63
63. எங்கும் யாவரும் துன்பமே வடிவாக இருப்பதை வடலூர் வள்ளல் காண்கின்றார். சிறுவர் முதல் முதியவர்
ஈறாக யாவரும் குறை பட்டு மனத்தே துயருற்றுத் தோன்றுகின்றனர். இவ்வாறுதான் பண்டு புத்தரும்
பார்க்குமிடமெங்கும் துன்பமே நிலவக் கண்டு துயருற்றார்; துறவு பூண்டு துன்பக் காரணம் யாதாகலாம்
எனத் தனித்து ஆராய்ந்தார். பிறப்புத்தான் துன்பத்துக்குக் காரணம்; அப்பிறப்புக்குக் காரணம்
பற்று; பற்றற்றால் பிறப்பு நீங்கும்; பிறப்பின்றேல் இன்பம் ஆம் எனத்தெளிந்தார். “பிறந்தார்
உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பேரின்பம்; பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர்
உறுவது” என்று புத்தநூல் கூறுவது காண்கிறோம். இதனையே சிறிது சிந்திக்கின், பிறந்தோர்க்கு
உளதாகும் பற்றே துன்பத்துக்கும் மீளப்பிறத்தற்கும் காரணமாவது தெரியும்; இப்பற்று ஏன் உண்டாகிறது?
பிறந்தோர் உலகில் வாழவேண்டியவராவர்; வாழ்தற்குப் பிறக்கின்றார்களேயன்றிப் பிறந்தவுடன்
இறப்பதற்காக அன்று; இறப்பதற்கே பிறப்பதாயின், ஒரு பயனும் இன்றாம். பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையேயுள்ள வாழ்வுதான் பிறப்புக்குக் காரணமாவது. காணலாம் வாழ்வுதான் ஏன் என்ற கேள்வியைப்
பலர் கேட்கவில்லை. வாழ்வில் உளதாகும் துன்பத்தை மிகுதியும் எண்ணினர். அதனால் வாழ்வை வெறுத்தும்
பேசினர். வாழ்வின் குறிக்கோள் யாது, பயன் யாது என எண்ணினோர் மிகச் சிலரே யாவர்.
வாழ்வில் துன்பமேயன்றி, இன்பமும் உண்டு. இன்பத்தை நுகரும் நெஞ்சு துன்பத்தை வெறுத்துப் பெரிதாகக்
காட்டுகிறது. இன்பத்தைத் தருவாரைவிடத் துன்பம் செய்வாரைத்தான் பலகாலும் நினைக்கிறது.
பெருகிய இன்பமாயினும் அதனைச் சிறிதாக்கியும், சிறுதுன்பமாயினும் அதனைப் பெரிதாக்கியும் காட்டுவது
நெஞ்சின் நீர்மையாக உளது. இன்பமும் துன்பமும் ஒரு நீர்மையன என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.
இன்பவிளையாட்டுத் துன்பம் பயத்தலையும், துன்பமுடிவில் இன்பம் தோன்றுதலையும் வாழ்வில் காண்கின்றோம்.
ஒளியும் இருளும்போல இன்பமும் துன்பமும் ஒன்றினுளொன்று ஒடுங்கியிருக்கின்றன. ஒன்று மேலிடில் ஒன்று
ஒளிப்பது இயல்பாக இருக்கிறது. இதனால்தான் திருவள்ளுவர் “இன்னாமை இன்பம் எனக் கொள்க;
கொள்ளின், ஒன்னாரும் விழையும் சிறப்பு” உண்டாகும் என்று பட்டாங்குரைக்கின்றார். அதனோடு
அவர் நிற்கின்றாரில்லை. “துன்பம் வந்து தாக்கித் தீப்போலச் சுடும்; அதனைப் பொறுத்துக்
கொள்; அது சுடச்சுட, காய்ச்சக் காய்ச்சப் பொன் ஒளிமிகுவது போல நம் உயிரறிவும் மிகும்”
என உரைக்கின்றார். இதன் கருத்தென்ன? பொன்னிற் கலந்துள்ள மாற்றுப் பொருள் தீச் சுடச்சுட
நீங்குகிறது; பொன்னின் உண்மை யொளியை விளங்கச் செய்கிறது. அதுபோலவே துன்பமும் சுடச்சுட உயிரறிவிற்
கலந்துள்ள மாற்றுக் கருத்து (அறிவை மறைக்கும் மலம்) நீங்குகிறது; உண்மையொளி, மெய்ம்மையுணர்வு
விளங்கித் தோன்றுகிறது. காந்தியடிகள் சிறைத் துன்பத்தையும், உண்ணாமை மேற்கொண்டு பசித்துன்பத்தையும்
வருவித்துக் கொண்டது இக்கருத்துப்பற்றியே யாகும். அவர்பால் மிக்கெழுந்து நின்று நன்னெறிகாட்டிய
உள்ளொளி (இதனைஅவர் அந்தரான்மா என்றார்) துன்பத்தீயால் சுடப்பட்டொழிந்த மல நீக்கத்தால்
தோன்றியதெனத் திருக்குறள் கண்கொண்டு நோக்குவார்க்கு நன்கு புலனாகும்.
