66
66.
இதுகாறும் குடும்பவாழ்வின் துயர்நிலையை முறையிட்ட வடலூர் வள்ளல் உலக வாழ்க்கையின் புன்மையைப்
புகன்றுரைக்கின்றார். குடும்பவாழ்வு கணவன் மனைவியென்ற இருவரால் உருவாகி மக்கட்பேற்றால் நிரம்பி
அதற்கு வேண்டுவன தேடுவதும் வேண்டாதன விலக்குவதுமாகிய இருவினைகளால் இயங்குவது; இக் குடும்பம்
ஏனைக் குடும்பத்தவரோடு கூடி இயலுவது உலக வாழ்க்கை. இங்கே உலகமென்பது மக்களினம்; இந்நாளில்
இதனைச் சமுதாய வாழ்வு என்பர். பல குடும்பங்கள் சேர்ந்தது சமுதாயம். இச் சமுதாயத்துக்கு உறுப்பாகிய
குடும்பங்கள் தலைவர்களாகிய கணவனும் மனைவியும் ஆணிவேராவர், அவ்விருவரும் முற்றவுணரும்
நலமுடையவரல்லர்; குணமும் குற்றமும் கலந்தவர்; குணமே உருவானவரும் குற்றமே உருவாக அமைந்தவரும்
உலகத்தில் இலர். அதனால்தான் திருவள்ளுவர் ஒருவரோடு நட்புறவு கொள்ளும்போது, அவருடைய குணமும்
குற்றமும் ஆராய்தல் வேண்டும் என்று அறிவுறுத்திக் குணம் மிக்கிருக்கும் அவரைக் கொள்க என்று
ஆணையிடுகின்றவராகக் “குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” என்று
கூறுகிறார். கற்றவர் கல்லாதவர் என மக்கள் இருத்தலால், கல்லாதவரை ஆராய்வது முறை, கற்றவரை
ஆராய்வது பொருந்துமா என்ற கேள்வி எழக் கண்ட திருவள்ளுவர், மிகப்பெரிய கல்வியுடையவரும் மக்களினத்தவராதலால்
அவர்பாலும் குற்றமுண்டாதற்குரிய அறிவுக்குறைவு உண்டு என்பாராய், “அரிய கற்று ஆசற்றார் கண்ணும்
இன்மை அரிதே வெளிறு” என்று கூறியருளினார். இதனால் மக்களாய்ப் பிறந்தவர் அனைவரிடத்தும்
குற்றம் உண்டு; அதற்குக் காரணம் அவர்பால் முற்றுணர்வில்லாமை; அவர்கள் சிற்றறிவினர்; எல்லாவுலகிற்கும்
எல்லாவுயிர்கட்கும் முதல்வனும் தலைவனுமாகிய இறைவன் ஒருவனே முற்றுணர்வுடைய முழுமுதல்; முழுதும் குணமேயாக
இருப்பவன். குணம் இன்பத்துக்கும், குற்றம் துன்பத்துக்கும் காரணம், குணமே வடிவானவனாதலால்
இறைவன் இன்பமேயாக இருக்கின்றான். நாம் குணமும் குற்றமும் விரவியிருத்தலால் இன்பமும் துன்பமும்
உடையவர்களாக இருக்கின்றோம்.
எனினும், நாம் அக் குற்றத்தைப்
போக்கிக் கொள்வோமாயின் குணவடிவுற்று இன்பவாழ்வு பெறலாம். குணம் பொருளைவிட்டு நீங்காது;
குற்றம் அறிவின் குறைபாடு காரணமாகத் தோன்றுவது; அறிவு நிறையும்போது குற்றம் நீங்கிவிடும்.
அறிவு குறைபாடு எய்தியது எங்ஙனமெனில், உயிரின்பால் படிந்துள்ள மலம் மறைத்தலால் என்று நம்மவர்
கூறுவர்; மேனாட்டவர் பெருஞ்சூறையால் எழும் தூளிப்படலம் ஞாயிற்றொளியை மறைப்பது போலும் ஒரு
வகை மறைப்பு (Cloud of
unknowing) என்பர். (Grey-Eminance
of Aldous Huxley) ஏன்? நம்முடைய
பட்டினத்தடிகள் “மாயப்படலம்” என்று கூறுகின்றாரன்றோ? இவ்வாற்றால் குற்றமுடைய மக்களால் இயன்ற
சமுதாய வாழ்வும் குற்றமுடையதாய்த் துன்பம் தரும் இயல்பினது என்று உணரலாம்.
