65
65. பன்னாளும் பன்முறையும்
இறைவனைத் தாம் வேண்டிக் கொண்டிருக்கவும், அவனது திருவருள் எய்தாமை வள்ளற் பெருமானை
வருத்துகிறது. தக்கன் சாபத்தால் தேய்ந்து சிறுத்த பிறைத்திங்கள் பால் அருள்செய்ததை நினைப்பிக்கும்
வகையில் முடியில் பிறையிருக்கிறது; உலகினைக் காத்தற்பொருட்டுக் கங்கையை முடியில் அடக்கிய
பெருமை மறவாதிருக்க அங்கே கங்கையாறுளது; தேவர்கட்கு அருளும் பொருட்டு நஞ்சுண்டு கண்டம் கருத்தமை
மாறாதிருக்கிறது என்று குறிக்கின்றார். இத்தகைய நலங்களை ஒழியாது உடையனாகியும் பெருமானாகிய
அவன் தமக்கு அருளாதொழிவது பொருந்தாது எனப் புகல்கின்றார்.
2235. நறையுள தேமலர்க் கொன்றைகொண்
டாடிய நற்சடைமேல்
பிறையுள தேகங்கைப் பெண்ணுள
தேபிறங் குங்கழுத்தில்
கறையுள தேஅருள் எங்குள
தேஇக் கடையவனேன்
குறையுள தேஎன் றரற்றவும்
சற்றுங் குறித்திலதே.
உரை: கடையவனாகிய யான் என் குறைகளைச் சொல்லிப் பன்னாள் பன்முறை அரற்றியும் நின் திருவுள்ளம் அருள்புரியச் சிறிதும் குறித்திலது; நினது பெருகிய அருள்நலத்தை விளக்குதற்கு நின் சடை மேல் பிறைத்திங்கள் உளது; கங்கையாளாகிய பெண்ணும் இருக்கின்றனள்; நின் கழுத்தில் விடமுண்டு கருத்த கறை யுயர்வாகத் தோன்றுகிறது; கடையவனாகிய யான் குறைமிகுந்து வருத்துகிறது என்று பன்முறை முறையிட்டுப் புலம்பவும் நின் திருவுள்ளத்தில் அருட்குறிப்பு இன்னும் தோன்றவில்லையே; அது எங்கே யுளது? எ.று.
நறையுள தேமலர் - தேன் பொருந்திய இனிய பூ. கொன்றைப் பூவிற்குச் சிறப்புத் தரும் வகையில், “நறையுள தேமலர்க் கொன்றை” என உரைக்கின்றார். பொன்னிறக் கொன்றை மலர் சூடும் பொற்புக் குறித்து இவ்வாறு புகழ்கின்றார். கொன்றையணிந்த சடைமேல் பிறையுளது என்றது, சாபக்கேட்டால் தேய்வுற்ற பிறை மேலும் தேயாமைப்
பொருட்டு அருளிய சிறப்பு நன்கு புலப்பட “நற்சடைமேல் பிறையுளதே” என நவில்கின்றார். மேலும் தேய்ந்து கெடாவாறு பிறைக்கு அருள் புரிவதுபற்றிச் சடையை “நற்சடை” எனப் புகழ்கின்றார். மண்ணகத்தை அழிப்பேனெனப் பெருகிப் போந்த கங்கையாற்றின் செருக்கு அடங்கி, ஒடுக்கமும் அமைதியும் பொருந்தி வாயடங்கியிருத்தல்பற்றிக் “கங்கைப் பெண்ணுளது” என்று இயம்புகிறார். “கங்கையாளேல் வாய் திறவாள்” என நம்பியாரூரர் உரைக்கின்றார். 'கழுத்தில் பிறங்கும் கறையுளது' என மாறுக. கறை, விடமுண்டதனால் உண்டான வடு. அதனால் சிவனது பெருமை யுயர்ந்தமைபற்றி, “பிறங்கும் கறை” எனப் பேசுவது இயற்கையாயிற்று. எளியேன்பால் குறைமிகுந்து வருத்துகிறது எனப் பன்முறையும் இரந்து கூறவும் மனம் இரங்குகின்றிலை என்றற்குக் “குறையுளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே” எனக் கூறுகின்றார். பிறைக்கும் கங்கைப் பெருக்குக்கும் பெருகிவிளங்கிய திருவருள் எல்லா உயிர்க்கும் உடையவனாகிய எனக்கு இல்லாமல் எங்கே சென்றது என்பார், “அருள் எங்குளது?” என வேண்டுகின்றார்.
இதனால், பிரியாத பேரருள் பிரிந்ததுபோலக் கண்மாறியிருப்பது முறையன்று என இறைவன்பால் முறையிடுவது பயனாம். (65)
|