காந்தியடிகள் துன்பத்தை வருவித்தார் அது தானாக வருதற்கு வழியில்லை. நாம் வேண்டாதிருக்க அது
வந்து வருத்துகிறது. ஏன் என எண்ணுதல் வேண்டும். துன்பத்துக்குப் பற்றுக்கோடு குற்றமும், இன்பத்துக்குக்
குற்றமில்லாமையு மாகும். வாழ்வில் குற்றம் உண்டானபோது துன்பமும், அஃது இல்லாதபோது இன்பமும்
எய்துகின்றன. குற்ற முண்டாதற்குக் காரணம் பற்று என்றார் புத்தர் பெருமான். அறிவை மறைக்கும்
இருள் என்றார் திருவள்ளுவர், புத்தர் பற்றுக்கு மேற் செல்லவில்லை; பற்றுக்கு மேற்சென்று இருள்
காரணம் எனக் கண்டார் திருவள்ளுவர்; பற்றுக் காரணமாக வினையும் பிறப்புமாம் என்பது பௌத்தம்.
இருள் காரணமாக விளையும் பிறப்புமாம் என்பது திருவள்ளுவம். இதனை உணர்த்தவே, எடுத்த எடுப்பில்
முதல் அதிகாரத்திலேயே “இருள் சேர் இருவினை” என மொழிகிறது திருக்குறள், இதுதான் பிடகத்துக்கும்
திருக்குறளுக்கும் வேறுபாடு.
கீழ்நிலையில் துன்பத்துக்குக் காரணம் பற்று என்பதில் இருவரும் ஒத்த கருத்தினராவர். ‘பற்றற்றவன்
பிறவாப் பெருநிலை பெறுவன்’ எனப் புத்தர் பெருமான் கூறியது போலவே, திருவள்ளுவர், ‘இருவகைப்
பற்றற்றவன் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுந்து உலவா இன்பம் பெறுவன்’ என்று
மொழிகின்றார். எனவே, பற்றுதான் துன்பத்துக்குக் காரணம் என்பது தெளிவாயிற்று.
பற்று ஏன் உண்டாகிறது? பற்றில்லையாயின் உலகில் வாழ்வில்லை’ வாழப் பிறந்தவன், வாழ்பவன்,
பற்று உடையனாதல் வேண்டும். யான் என்ற பற்றில்லையாயின், பொருள் செயல் இல்லை; இன்ப நுகர்ச்சியில்லை;
எனது என்ற பற்றில்லையானால், பொருள் ஈட்டல் இல்லை; ஈதலும் இசை பெறுதலும் இல்லை; வாழ்வே
பயனற்றதாகும். எனவே வையத்தில் வாழ்வார்க்கு பற்று இன்றியமையா தென்பதாம்.
இப்பற்று எப்படி உண்டாகிறது? அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மையும், நூற்றொரு
கோடியின் மேற்பட விரிந்த தன்மையும் உடையது; அவை, யொன்றை யொன்று ஈர்த்துப் பிணித்திருக்கும்
இயல்பு பற்றாகும். இவ்வகையில் நாம் வாழும் அண்டமாகிய நிலவுலகு சுற்றியுள்ள கோள்கள் விண்மீன்கள்
ஆகியவற்றின் பற்றுக்களின் இடையே சுழன்று கொண்டிருக்கிறது. அதன் பற்றில் நாமும் நம் போன்ற
உயிர்ப்பொருள்களும் உயிரில் பொருள்களும் மண் கடல் காற்று முதலியனவும் அமைந்திருப்பது இன்றைய
கற்றோர் கூட்டம் நன்கறிந்தது. இப் பிணிப்பு இல்லையாயின் நாம் காணும் பூதவுலகின் அமைப்பே
சிதறிவிடும். இதனால் உலக அமைப்பும் அதன்கண் காணப்படும் உயிர்களின் இருப்பும், வாழ்வும் பற்றின்
அருவப் பிணிப்பில் தொடர்புற்றுள்ளன. வாழ்வு பற்றின் உறைவிடமாதல் உணரலாம்.
