69

       69. திருவருளின் நலத்தையும் அதனைப் பெறாது வருந்தும் நிலைமையையும் எண்ணுகின்றார் வள்ளற்பெருமான். ஞான மயமாகத் திகழும் திருவருளைப் பெற்று இன்பம் நுகர்வதென்பது ஞானவளர்ச்சியும் கருவி கரணங்களைத் தம்வயம் நிறுத்தி ஆளும் ஆண்மையும் உடையார்க்கல்லது கைவராது என்பதை உணர்கின்றார். வாழ்வின்கண் உயிர்களை நிறுத்தி அதன் வாயிலாக உண்மையறிவு பெறுவிப்பதும், உலகியல் நெறியில் ஆழ்ந்து செல்லும் கருவி கரணங்களை மாற்றிச் சிவநெறிக்கட் செலுத்திச் சிவயோக போகங்களை உணர்வித்துத் திருவருளின்பத்தை நுகர்விப்பதும் திருவருளே எனக்காண்கின்றார். தத்துவ சுத்தியும் ஆன்மசுத்தியும் பெற்றார்க்கல்லது திருவருட் போக நுகர்ச்சி கைகூடாது. அது தனக்கு இல்லாமையை நினைக்கின்ற வள்ளலார் கண்கட்டிக்கொண்டு தெருவில் விளையாடும் சிறுபருவத்தான் ஒருவன் பருவம் எய்திய பெண்ணை மணந்து இன்புற நினைப்பதுபோலும் சிறுசெயலாக இருக்கின்றதென வருந்துகிறார். அருட்செல்வம் எய்தாமையால் தமது நெஞ்சம் வருந்துவதையும், தெளிவு பெறமாட்டாமையால் அது தானே வலிகுன்றி மெலிவதையும் எடுத்துரைக்கின்றார்.

2239.

     கண்கட்டி ஆடும் பருவத்தி
          லேமுலை கண்டஒரு
     பெண்கட்டி யாள நினைக்கின்ற
          ஓர்சிறு பிள்ளையைப்போல்
     எண்கட்டி யானுன் அருள்விழைந்
          தேன்சிவ னேஎன்நெஞ்சம்
     புண்கட்டி யாய்அலைக் கின்றதுமண்
          கட்டி போலுதிர்ந்தே.

உரை:

     சிவனே, கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடும் சிறு பருவப் பையன் முலையெழுந்த பெதும்பைப் பருவப் பெண்ணை மனைவியாக மணந்து இன்புற நினைப்பதுபோல், என் மனத்தை ஒருவழி நிற்குமாறு பிணித்து, உன் திருவருள் இன்பத்தை நுகர விழைகின்றேன்; அருள் நுகர்ச்சிக்குரிய தகுதியில்லாமையின், எனது நெஞ்சம் புண்கட்டியாய் வருந்துகிறது; அதே நிலையில் மண்கட்டி தானே உதிர்ந்து கெடுவது போலத் தன் வலியிழந்து மெலிகிறது. எ.று.

     சிறு துணியால் கண்களைக் கட்டிக் கொண்டு விளையாடுவது சிறுபிள்ளைகளின் விளையாட்டு. அது காமஞ்சாலா இளமைப் பருவம்; அதுபற்றியே, “கண்கட்டியாடும் பருவம்” என்று விளக்குகிறார். முலைகண்ட பெண் - முலையெழுந்து காமம் கனிந்து நிற்கும் இளம்பெண். இறைவன் திருவருள் ஞானமும் இன்பமும் வடிவாய்க் கனிந்து பக்குவமுற்ற ஆன்மாக்கட்கு இன்பம் சுரந்தளிக்கும் ஏற்றமுடையது. கண்ணைக் கட்டிக் கொண்டு இருளில் உலவிவிளையாடும் பேதைச் சிறுவனைப்போல யான் ஞானவொளி நிலவாத பிள்ளைமையிருளில் இருந்துகொண்டு சிவஞானப் பேரின்ப வடிவான திருவருளை அடைந்து இன்புறுகின்றேன்; இஃது எனது அறியாமை என்றற்கு, “கண்கட்டியாடும் பருவத்திலே முலைகண்ட ஒரு பெண் கட்டியாள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையைப் போல்” என விளங்க வுரைக்கின்றார். தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி என்ற ஆறும் கடந்து திருவருளால் சிவரூப சிவதரிசனம் பெறும் தகுதி பெற்ற காலத்தில் திருவருளைக் கூடி இன்புறும் தகுதியுண்டாகும். சிறுவன் பெண் கட்டியாள நினைப்பதுபோல யான் என் நெஞ்சினைக் கட்டி அருளின்பம் பெற விழைந்தேன் என்பது விளங்க, “என் கட்டியான் உன் அருள் விழைந்தேன்” என்றும், விழைவின் அருமை புலப்பட 'சிவனே' என்றும் உரைக்கின்றார். தன் தகுதிக்கு ஒவ்வாத செயலை மேற் கொண்டதனால் நெஞ்சு புண்ணுற்றேன் என்றற்கு “என்நெஞ்சம் புண்கட்டியாய் அலைக்கின்றது” என்கிறார்; நெஞ்சம் இவ்வாறு தம்மை அலைப்பதோடு தாமும் வேறு செயல்வகையின்றி வருத்தம் மிகக் கட்டுக் குலைந்து பொடியாய்க் கெடுமாறு தோன்ற “மண்கட்டிபோல் உதிர்ந்து என்னை அலைக்கின்றது” என்று அவலிக்கின்றார்.

     இதனால், தாம் திருவருளின்பம் பெறற்கியலாமைக்குக் காரணம் தம்மால் அதனைப் பெற்று நுகரும் தகுதிப்பாடு இல்லையென உணர்ந்து அதற்காக வள்ளலார் வருந்தும் திறம் காணப்படுகிறது.

     (69)