67
67. பிறர்பாற் சென்று இரந்துண்பது இழிவு என்று பல்லாயிரம்
ஆண்டுகளாகச் சான்றோர் வற்புறுத்தி வருகின்றனர். ஈதல் நன்று, இரப்பது தீது என்பது அறத்தின்
வாயிலாக அறிவுறுத்துவது. இரவாது வாழ்தல் வேண்டின் இனிது உழைத்தல் வேண்டும். உழைத்துண்ணும்
உணவே உயர்ந்த ஊண். உழைப்பவர் உடலை வருத்தல் வேண்டும். உடல் வருந்த உழைப்பவர் உயர்ந்த
ஊதியம் பெற்றால், உண்டியும் உடையும் குறைவின்றிப் பெற்றுப் பிறர்க்கும் உதவும் பெருமை பெறுவர்.
உழைப்புக்கஞ்சிப் பிறர் உழைப்பின் பயனை உண்பவரே இரப்பவர். பிறர் உழைத்துத் தேடிய
பொருளை இரக்கமின்றித் தான் பறித்துண்பது கொடுமையாதலால் இரப்பவரையும் இரத்தல் தொழிலையும்
இழிவாகக் கருதுவது அறநெறி யாயிற்று. தாமே உழைத்துண்ணும் வன்மையும் வாய்ப்பும் இல்லாதவர்
வாழ்தற்கு இயல்பு இலாதவர்; அவ்வியல்பிலாத குருடர், செவிடர், முடவர், முதியவர், மிக்க
இளையவர் ஆகியோர்க்கு, உடையவர் தகுவன கொடுத்து உதவுவது கடப்பாடாகும். இயல்பிலாதவராதலால்
அவர்களை ‘இரவலர்’ என்று கொண்டு ஈவது அறமாகும்; அவர்கட்கு ஏற்பது நெறியாகும். உழைத்துப்
பொருளை ஈட்டவும் காக்கவும் வகுக்கவும் கொடுக்கவும் கூடிய இயல்புடையார்க்கு
இரவலர்க்குப்போல ஈதல் தீதாகும்; அதனை அறமாகச் சிலர் பொய் கூறியதனால் நாட்டில் உழைப்பவர்
தொகை குறைந்தது; உழைப்பாளி யுழைப்பை உறிஞ்சி யுண்ணும் இரவலர் மிகுந்தனர். இயல்பிலாத
இரவலர்க்கு ஈவாரைச் சிறப்பித்தலும் இயல்புடைய இரவலர்க்கு ஈயாரைப் பாராட்டுதலும் அறமாகும்.
ஆனால் இரப்பார் இயல்பு நோக்காது ஈவாரைப் பாராட்டுதலும் ஈயாரை இகழ்தலும் ஆகிய தீமை மக்களிடையே
தோன்றிச் சிறப்பிடம் பெற்ற அறமாக மாறிவிட்டது. இயல்புடையாரை இரத்தலில் ஊக்குவது இரக்கமற்ற
கொடியவரை உண்டாக்குவதாக இருப்பதை அறிவுமையோர் நினைத்தல் வேண்டும். அதனை அவர் நினையா தொழிந்தமைதான்
இரப்பவர் பெருக்கத்துக்கும் ஈவாரை ஆராயாது பழித்தற்கும் காரணமாயிற்று. இயல்புடையார்க்கு ஈதல்
தீது என்பதைச் சிந்தித்துச் செயல்படும் செல்வர் நாட்டில் தோன்றாமல் இல்லை. இயல்புடையார்
இல்லாதார் என்ற வேற்றுமை நோக்காது ஈதல் அறம், ஈயாமை தீது என்ற போலியறம் தோன்றி மக்கள்
மனத்தைக் கெடுத்து, இரப்பவர் இனத்தை வளஞ்செய்து விட்டது. இரப்பவருள்ளும் இயல்புடையவர் இரத்தல்
தீது என்ற கருத்துத் தோன்றியதுண்டு; இரவச்சம் என்பதன் பெயரால் திருவள்ளுவரும் வற்புறுத்தினர்.
ஆயினும், மேற்கூறிய போலியறம் மக்களிடையே வலிய இடம் பெற்றதனால், ஈயாரை இகழ்ந்து ஈதலை
வளர்ப்பது ஒன்றே நிலைபெற்றது. அச் சூழ்நிலையில் வடலூர் வள்ளல் ஈயார் ஈவார் என்ற இரு திறத்தாரையும்
விலக்கி, இறைவன்பால் இரத்தல் ஏற்றது என்று மக்கள் உள்ளத்தை வளைக்கின்றார்.