இவ்வுலகில் நாம் பிறக்கும்போது ஒருவகைப் பற்றும் இன்றியே பிறக்கின்றோம்; உடல் மீதோ உயிர்
மீதோ ஒரு பற்றும் இருப்பதில்லை. உணவும் உறக்குமும் உடலுளாய்த் தோன்றி மறைகின்றன. உடம்பைப்
பற்றி நிற்கும் பற்றொன்றன்றி வேறு எவ்வகைப் பற்றும் பிறக்கும் குழவிபால் இல்லை. அதன்பால்
தாயும் தந்தையும் உற்றோரும் உறவினரும் பற்றுச் செய்கின்றனர். அப்பற்று அக் குழவியின் உள்ளத்தில்
பற்று தோற்றுவிக்கிறது. தாய்பாலும் தன்னைப் பாராட்டி மகிழ்வுறுத்தும் அனைவர்பாலும் அக் குழவி
பற்றுக் கொள்கிறது. பற்றுடையோர் பற்றும் பரிவும் குழவியுள்ளத்தில் பற்றுண்டாக்கி அதன் உள்ளத்
தூய்மையைப் பற்றுடையதாக்கி விடுகின்றன. சிறிது வளர்ந்ததும் தன்பால் பற்றுடையார் அழுதால்
அழுவதும், மகிழ்ந்தால் மகிழ்வதும் குழவிகள்பால் உண்டாவதற்குக் காரணம், உள்ளத்தே இடம் பெற்றிருக்கும்
பற்றே யாகும். இளமையுள்ளம், இப்பற்றின் தொடர்பால் உடலும் உணர்வும் வளர வளர்ந்து வினைசெயல்
உணர்ச்சியும், எனக்கு எனது என்னும் உடைமை யுணர்ச்சியும் உற்று, யான் எனது என்னும் பற்றின்
உருவாகிறது.
வினைச்செயல் மேற்கொள்ளுமிடத்து வினை இனிது தடையின்றி இனிது நிகழின் உவகையும் பயன் இனிது
கைவருமிடத்து இன்பமும் தோன்றுகின்றன. இந்நிலையில் நான் எனும் பற்று முற்பட்டு நிற்கிறது.
வினைவழி எய்தும் பொருளை எனது எனக்கொண்டு நுகருமிடத்து இன்பமும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாகின்றன.
அன்றியும் இன்பம் எய்தும்போது அது பெருகுதல் வேண்டுமென்ற ஆசை தோன்றி மேன்மேல் படர்தலால்,
நுகரப்படும் இன்பம் எத்துணைப் பெரிதாயினும் மிகச்சிறிதாய்த் தோன்றுகிறது. துன்பம் தோன்றுமிடத்து
உள்ளம் கலங்கி மத்துறு தயிர் போல மறுகிச் சுழலுகிறது; விரைந்து தீர்வு காண்பதற்குப்
பொறிவாயிலாகப் புறத்தே பரந்து விளங்கும் உலகிற் படர்ந்து அலைகிறது; உடம்பு அசைவு பெற்று
அயர்கிறது. வாய் துன்பம் பற்றிய சொற்களையே சொல்லுகிறது. இவ்வகையில் கரணங்களும்
கருவிகளும் துன்பவடிவின ஆகின்றன. இதனால், துன்பம் சிறிதாயினும் மிகப்பெரிதாய் தோன்றுகிறது.
தீக் கதுவியது போல மனத்தகமும், உடலகமும் வெந்து கரிகின்றன. உடல் மனத்தின் வழிப்பட்டதாகலின்,
வடலூர் வள்ளல் மனத்தின் துன்பநிலையை எடுத்துரைத்துத் திருவருளை வேண்டுகின்றார்.
