64
64. பரமாந் தன்மையில் வைத்துச் சிவனை வழிபடும் வடலூர் வள்ளல், பௌராணிகச் சூழ்நிலையில்
சிவபெருமான்பால் அருள் வேண்டி முறையிடுகிறார். சிவன் ஏறும் வாகனமும், சூலம் மழு முதலிய படைகளும்
அவனிடம் இருப்பதை எண்ணுகின்றார். அவனோடு உரையாடி மகிழ விரும்பும் வள்ளலார், பன்னெடுங்காலமாக
அடியேன் உன் திருவருளை வேண்டி முறையிடுகின்றேன்; அருள் புரிதற்கு நீ காலதாமதம் செய்கின்றாய்;
நீ விரைந்து வருவதற்கு உன்னிடம் வெள்ளெருதாகிய விடை இருக்கிறதே; அஃது அங்கே இல்லையா? பலே்வறு
படை களை
உடையனாக இருக்கின்றாய்; என்னைச் சூழ்ந்து வருத்தும் துயராகிய பகையைப் போக்க உன்னிடம்
படைக்கலம் ஒன்றும் இல்லையா? எனக்காகப் பரிந்து பேச என் தாயாகிய உமாதேவி பங்கில்
இருக்கின்றாள்; அவள் இப்போது இல்லையா? உனக்கே உரிமையான செயல் அருள் வழங்கும் கொடைத்தன்மை;
அச் செயல்தானும் இப்போது நின்று விட்டதா? னுன்ன காரணத்தால் நீ எனக்கு அருள் வழங்கத் தாமதம்
செய்கின்றாய் என வேண்டுகின்றார்.
2234. விடையிலை யோஅதன் மேலேறி
என்முன் விரைந்துவரப்
படையிலை யோதுயர் எல்லாம்
துணிக்கப் பதங்கொளருட்
கொடையிலை யோஎன் குறைதீர
நல்கக் குலவும் என்தாய்
புடையிலை யோஎன் தனக்காகப்
பேசஎம் புண்ணியனே.
உரை: என்முன் விரைந்து வர விடையில்லையா? என் துயரைத் துணிக்கப் படையில்லையா? என் குறையைத் தீர்க்க நின்பால் அருட் கொடையில்லையா? எனக்காகப் பருந்து பேச என் தாய் நின்பங்கில் இல்லையா? புண்ணியப் பொருளாகிய எங்கள் பெருமானே, ஏன் தாமதம்? விரைந்தருள்க எ. று.
வேண்டி நிற்கும் தமது முன்புவரத் தாழ்வதற்குக் காரணம் ஊர்தியில்லாமையாகலாம் என்றற்கு “விடையிலையோ அதன்மேலேறி என்முன் விரைந்து வர” எனக் கேட்கின்றார். வரத் தாழ்ப்பினும் வரவு நோக்கித் துன்பத்தால் வருந்தும் தமது உயிரை இருந்தவிடத்திலிருந்தே தீர்க்கவல்ல பெருமான் என்பதையும், அவற்றைப் போக்குதற்குரிய படைகள் பலவுடையன் என்பதையும் எண்ணிக் கூறுதலின், “படையிலையோ துயரெல்லாம் துணிக்க” என்று சொல்லுகின்றார். அருள் செய்பவர் காலம் நோக்குவர்; எக்காலத்து எவ்வகை அருள் வேண்டப்படுவது என அறிந்து செய்வது அருளாளர் இயல்பாதலின், அவ்வியல்பு புலப்பட, “பதங்கொள் அருட்கொடையிலையோ” என முறையிடுகின்றார். துன்பத்தால் சுடப்பட்டுத் துயருறும் இக்காலத்தே நீ அருளல் வேண்டும்; அருளும் காலம் நோக்கிச் செய்யப்படுவதாயிற்றே என்ற கருத்தெல்லாம் விளங்கவே வள்ளலார், “பதங்கொள் அருட்கொடை” எனச் சிறப்பித் துரைக்கின்றார். அடியார்க்குற்ற குறைகளையறிந்து தீர்க்கும் தாய்மைப் பண்பின் உருவாய் அமைந்த உமையம்மையை வள்ளலார் நினைந்தருளுகிறார். அவ்வம்மையின் கொடைமாண்பு நினைவுக்கு வரவும், குறை தீர நல்கற்கு இன்றியமையாத தாய்மை நலமே விளங்க நிற்கும் அம்மைபால் தமக்குண்டாய அன்பினையும் புலப்படுத்தி, “குறை தீர நல்கக் குலவும் என் தாய்” என்று மொழிகின்றார். இறைவனைப் பிரியாது இடப்பால் உறையும் உமையம்மையை நினைப்பவர், அரசுக்கு நல்ல அருளமைச்சர்போல் சிவனுக்கு உயிர்களின் பொருட்டு ஆவனவுரைத்து அருள் புரியத் தூண்டும் அன்னையாய அம்மையை எடுத்துப் பேசுகின்றார். யோக மூர்த்தியாய் இருக்கும் இறைவனைத் தூண்டி என்போலும் உயிர்கட்கு வேண்டுவன அறிந்துரைக்கும் அம்மையின் அருணிலையை “என் தனக்காகப் பேச என் தாய் புடையிலையோ” எனப் புகல்கின்றார். மக்கள் செய்யும் புண்ணியத்தின் பொருளாய் இருப்பவன் சிவன்; அதனால் “புண்ணியனே” என உரைக்கின்றார். புண்ணியம் செய்வார் அடையும் பயன்கள் யாவையோ அவையிற்றையே உருவாகக் கொண்டு போந்து அருளுதல்பற்றிப் “புண்ணியன்” என்பது வழக்கு. பிறத்தல், இறத்தல் புணர்தல், பிரிதல் முதலிய செயல் இல்லாத புண்ணியன் என்பர் மணிவாசகர். “போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியன்” என அவர் கூறுவதுபற்றி, “எம் புண்ணியன்” என உரைக்கின்றார்.
இதனால், விடையாகிய ஊர்தி கொண்டும், உற்றதுரைத்து ஊக்கற்கு உமாதேவியிருப்பவும், புண்ணியப் பொருளாகிய நீ அருளற்குக் காலம் தாழ்த்தல் கூடாது என முறையிடுவது பயனாம் என்க. (64)
|