2237. புல்லள வாயிலும் ஈயார்தம்
வாயில் புகுந்துபுகழ்ச்
சொல்லள வாநின் றிரப்போர்
இரக்கநற் சொன்னங்களைக்
கல்லள வாத்தரு கின்றோர்தம்
பாலுங் கருதிச்சென்றோர்
நெல்லள வாயினும் கேளேன்நின்
பாலன்றி நின்மலனே.
உரை: நின்மலனே, பசித்த ஆவிற்கு ஒரு பிடி புல்லளவும் கொடாரது வாயிலை யடைந்து புகழ்பயக்கும் சொற்களைப் பலபட வுரைத்து இரப்பவர் இரப்பார்களாக; நின்பாலன்றி நல்ல பொற் கட்டிகளை மலைபோலத் தருவோரிடத்தும் ஒன்று பெறக்கருதி அடியேன் சென்று ஒரு நெல்லளவேனும் கேட்க மாட்டேன்; இது என் கருத்து. எ.று.
நின்மலன் - தூயன், மக்களின் மலவிருள் நீங்கித் தூயராயினார் போலாது, இயல்பாகவே மலமில்லாதவன் என்றற்கு இறைவனை நின்மலன் என்பது வழக்கு. புல் எனவே ஈண்டுப் பசித்த ஆ வருவிக்கப் பட்டது. “ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்ததில்” என்றதனால், பசித்த ஆவிற்கு ஒரு பிடி புல்லும் ஈயாதவர் என்பது வருவித்துரைத்தல் வேண்டிற்று. பசுவுக்குப் புல் அளித்தல் புண்ணியம் என்றும், அதனை மறுப்பது பெரும்பாவம் என்றும் நூலோர் கூறுவர். அதுபற்றியே, “புல்லளவாயினும் ஈயார்” என விதந்து கூறுகின்றார். அவர் மனைக்குச் சென்று பல சொல்லிப் பாராட்டும் இரவலரைப் “புகழ்ச்சொல் அளவா நின்று இரப்போர்” என உரைக்கின்றார். சொல் அளாவுதல் - சொற்களையடுக்கிப் பேசுதல். அவர்கள் அது செய்வது பயனில் செயல். அதனை எண்ணி அவர் வாயினின்றும் நீங்கிச் செல்லாது அவர் முன்னே இரந்து நின்று ஈடழிதல் கண்டு பொறாத அடிகளார், இவ்விரவல் அளவிற் கொள்ளாமையின் “இரப்போர் இரக்க” எனவுரைக்கின்றார். சொன்னம் - பொன். கல்லளவாத் தருகின்றோர் - மலைமலையாகத் தருபவர்; விரிந்த மனமுடைய கொடையாளர் என்பது கருத்து. அவர்பாற் செல்லின் விரும்பியது விரும்பியவாறு தடையின்றிப் பெறப்படும் என்பது நினைந்து செல்லும் குறிப்பை, “கருதிச் சென்று” எனக் கூறுகின்றார். ஓர் நெல் - ஒரு தனி நெல். கொடைக்குரிய வள்ளலாக நீ இருப்பது தெளிந்துளேனாதலின் பிறர்பாற்சென்று கேளேன் என்று யாப்புறுத்தற்கு “நின் பாலன்றிக் கேளேன்” என உறுதியுற உரைக்கின்றார். உலகில் கொடுப்பார் அனைவரும் படைத்தளித்த செல்வத்தையே தாம் ஈட்டித் தொகுத்துக் கொடுக்கின்றார்கள்; உண்மை நோக்கின் உடைமை வகை அனைத்தையும் உடையவன் நீ என்று தேர்ந்துளேன்; உடையவனாகிய உன்னை வணங்கிக் கேளாது, நின்பால் பெற்றதனைப் பெற்ற பிறர்பால் இரந்து பெறுவது பெருமைக் குரியதாகாது என்பது கருத்து. அதனால், நின்பாலன்றிப் பிறர் வரையாது வழங்கும் பெருங் கொடையாளாராயினும் அவர்பாற் பெறல் கூடாதெனக் கருதுகின்றேன் என்பது கருத்தாம்.
முன்னோராகிய ஞானசம்பந்தர் முதலியோர் பொருளுடையாரை அடைந்து ஒன்றை வேண்டியதாக வரலாறு இல்லாமை குறிக்கத்தக்கது. (67)
|