மக்கள் இயல்பிலேயே குறையறிவுடையராய் (Imbecile)
இருப்பது ஒருபுறம் இருக்க, அவர்க்கு அமைந்த உடம்போ “மாய இயந்திரம்” எனப்படுவது. அவ்வுடம்புக்கும்
உயிர்க்கும் வேறாய் இடைநின்று நினைத்தல், பேசுதல், செய்தல் என்ற மூவகை வினைகளைச் செய்வதும்
செய்விப்பதுமாகிய கருவி ஒன்று உண்டு. அதனை ‘மனம்’ என்பர். இளமையில் உடம்பின்வழி நின்று
உயிருணர்வை வளர்ப்பதும், முதுமையில் உயிர் வழி நின்று உடலுணர்ச்சிகளை அடக்கியாள்வதும் அதன்
பொதுத் தொழில். இத் தொழிலை உடம்பின் அறிகருவி செயற்கருவி என்பவற்றோடு அகத்தே கலந்தும்
கலவாமல் தனித்தும் செயற்படுவதும், உடம்பின் புறத்தேயுள்ள பொருள்களைக் கண்டும் கேட்டும் உண்டும்
உயிர்த்தும், பின்பு தனித்திருந்து காணப்பட்டனவும் கேட்கப்பட்டனவுமாகிய அனைத்தையும்
அருவுருவாக்கி நினைத்தும் மறந்தும் கூட்டியும் கழித்தும் வகுத்தும் பெருக்கியும் செயற்படுவதும் அதன்
சிறப்புத்தொழில். மேலும் இவை செயற்படும் இடங்கள் அகத்திற் பதினான்கும் (அறி கருவி ஐந்து,
செய்கருவி ஐந்து, மனத்தின் உட்கூறு நான்கு), புறத்தே உருவும் அருவுமாகிய உலகப்பொருள் அனைத்துமாகும்.
இதனால் மனம் ஓரிடத்தும் நில்லாமல் சுழன்றவண்ணம் இருக்கிறது. ஞாயிற்றின் ஒளியை மேகக் கூட்டம்
போந்து மறைப்பதும் நீங்குவதும்போல, மலவிருளாகிய மாயப் படலம் மறைத்தலும் நீங்கலும் செய்யும்.
மறைப்புண்ணும்போது குற்றம் பிறந்தது துன்பத்துக்கு ஏதுவாகிறது. இதனால் மக்களுடைய தனித்த குடும்ப
வாழ்வும், தொக்குள்ள சமுதாய வாழ்வும் துன்பம் விளைவிக்கும் இயல்பின என்பது இனிது விளங்கும்.
இங்ஙனம் குடும்பமாயும் சமுதாயமாயும் வாழும் மக்கட்கு உடலுழைப்பின்றி வாழ்வில்லை. உடலுழைப்பு
ஐந்துவகையில் நடை பெறுவது; இருந்து உழைத்தல், நின்றுழைத்தல், கிடந்து உழைத்தல், நடந்து உழைத்தல்,
ஓடியுழைத்தல் என்பனவாம், இவற்றால் உடம்பு வருந்துவது இயல்பு. வருத்தம் பாராது உழைப்பவரும்,
பார்த்து உழைப்பை வெறுப்பவரும் உண்டு. உழைப்பவர் வேண்டுவன பெற்று இன்புறுகின்றனர். உழைப்பை
வெறுப்பவர் துன்புறுகின்றனர்; பிறர்க்கும் சுமையாய்த் துன்பம் தருகின்றனர். இவ்வகையில் சமுதாய
வாழ்வு துன்ப நிலையமாகிறது.
இச் சமுதாயச் சூழ்நிலையை வடலூர் வள்ளலார் விரிவாக எண்ணுகின்றார். மக்களின் மனத்தெழும்
எண்ணங்களை நோக்குகின்றார்; தொகுத்தும் வகுத்தும் நோக்குகையில் அவை ஆசையும் அது நிறைவுறாமையாற்
பிறர்க்கும் வெகுளியும், இரண்டாலும் உண்டாகும் மயக்கமும் என்னும் மூன்றனுள் அடங்குகின்றன.
ஆசையோ பொருள் புகழ் என்ற இரண்டின் அடிப்படையில் எழுகிறது. இவற்றிடையே சுழலும் மனம் ஒரு நெறியிலன்றிப்
பல்லாயிர நெறிகளிற் படர்கின்றது; படருமிடத்து ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றித் தாவித்தாவிச்
செல்கிறது. ஓரிடத்தே தனித்திருந்து ஒன்றை நினைக்கலுறின், சிறிது போதில் நினைக்கலுற்றதைவிட்டு
எங்கேயோ எப்பொருளுக்கோ சென்றுவிடுகிறது. முடிவில் அயர்ச்சியும் அவலமும் அழுங்கலும் பயந்து,
துன்பநிலையிற் செலுத்துகிறது. பொய்யும் பொருளல்லதுமாகிய கற்பனையில் ஆழ்ந்து, கவலையும் ஏமாற்றமும்
எய்திக் கையறவுபடுகிறது. மன நிலையை விடுத்துப் புறத்தே அவர்வர் நடத்தும் வாழ்வை நோக்கினால்
இச் சமுதாய வாழ்வு எங்கே கொண்டு நிறுத்துமோ என்ற ஏக்கத்தைத் தருகிறது. உயர்வில் விருப்பமும்
தாழ்வில் வெறுப்பும் கொண்டு, உயர்தற்கு முயறலும், தாழ்வைப் போக்குதற்கு முயறலும் நெறிகளாயிருக்க,
அவற்றை விடுத்து உயர்ந்தார் உயர்வு கண்டு பொறாமை எய்தித் தீங்கு நினைத்தலும், தாழ்ந்தார்
தாழ்வு கண்டு இகழ்ச்சி மேற்கொண்டு மேன்மேலும் அவரைத் தாழ்த்தக் கருதுதலும், இன்புறுவோர் இன்பம்
கண்டு அதற்கு மாறாய துன்பம் சூழ்தலும், துன்புறுவோர் துன்பம் கண்டு உள்ளுள் உவப்பதும் மக்களினத்தின்
நடைமுறையாவது காண்கின்றார். அவருள் வாழ்வு மேற்கொண்டவர் வாழ்க்கைக்கு ஆவன நாடாது அல்லன நாடி
அல்லல் எய்துவதும், தமது ஆற்றலின் எல்லையைப்போல் ஏற்பன எண்ணாது ஏலாதன எண்ணி இடும்பை எய்துவதும்
வள்ளலார் திருவுள்ளத்தை வாட்டி வதைக்கின்றன.
