68

             68. வடலூர் வள்ளல் மக்கள் மனத்தைத் தமது திருவுள்ளத்தை கண்ணாகக் கொண்டு காண்கின்றார். அளவுகாண வொண்ணாதபடி குறைகள் நிறைந்துள்ளன. உண்ணும் உணவுக்கும் இருக்கும் இடத்துக்கும் குறை நேருமாயின் ஆளும் அரசின்பால் முறையிடுவது மரபு. மன நினைவில் நிறைந்து நிற்கும் குறைகளை நீக்குதற்கு இறைவன் ஒருவனே தகுதியுடையனாவன். அவனையன்றி மக்கள் மனத்தைக் காண வல்லவர் பிறர் எவரும் இலர். மனக்குறையைப் போக்கற்கென்றே அப் பெருமான் அவரவர் உயிருடன் உடனாய் இருக்கின்றான். அவனை வேறே புறத்தில் உருவத்தில் வைத்து நினைந்தும் கண்டும் வழிபடற்கென்றே திருக்கோயில்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இந்நாளைய வழிபாட்டமைப்பும் கோயில்களும் பயன்படாவகையில் இயலுகிறது. கோயிற்குச் சென்று இறைவனை வழிபடச் செல்லுங்கால், அங்கே மீன் குட்டத்தில் சென்று திரியும் மீன்கூட்டம்போலப் பட்டர்கள் இறைவன் திருவுருவின் எதிரே முன்னும் பின்னுமாக இயங்கியவண்ணமிருத்தலால், வழிபடுவோர், இறைவனைக் காண்டற்கு மாறாப் பட்டர்களின் முதுகையே கண்டு திரும்புகின்றனர். இவ்வாற்றால் மனவமைதி பெறாதார் இறைவனை வாயாரப் பாடி மகிழ்கின்றனர்; இறைவனைக் கண்டு மனக்குறை தீரவருபவர், தீராக்குறையுடையராய்ச் சிந்தை நொந்து திரும்புகின்றார்கள். இவ்வாற்றால் குறைகளை வெளியிட்டு ஆறுதல் பெறற்குரிய இடங்களாகிய கோயில்களும் மனக்குறை மிகுதற்கே உதவுவனவாக இருக்கின்றன. 

      இனி, மனத்தில் நிறையும் குறைகளைக் காண்போமாயின், அவை நாளும் பெருகியவண்ணம் இருக்கின்றன. இனிய பல காட்சிகளைப் பெறுகின்ற கண்கள் அவற்றுள் பெறுவனவற்றைப் பெறற்கு ஆசையைத் தோற்றுவிக்கின்றன; இனிய சொற்களையும் இசைகளையும் கேட்கின்ற காது அது வழியாக ஆசை விளைவிக்கிறது. இவ்வாறே மூக்கு முதலிய கருவிகள் ஆசை மிகுவித்து மனத்தை அலைக்கின்றன. ஆசைபற்றி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முழுவெற்றி பெற்றாலன்றி மனம் நிறைவுறாது குறையுடையதாகிறது. உலகியலில் மாற்றம் விளைவிக்கும் புதுமைகள் வேறு புதியபுதிய ஆசைகளை எழுப்பி மனத்தைக் குறைபடுத்துகின்றன. இங்ஙனம் வாழ்வை நினைக்கும்போதெல்லாம், அதனிடையில் நம்மை நினைக்குந்தோறும் குறைகளே தோன்றித் துன்பம் செய்கின்றன. இதற்குக் கழுவாயுண்டா எனக் கவல்கின்ற வள்ளற் பெருமான் சிவபரம்பொருளை நாடி முறையிடுகின்றார்.

2238.

     பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி
          யேஎம் பெருஞ்செல்வமே
     கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக
          மேநுதற் கட்கரும்பே
     மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி
          யேஎன் மனமுழுதும்
     குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன்
          அகற்றக் குறித்தருளே.

உரை:

     வேணி முடிக்கனியே, பெருஞ்செல்வமே, கற்பகமே, நுதற்கண் கரும்பே, மாமணியே, என் மனம் முழுதும் குறையே சூழ்ந்து கொண்டமையின், செய்வதும் அறியாது திகைக்கின்றேன்; விரைந்து குறைகளை அகற்றியருளத் திருவுள்ளம் கொண்டருள்க எ.று.

     வேணி - சடை. அதன்கண் பிறை முடிக்கப்படுதல் பற்றிப் “பிறை சூழ்ந்த வேணி” என்கிறார். கனிபோல் இனித்தல் தோன்றக் “கனி” எனக் குறிக்கின்றார். ஈசன் என்ற பெயரே செல்வமுடையன் என்னும் பொருளது; செல்வம் வேறு அவன் வேறன்று; அவனே எல்லாச் செல்வமுமாவன் என்றற்கு “என் பெருஞ்செல்வமே” எனப் பேசுகின்றார். கறை - நஞ்சுண்டதால் உண்டான அடையாளம். பொன்போற் சிவந்து ஒளிரும் திருமேனியில் நஞ்சிருக்கும் கழுத்துக் கருமை நிறம் பெற்று கறை (அழுக்கு) உற்றது போறலின், “கறைசூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே” எனக் கனிந்துரைக்கின்றார். கண்டம் - கழுத்து. கற்பகம் - தன்னை அடைந்தவர் விரும்பியது வருவித்தளிக்கும் வரனுலகத்திலுள்ள ஒருவகை மரம். அதுபோலத் தன் தாளையடைந்தார் வேண்டுவன யாவும் வழங்கும் சிவபெருமானுடைய வள்ளன்மையைப் புலப்படுத்த வேண்டிக் “கற்பகமே” எனக் கூறுகின்றார். கரும்பின் கணு 'கண்' எனப்படுவதுபற்றிக் “கட்கரும்பே” என்றும், சிவனுக்கு நெற்றியிற் கண்ணிருத்தலால் “நுதற் கண் கரும்பே” எனவும் நுவல்கின்றார். நுதல் - நெற்றி; கூத்தப் பெருமான் திருநடம்புரியும் மன்றத்து வேதங்கள் சூழ்ந்து “ஐயா என” அரற்றிய வண்ணமிருக்கின்றன என்பவாகலின், “மறை சூழ்ந்த மன்று” எனச் சிறப்பிக்கப்படுகிறது. பெருமானுடைய செம்மேனி, பொன்னாலியன்ற மன்றின்கண் ஒளிமிகக் கடைந்த செம்மணிபோலத் திகழ்வது விளங்க “மன்று ஒளிர் மாமணியே” என வழங்குகிறார்.

     இங்ஙனம், கனியே, செல்வமே, கற்பகமே, கரும்பே, மணியே எனக் கேட்டற்கும் சொல்லுதற்கும் இன்பம் பயக்கும் பொருள்களையே எடுத்துக் கூறுவது, இவற்றால் எல்லாம் குறைமிகுந்து வருந்துமாற்றைக் அடுக்கிக் குறிப்பதாகும்.

     குறை நிறைந்த மனம் உயர்ந்த எண்ணங்களால் ஓங்குவதின்றிக் கூம்பி நிலைகுலைவதற் கஞ்சி, “என் மனமுழுதும் குறை சூழ்ந்து கொண்டது” எனக் கூறுகின்றார்.

     மனத்தில் நிறையும் குறைகளால் விளையும் தீங்கு நினைந்து முறையிடுவது இப்பாட்டின் பயனாதல் இதனால் அறிக.

     (68)