2233. கோள்வேண்டும் ஏழை மனத்தினை
வேற்றுக் கொட்டக்கொள்ளித்
தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு
மோவதை செய்திட ஓர்
வாள்வேண்டு மோகொடுந் துன்பே
அதில்எண் மடங்குகண்டாய்
ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும்
என்னுள் அஞர் ஒழித்தே.
உரை: ஏழையேன் மனத்தை வருத்தத்தில் ஆழ்த்துவதற்கு என்னின் வேறாய்ப் புறத்தேயிருந்து கொட்டும் தேளும், சுடும் தீயும், வெட்டிவதைக்கும் வாளும் வேண்டா; என் உடனாய் உள்ளத்தேயிருந்து கொடுமை செய்யும் துன்பமே தேள் முதலியவற்றிலும் எண் மடங்கு மிகுதியாக இருக்கிறது. அடியேனை ஆளுதல் திருவுள்ளமாயின் எனக்குள் இருந்து வருத்தும் துன்பத்தைப் போக்கி அருளி ஆளுதல் வேண்டும். எ.று.
யான் எனது என்னும் பற்றின் வழிநின்று ஆசை பெருகிக் கொள்வன மிகக்கொள்ளவேண்டும் என விரும்புவது மனம் என்றற்குக் “கோள்வேண்டும் மனம்” என்றும், ஆசைப் பெருக்கு வேண்டுவன இல்லாமை யுணர்வாதலால், அது நிறைந்த மனம் என்றற்கு “ஏழை மனத்தேன்” என்றும் உரைக்கின்றார். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே, அல்கா நல்குரவு அவா எனப்படுமே” என்பர் குமரகுருபர அடிகள். தேளுக்குக் கொட்டுவதும். தீக்குச் சுடுதலும், வாளுக்கு வதைத்தலும் செயலாதலால் “கொட்டத் தேளும் சுடத் தீயும் வதை செய்திட வாளும் வேண்டுமோ” என்று கூறுகின்றார். தேள் கொட்டுவது தீயாற் சுடுவது போல்வதாதலால் “கொள்ளித் தேள்” எனக் குறிக்கின்றார். உடம்பின் வேறாய்ப் புறத்தேயிருந்து இத் தேள் முதலியன துன்பம் செய்வனவாதலால் “வேறு உற்று” என்கின்றார். வேறாவன வாதலால் முன்ன்றிந்து விலக்கப்படுவதும், துன்பம் செய்தவழி உள்ளத்தின் உறுதியால் பொறுக்கப் படுவதுமாகிய குறைபாடு அவற்றிற்குண்டு. வேறாகாது மனத்தின் கண்ணே நின்று முன்ன்றிந்து விலக்கப்படாத வன்மையும், பொறுக்கப்படாது தொடர்ந்து வருத்தும் கொடுமையும் உடைய தென்றற்குத் “கொடுந் துன்பு” என்றும், அது செய்யும் வருத்தம் தேள் முதலியன செய்யும் வருத்தத்திலும் பன்மடங்கு என்றற்கு “எண்மடங்கு கண்டாய்” என்றும் உரைக்கின்றார். பொன்னைச் சுட்டு ஒளியுடையதாக்குவது போலத் துன்பத்தால் என்னைச் சுட்டு அருளொளியுடையனாக்குவது திருவுள்ளமாயின் என விண்ணப்பிக்கின்றாராதலால் “ஆள் வேண்டுமேல்” என்று கூறுகின்றார். ஆள், முதனிலைத் தொழிற்பெயராய் ஆளுதல் குறிக்கின்றது. அஞர் - துன்பம்; அஞராகிய துன்பம் அறிவின்கண் இருந்து மறைக்கும் மலத்தைப் போக்காது வருத்தத்தை மிகுத்துக் காட்டிக் கொடுமை செய்தலால், இதனை ஒழித்து ஆளுதல் வேண்டும் என்பாராய், “ஆளவேண்டும் என் உள் அஞர் ஒழித்தே” என வேண்டுகின்றார்.
இதனால் உண்ணின்று வருத்தும் துன்பம் பன்மடங்கு பெரிதாய் அறிவை ஒள்ளிதாக்காது துன்பத்துள் ஆழ்த்துதலால் அதனை அறவே ஒழித்து அருளொளி நல்குதல் வேண்டுமென முறையிடுவது பயன் என அறிக. (63)
|