2236. சினத்தாலும் காமத்தி னாலும்என்
தன்னைத் திகைப்பிக்கும்இம்
மனத்தால் உறுந்துயர் போதாமை
என்று மதித்துச்சுற்றும்
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி
னாலும் இளைக்கவைத்தாய்
அனத்தான் புகழும் பதத்தோய்
இதுநின் அருட்கழகே.
உரை: பிரமன் பரவும் திருவடியுடையோய், சினமும் காமமும் ஆகியவற்றால் என்னைத் திகைக்கச் செய்யும் மனம் தரும் துயரங்கள் போதா என்று, சுற்றத்தாரும் இனத்தாரும் வாழ்க்கையிடையுண்டாகும் துன்பங்களும் இடைவிடாது தாக்குதலால் உள்ளம்; இளைக்கின்றேன்; இளைப்பு நீங்கற்கு மருந்து நின் அருளே; அதனைச் செய்க. எ.று.
அனத்தான் - அன்னத்தை ஊர்தியாகவுடைய பிரமன். காமம், வெகுளி, மயக்கம் என்ற நோய் தரும் மூன்றனுள், காமமும் வெகுளியும் தோன்றி மிகுமிடத்துப் பிறந்து அவ்விரண்டின் கூறாதல்பற்றிக் காமம் வெகுளியிரண்டையும் எடுத்தோதுகின்றார். காரணவகையில் உள்ளத்தே எழும் காமமும் வெகுளியும் புறத்தே வெளிப்படும்போது வெகுளி முற்பட்டுத் தோன்றுதல் பற்றிச் சினத்தாலும் காமத்தினாலும் என்று கூறுகின்றார். இவை மனம் இடமாகத் தோன்றி அறிவை மயக்குவன. அதனால் “என்றன்னைத் திகைப்பிக்கும் இம்மனம்” என்று இயம்புகின்றார். சினத்தின் இயல்பை, “உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்கும் சினம்” என்று சிவப்பிரகாச சுவாமிகளும், காமத்தின் இயல்பை “காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா” என்று திருத்தக்கதேவரும் கூறுவர். இங்ஙனம் மனம் அறிவைமயக்கிப் பல்வகைத் துன்பங்களைத் தருவது அகநிகழ்ச்சியாகப், புறத்தே சுற்றத்தாரும் இனத்தாரும் சூழ்ந்து தத்தம் குறைகளைச் சொல்லித் துன்புறுத்துவதும், வாழ்க்கையில் வேண்டுதல் வேண்டாமை தோன்றி நோய் செய்வதும் காண்கின்றார் அடிகளார். மனநோயே போதுமே, சுற்றும் இனமும் வாழ்க்கையும் வேறு புறத்தே நின்று வருத்துவானேன் என்று தமக்குள் வினவுகின்றார். மனம், இனம், வாழ்க்கை ஆகிய மூன்றன் செயற்பாட்டுக்குக் காரணமான முதல் திருவருள் என்று காண்கின்றார். திருவருள் இவற்றைப் படைத்தளித்தது உயிர்கள் இத் துன்பத்தின் நீங்குதற் பொருட்டே என்பது இயற்கையறிவாலும் நூலறிவாலும் உணரப்பட்டது. அத்தகைய நன்னோக்கமுடைய திருவருள் அகம்புறமாகிய இருபாலும் துன்பத்திற் கிடந்து துவள்விப்பது நன்றன்று என எண்ணுகின்றார். திருவருள் இறைவன் கூறாய் அவன் வழிநின்று தொழிற்படுவதாதலால் அவன்பால் முறையிடுவாராய், “இது நின் அருட்கு அழகே” என வினவுகின்றார். அனத்தான் புகழும் பதம் - பிரமன் பரவிப் புகழும் திருவடி. “மறையவன் கனவினும் காணாத பதம், அந்த மறையவன் பரவும் பதம்” எனத் திருவடிப் புகழ்ச்சியில் அடிகளார் அறிவிப்பது காண்க.
இதனால் தனிவாழ்க்கையும் இன (சமுதாய) வாழ்க்கையும் தரும் துன்பங்களை எடுத்தோதித் திருவருளை வேண்டுவது பயன் என அறிக. (66)
|