70
70. கண்டது கண்டாங்குரைத்தல் மெய்ம்மை யெனவும், உள்ளதன்
உண்மை கூறல் உண்மை யெனவும், யாதொன்றும் தீமையிலாதன சொல்லுதல் வாய்மை எனவும் கூறுவது தமிழ்ச்சான்றோர்
தனிப்பண்பு. கணந்தோறும் மாறுவது உலகியற் பொருள்கட்கும் நிகழ்ச்சிகட்கும் இயல்பாதலால்,
அவற்றைக் கண்ட பொழுதினும் உரைக்கும்போது பொருளும் நிகழ்ச்சிகளும் மாறிப் பொய்ப்படுவதுண்டு.
பொருள்களையும் அவற்றின் வினைநிகழ்ச்சிகளையும் கண்டுரைக்கும் கண் காது முதலிய கருவிகள் இவ்வாற்றால்
குற்றப்படுகின்றன. அவற்றைச் சார்ந்து இயங்கும் நெஞ்சமும் பொய்பட்டுத் துயர்க்குள்ளாகிறது.
இப் பொய்ம்மை மெய்ம்மைகளை நெஞ்சு களனாக அறிவு கருவியாக ஆராய்ந்த திருவள்ளுவர், சலியா
மாற்றத்தால் நிலைவேறுபடும் பொருள்களால் உண்மைக்கும் மெய்ம்மைக்கும் மாறாய்ப் பொய்ம்மை
பிறத்தற்கு இடமின்மை காண்கிறார். பொய்ம்மையும் புரைதீர்ந்த நன்மை பயப்பதாயின் வாய்மைக்கண்
அடங்கும் என அமைதி கண்டார். பொய்யும் மெய்யும் மிடைந்தது உலகம்; இரண்டினையும் கண்டு
பொய்யினின்று அகல்வதே அறிவுடையோர் செய்யத்தகுவது என்ற கருத்துத் தோன்றப் “பொய் கண்டகல்க;
மெய் கண்டு மேற்கொள்க” எனச் சான்றோர் அறிவுறுத்துவாராயினர். புரை தீர்ந்த நன்மை பயப்பது
நோக்குங்கால் மெய்கண்டு கொள்ளுதல் நிகழ்தலின் பொய்மையும் வாய்மையாவது வற்புறுத்திய வள்ளுவனார்,
பொய்க் காட்சிகளாலும் மாற்றங்களாலும் மாசுபடும் நெஞ்சம் வாய்மையால் தூய்மையாம் என்று தெளிந்து,
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந் தூய்மை வாய்மையாற் காணப்படும்” என்று உரைத்தருளினார். காணப்படும்
என்ற சொல், இரு பொருள்படுவதாம். ஒன்று, அகத்தின்கண் அமைந்த தூய்மை வாய்மையால் பலரும் அறிய
வெளிப்படும் என்பது; மற்றொன்று பொய்மை முதலியவற்றால் மாசுற்ற நெஞ்சம் வாய்மை
மொழிகளால் தூய்மையாம் என்பது. இரண்டாவதாகிய பொருள், பொய்யை நீக்கி மெய்யை விடாது பற்றுதற்கு
வாயிலாமென வற்புறுத்தி, பொய்யரும் மெய்யராதற்கு வழி வகுக்கின்றது. இதுகண்டும், மக்கள் நெஞ்சம்
பொய்யே மிகுந்து மாசுபட்டு வருந்துவது வள்ளற்பெருமானுக்கு மனநோய் தருகிறது. இறைவனிடம் முறையிடுகின்றார்:
2240. மெய்விட்ட வஞ்சக நெஞ்சால்
படும்துயர் வெந்நெருப்பில்
நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின்
வாதனை நேரிட்டதால்
பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத்
தையஇப் பொய்யனைநீ
கைவிட் டிடநினை யேல்அருள்
வாய்கரு ணைக்கடலே.
உரை: கருணைக் கடலாகிய பெருமானே, வஞ்சனை பொருந்திய நெஞ்சால் உளதாகும் துயர் என்னும் நெருப்பில் நெய் சொரிந்தது போல, உலகியல் வாழ்க்கை வேதனை தோன்றியுளது; அதனால் பொய்மிக்க எளியேனைக் கைவிடாமல் அருளுதல் வேண்டும். எ.று.
கருணை - அருள்; பெருக்கம் பற்றி அருளே திருவுருவாகவுள்ள சிவ பெருமானைக் “கருணைக் கடலே” என்று கூறுகின்றார். கடல்வகை யாவும் இன்றை விஞ்ஞானத்தின் அளவுக்கு அகப்பட்டு விட்டமையின், இறைவன் கருணையும் அகப்படுமோ எனின், விஞ்ஞானம் பரந்துயர்ந்து அண்டமெல்லாம் விரிந்தும் காணமாட்டாது முயன்றவண்ணம் இருக்கிறது; விஞ்ஞானமும் முடிகின்ற நிலையிற் சிவத்தைக் கண்டு காட்டியே தீரவல்லது என விஞ்ஞான மெய்ம்மை யுணர்ந்தோர் கூறுகின்றார்கள். அதன் வளர்ச்சியும் அக் கருத்துக்கு ஆதரவு தருகிறது. “பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடல்” (தெள்ளே 15) எனச் சான்றோர் உரைத்தலால், வள்ளலார், “கருணைக் கடலே” எனக் கருணையில் தோய்ந்து கூறுகின்றார்.
