிது அமைந்த உலகவாழ்க்கையில் துன்பம் உண்டாவது ஏன்? உயிர்கள் துன்புற வேண்டி இன்ப வடிவினனான இறைவன் இல்வாழ்க்கையைப் படைத்தான் என்பது உண்மை அறிஞர்க்கு உடன் பாடன்று. உலக வாழ்வு மக்கள் அறிவைத் துலக்கி ஒளியும் ஞானமும் எய்தி இன்பம் பெறுதற்கு ஆக்கியளிக்கப்பட்டது என்றுதான் மணிவாசகர் முதலிய மாண்புடையோர் உரைக்கின்றனர். ஆதலால் துன்பம் நுகரவேண்டுமென்பது இறைவன் திருவுள்ளமன்று எனத் தெரிகிறது. இன்பப் பேற்றுக்கு வாயிலாவன அறிவும் செயலுமாம் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அதனை எண்ணிய அறிஞர் அறிவிலும் செயலிலும் உளவாகும் குற்றமே துன்பத்துக்குக் காரணம் என்று கூறுகின்றார்கள். ஆராய்ச்சியாளார் அக் குற்றந்தானும் ஏன் உண்டாகிறது என்று வினவுகின்றார்கள். தம் நிலையில் தூயவான அறிவும் செயலும் குற்றப்பட்டுத் துன்பம் விளைவிப்பானேன் என அவர்கள் நினைக்கின்றார்கள். ‘ஒளியற்றம் பார்க்கும் இருள்’ போல அறிவு செயல்களின் அற்றம் பார்த்துக் குற்றம் நுழைகிறது. இக்குற்றம் உயிரை அனாதியே பற்றியருக்கும் மலமாகிய இருள் காரணமாகத் தோன்றுகிறது. “தூய நினைவைத் தூமொழியைத் தூய தொழிலைத் தோற்றாது, தீய நினைவைத் தீமொழியைத் தீய தொழிலைத் தவத்தோற்றும், ஆய ஆணவப் பகை என்றும் பேய் என்றும் ஆய்ந்தோர் உரைக்கின்றார்கள். அதனை நினைக்கின்றார் வடலூர் வள்ளல். அது புத்தி வட்டத்துள் உயிரின் உணர்வைப் பற்றிக் கிடப்பதைச் சிவாகமம் தெரிவிப்பது காண்கின்றார். திருவருள் ஒளி புகுந்தாலன்றி அப்பேய்ப்பிடி நீங்காதென்று காண்கின்றார்,  பால் நினைந்து ஊட்டுவது தாய்மையின் தனிப்பண்பு. “அறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்து என்னை ஆண்டு கொண்டதன் கருணைத் தேயுற்ற செல்வன்” என மணிவாசகப் பெருமான் குறிப்பதை எண்ணித் தமக்கு அச்செல்வன் தாயாய் முலையாய்த் தாராமை நினைந்து வருந்தி இறைவன் பால் முறையிடுகின்றார். “தாயாய் முலையைத் தருவானே” (திருவா. 647) என்பது அடிகளார் நெஞ்சில் தோன்றி நின்று அலைக்கின்றது. அவலித்துப் பாடுகின்றார்.

2232.

     வாய்முடிக் கொல்பவர் போலேஎன்
          உள்ளத்தை வன்துயராம்
     பேய்முடிக் கொண்டதென் செய்கேன்
          முகத்தில் பிறங்குகையைச்
     சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக்
          கண்டுத் திகழ்முலையைத்
     தாய்முடிக் கொள்ளுவ துண்டோ
          அருளுக சங்கரனே.

உரை:

     சங்கரனே, வாயைத் துணியிட்டுப் பொத்திக் கொல்பவரைப் போல என் உள்ளத்தை வலிய துயரம் என்னும் பேய் மூடிக்கொண்டு துன்புறுத்துகிறது; இதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தான் பேற்ற சேய் தன் கையால் கண்களை மூடிப் பிசைந்து கொண்டு அழுவது கண்டும் அதன் தாய் தன் பால் முலையை மூடிக்கொண்டு மறுப்பது இல்லையே; அருளாகிய நின்பாலைத் தருக எ.று.

     சங்கரன் - இன்பம் தருபவன். கொலை செய்வோருட் சிலர், அரவம் உண்டாகாதபடி வாயில் துணியைப் பெய்து நிறைத்துக் கொல்வதுண்டு. அதுபோலத் துயரமென்னும் பேய் உள்ளத்தில் துன்பமென்னும் துணியைப் பெய்து அடைத்து வேறு நினைவெழாதபடி மூடிக் கொல்லுகிறது என்பது விளங்க, “வாய்மூடிக் கொல்பவர் போலே என் உள்ளத்தை வன்துயராம் பேய் மூடிக் கொண்டது; என் செய்கேன்?” என உரைக்கின்றார். வேண்டியது உடனே எய்தாமையால் மனத்தே பிணக்குற்றுக்கையால் கண்களைப் பிசைந்து அழுவது சிறுகுழந்தைகட்கு இயல்பு. ஞான சம்பந்தர் அழுததைக் “கண்மலர்கள் நீர்ததும்பக் கைம்மலர்களால் பிசைந்து, வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப. . . . . . புண்ணியக் கன்றனையவர்தாம் பொருமியழுதருளினார்” எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது காண்க. பால் சுரக்கும் முலையிடத்தே ஒளிதிகழ்வது பற்றித் “திகழ் முலை” எனச் சிறப்பிகின்றார். 'பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்' பார்க்கும் தாயர் உலகத்து இன்மைபற்றி, “தாய் மூடிக் கொள்ளுவதுண்டோ” என உரைக்கின்றார். “தாயிற் சிறந்த தயா” வுடையனாகலின் துயரம், துடைத்தருள் என இதனால் முறையிடுகின்றார்.

     (62)