மெய்யும் பொய்யுமாகிய பொருள் தொழில்களின் இயல்பு கண்டு பொய்யகன்ற பெருமக்கள் சென்று சேருமிடம் சிவன் திருவடி என்பது தெளிந்த வுண்மையாதலால், “பொய்விட்ட நெஞ்சு உறும் பொன்பதத்து ஐய” எனப் புகழ்கின்றார். பொய்ம்மையுடைய உடல் உலகுகளின் நீங்கினோர்க்கு அவற்றிற்கு ஆதாரமாகிய இறைவன் திருவடி கயிறற்ற ஊசற்கு நிலம்போலத் திகழ்வதால், “பொய்விட்ட நெஞ்சு உறும் பொற்பதம்” என்று கூறுகிறார். பொன் அடைந்தார் இன்பப் போகம் எய்துவதுபோலச் சிவபோகம் துய்க்கும் பெருமை சான்ற இடமாம் என்பதுபற்றிப் “பொற்பதம்” எனப் புகல்கின்றார். கணந்தோறும் மாறும் உலகியற் பொருள் வினைகளில் தோய்ந்து, ஒரு கணத்தில் தோன்றிய காட்சி மறுகணத்தில் பொய்படக் கண்டு கண்டு பொய்யே நிறைந்து, நினைவும் சொல்லும் செயலும் பொய்யே யுருவாய் நிற்பதால், மெய்ம்மைக்கு இடமாகாமை விளங்க, நெஞ்சினை “மெய்விட்ட வஞ்சக நெஞ்சு” என்றும், அதனால் விளைவது துன்பம் பயக்கும் துயராக இருப்பது கண்டு, அதனை நெருப்பாக உருவகம் செய்து, “வஞ்சப நெஞ்சால் படும் துயர் வெந்நெருப்பு” எனவும விளம்புகிறார். துயரமாகிய வெவ்வியநெருப்பு என்பது, “துயர் வெந்நெருப்பு” எனப்படுகிறது. நெருப்பே வெம்மையானது; அற்றாக “வெந்நெருப்பு” என இனஞ்சுட்டிய பண்புகொள் பெயராக வுரைப்பது என்னை என்றொரு வினா எழுகிறது. “தண்ணியல் வெம்மையினான்” (நன்னிலம்) என நம்பியாரூரர் கூறியருளுதலால், நெருப்பை வெந்நெருப்பு எனல் பொருந்தும் என அறிக. தன்பாற்பட்ட பொருளை எரித்து நீறாக்கும் இயல்பிற்றாகிய நெருப்பும் நீருட்பட்டவிடத்து அது செய்யமாட்டமையால், அதனை வெந்நெருப்பென்னாது தண்ணெருப்பு என்றாற்போலக் கோடல் நேரிது.
இனி, நெருப்பின்கண் நெய் பெய்த வழி, நெருப்பு மிகுவதுபோல வாழ்க்கையில் தோய்ந்த நெஞ்சில் விழைவு வெறுப்பு என்னும் வேதனைகள் தோன்றி நெஞ்சை வெதுப்புகின்றன. வாழ்க்கை நீ படைத்தளிக்க வந்ததாதலால், என்னை அருளுதல் வேண்டும் என்பாராய், “வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் எனைக் கைவிட்டிட நினையேல்” என முறையிடுகின்றார். இம்முறையீடும் நேரிய முறையில் ஆராய்ந்தவிடத்து நிரம்பாதாகலின் “கைவிட்டிட நினையேல்” என்பதோடு நில்லாமல், “அருள்வாய்” என வேண்டுகின்றார். நிரம்பாமை யாங்ஙனம் எனின், வாழ்க்கையின் நோக்கம் வாழ்வங்கு வாழ்ந்து உய்தி பெறல் வேண்டும் என்பது. “இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு” என மணிவாசகப் பெருமான் தெரிவிக்கின்றார். உயிரோ, வாழ்வாங்கு வாழாமல் வல்வினைப்பட்டு ஆழ்ந்து வேதனைக் குள்ளாகிறது. “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய்” என மணிவாசகர் வற்புறுத்துவது காணலாம். வாதனை - விழைவு வெறுப்பு; வாதனையால் விளைவது வேதனை.
இப் பாட்டால் நெஞ்சுத் வாழ்க்கை வேதனையும் செய்யும் துயர் காட்டி இதனின்றும் உய்திபெற அருள்க என்பது எய்தும் பயன். (70)
|